
பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது பூலோகம். பாக்சிங்கை மையமாகக் கொண்ட கதையம்சமுள்ள படம். இந்தப் படத்திற்கென பிரத்தியேகமாக அதிக உழைப்பைச் செலுத்தியுள்ளார் ஜெயம் ரவி. மதன் என்ற பாக்சரிடம் இரண்டு மாதங்கள் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார் ஜெயம் ரவி. மேலும் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது எடையையும் 15 கிலோ கூட்டி, பூலோகம் படப்பிடிப்பின் பொழுது 90 கிலோ எடையை மெயின்டெயின் செய்துள்ளார்.
“பாக்சிங்கில் லீகலாக 6 பன்ச்சஸ்தான் அனுமதிப்பாங்க. அந்த 6 பன்ச்சை வச்சுக்கிட்டு படம் பண்றது கஷ்டம். ஆனா ஹீரோ எதுக்காக அடிக்கிறான். தங்கச்சிக்காவா, அப்பா அம்மாக்கா அடிக்கிறானா. மக்களுக்காகவா, காசுக்காகவா வெறிக்காவா, பழிவாங்குறதுக்காவா என்பதுதான் இந்தப் படத்தில் முக்கியமான விஷயம். எமோஷன்ஸ்தான் முக்கியமே தவிர படத்தில் பாக்சிங் முக்கியம் கிடையாது. படத்தில் எங்க பாக்சிங் முக்கியம்னா.. ஹீரோக்கு ஒரு மாஸ் உருவாக்கவும், ரியலிஸ்டிக் இமேஜ் தரவும் உதவியிருக்கு.
இந்தப் படத்தில், நாங்க அனைவருமே ஆயிரம் மடங்கு உழைப்பைப் போட்டிருக்கோம். பூலோகம் படத்தில் நானும் ஒரு பார்ட்டாக இருப்பதில் ரொம்ப சந்தோஷப்படுறேன்” என்றார் ஜெயம் ரவி.
இயக்குநர் ஜனநாதனின் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் கல்யாண கிருஷ்ணன். பேராண்மை படத்தின் பொழுதே ரவியும், கல்யாண கிருஷ்ணனும் நண்பர்கள். பெரிய சைஸ் படமாக இருக்கே என ஜெயம் ரவி சொல்ல, தயாரிப்பாளருக்காகக் காத்திருந்துள்ளார் கல்யாண கிருஷ்ணன். தயக்கத்துடன், தயாரிப்பாளர் ஆஸ்கார் ஃப்லிம்ஸ் V.ரவிசந்திரனிடம் கதையைச் சொல்லியுள்ளார் இயக்குநர். அவர் ஆர்வமாக படம் தயாரிக்க சம்மதித்ததுமே தன் படத்திற்கு உயிர் கிடைத்து விட்டதாக மகிழ்ந்துள்ளார் கல்யாண கிருஷ்ணன். தனது முதல் படத்திலேயே, ஹாலிவுட்டில் இருந்து ட்ராய் படப் புகழ் நேதன் ஜோன்ஸ் என்ற நடிகரையும், லார்னெல் ஸ்டோவெல் என்ற ஸ்டன்ட் மாஸ்டரையும் இறக்குமதி செய்துள்ளார். படத்தின் பட்ஜெட் 25 கோடி.
“பூலோகம், என் கேரியரில் ஒரு மிகப் பெரிய மைல் கல். M.குமரான் சன் ஆஃப் மகாலட்சுமிக்குப் பிறகு, நான் மீண்டும் ஜெயம் ரவி சாரோடு சேர்ந்து வொர்க் பண்றேன். அந்தப் படமும் பாக்சிங்க் சம்பந்தப்பட்ட படம்தான். அதே போல, இந்தப் படமும் வெற்றி பெறும் என நம்புறேன்” என்றார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. இவரைப் பற்றிச் சொன்ன ஜெயம் ரவி, “கானா பாடல்களில் தேவா சாரை மிஞ்ச முஇயாதுன்னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா அவர் மகனே தேவா சாரை கானா பாடலில் அடிச்சுட்டார்” எனப் புகழ்ந்தார். இயக்குநருடனே படம் முழுவதும் மூன்று வருடங்கள் பயணித்த பாடலாசிரியர் வித்யா சாகர், “இந்தப் படம் வெளிவந்த பிறகு, சிச்சுவேஷன் சாங்ஸ் படத்துக்கு எவ்ளோ உதவுதுன்னு அனைவரும்னு தெரிஞ்சுப்பாங்க. அதே போல் சினிமாவில், முதல்முறையாக மசானக் கொள்ளை பற்றிய பாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.