Shadow

ஆர்யா தயாரிக்கும் ‘அமர காவியம்’

Amarakaaviyam

வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடிப்பவர் என எல்லோராலும் பாராட்டப்படும் நடிகர் ஆர்யா, அந்தப் பெயரை ஒரு தயாரிப்பாளராகவும் ஈட்ட பெரும் முயற்சி மேற்கொண்டு உள்ளார். தனது பட நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும், ‘அமர காவியம்‘ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. பெரும் வெற்றி பெற்ற ‘நான்’ திரைப்படம் மூலம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ஜீவா ஷங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கும் காதல் கதை இது . ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்கும் ‘அமர காவியம் ‘ படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மியா ஜார்ஜ் .

‘காதல் பற்றிய படங்கள், திரைப்படம் தோன்றிய காலத்தில் இருந்தே வந்த கொண்டேதான் இருக்கிறது. காதல் ஒரு நூல் இழை போல, அதை திறம்பட நெய்து பார்ப்பவரைக் கவரச் செய்வது ஒரு இயக்குனரின் கடமை. ஒவ்வொரு நெசவாளனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதைப் போலவே ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ‘நான் ‘ படத்தில் ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் கதையைச் சொல்லி இருப்பதைப் போல், முற்றிலும் ஒரு புதிய பாணியை இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பில் கையாண்டு இருக்கிறேன்.

நான் பொதுவாகவே கதையை எழுதும் போதே அந்தக் கதைக்கான களத்தில் இருந்தே தட்ப வெப்பத்தையும் உணர்ந்து எழுதுவது வழக்கம். கதைக்களம் கதையின் நாயகன் நாயகிக்கு இணையாக முக்கியம். அதற்காகவே இதுவரை திரையில் கான்பித்திராத இடங்களைத் தேடி எடுத்துப் படப்பிடிப்பு நடத்தினேன். நானே ஒளிப்பதிவாளராக இருப்பது இந்த வகையில் எனக்கு பெரிதளவு உதவுகிறது. விஞ்ஞானத்தைப் போலவோ , மெஞ்ஞானத்தைப் போலவோ அல்ல காதல். நாம் அனுபவித்தது , உணர்ந்தது என வாழ்வில் ஐக்கியமாகிப் போன ஓர் உணர்வு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் உண்டு , ‘அமர காவியம்’ படத்தில் எல்லோருடைய காதலும் இருக்கும்” என்று கூறினார் கதை, திரைக்கதை இயற்றி ஒளிப்பதிவு செய்து இயக்கும் ஜீவா ஷங்கர்.