(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்; டி.எஸ்.பாலையா; எம்.எஸ்.சரோஜினி; டி.ஏ.மதுரம்; எம்.ஆர்.சந்தானலட்சுமி)
1940-களில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வந்த மிகச்சிறந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, ஏவி.எம்., ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்கு நிகராகப் பேசப்பட்ட மற்றொரு சினிமா படத்தயாரிப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து இயங்கி வந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம். ஆரம்பத்தில் இதன் உரிமையாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்பவரும் சேலம் நாராயண அய்யங்கார் என்பவரும் ஆவர்.
இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக சிவகவி (1943), ஜகதலப்பிரதாபன் (1944), கன்னிகா (1947), ஏழைபடும்பாடு (1950), மலைக்கள்ளன் (1954) மற்றும் மரகதம் (1959) போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ஆர்ய மாலா’. இது ஒரு மாபெரும் வெற்றிப்படம். இப்படத்தை இயக்கியவர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.
நாட்டார் தெய்வமாகக் கருதப்படும் ‘காத்தவராயன்’ கதை தான் ஆர்யமாலா திரைப்படம்.
முன்பு ஒருமுறை கணவனான சிவபெருமானை நிந்தித்த பாவம் தீர வழி தேடுகிறார் பார்வதி தேவி. பூலோகத்தில் ஒரு பூந்தோட்டம் அமைத்து தன்னை பூஜை செய்து வந்தால் பாவங்கள் நீங்கும் என சிவபெருமான் கூற, பார்வதி தேவி அருமையான பூந்தோட்டம் ஒன்றை அமைக்கிறார்.
அழகான அப்பூந்தோட்டத்தைப் பாதுகாக்க ஒரு மகனை உருவாக்குகிறார் சிவபெருமான். அப்பிள்ளைதான் காத்தவராயன். இப்பிள்ளையை சிவபெருமானின் மூன்றாவது மகன் என்றும் அழைப்பார்கள்.
தேவலோகத்தைச் சேர்ந்த இளங்கன்னி எனும் ஒரு பெண் தன் தோழிகளுடன் பூலோகம் வருகிறாள். இவள் ஒருநாள் ஆற்றில் குளிக்கையில் அங்கு வந்த காத்தவராயன் அந்தப் பெண்ணின் அழகினால் கவரப்பட்டு, அவளை அடைய ஆசைப்படுகிறான். அவளது தெய்வீகமான சேலையை எடுத்துச் சென்று விடுகிறான். அப்பெண்ணினால் ஆற்றிலிருந்து வெளியே வரமுடியாத நிலை.
இளங்கன்னியின் தோழிகள் சிவபெருமானிடம் சென்று முறையிடுகிறார்கள். அவர் கோபமடைகிறார். இதற்கிடையில் ஆற்றில் இறங்கி இளங்கன்னியின் அருகில் செல்ல முற்படுகிறான் காத்தவராயன். ஆனால் அப்பெண் ஆற்றின் போக்கில் சென்று தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.
அப்போது அங்கு வந்து சேர்ந்த சிவபெருமான் காத்தவராயனுக்கு சாபமிடுகிறார். பல பிறவிகள் பூமியில் பிறந்து காமலோலனாக அலைந்து, அவதிப்பட்டு முடிவில் தற்கொலை செய்து கொண்ட பெண் மூலமே அவனுக்கு முடிவு ஏற்படும் எனக் கூற, பார்வதி தேவி தன் மகனுக்காக பரமசிவனிடம் வாதாடுகிறார். இருவருக்கும் தகராறு ஏற்பட, பார்வதி தேவியும் பூலோகத்திலேயே தங்கிவிட சாபமிடுகிறார் சிவபெருமான்.
தவறை உணர்ந்த பார்வதி தேவி, சாப விமோசனம் கேட்க, பம்பா நதிக்கரையில் தவமிருந்து தன்னை பூஜித்து சாப விமோசனம் பெற அருள் புரிந்து மறைந்து விடுகிறார்.
காத்தவராயன் பரதேசி கோலத்தில் அலைகிறான். ஒருநாள் விநாயகர் சந்நிதியில் வந்து உருக்கமாகப் பாட, விநாயகர் தோன்றி, காத்தவராயனை சிறு குழந்தையாக மாற்றி, அக்குழந்தையை, பூஜை செய்து வந்த பார்வதி தேவியின் அருகில் விட்டுச் சென்று விடுகிறார். குழந்தையைக் கண்டெடுத்த பார்வதி தேவி அக்குழந்தையை காட்டுவாசிகளிடம் ஒப்படைத்து, அவர்களுடனேயே வளர்க்கச் செய்கிறாள். அக்குழந்தை வளர்ந்து காத்தவராயனாக, எல்லாக் கலைகளிலுமே தேர்ச்சி பெற்று விடுகிறான்.
ஒரு நாட்டின் மந்திரி தனக்குக் குழந்தை வேண்டுமென்பதற்காக மகாவிஷ்ணுவிற்கு பூஜை செய்து அர்ச்சிக்க, அவரது அருளால் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. பிராமண குலத்தில் பிறந்த அக்குழந்தை தான் ஆர்யமாலா.
நன்கு வாலிபனாக வளர்ந்துவிட்ட காத்தவராயன் பம்பா நதியோரம் சென்று தன் தாயை வழிபடுகிறான். மகிழ்ச்சியடைந்த அவனது தாயார், உலக அனுபவம் பெற காத்தவராயனை பல நாடுகளுக்குச் சென்று அனுபவம் பெற்று வர கட்டளையிடுகிறார்.
மலையாள நாட்டில் பல மந்திர, தந்திரங்களைச் செய்கிறான் காத்தவராயன். அங்கிருந்தவர்கள் அவனை ஒப்புக் கொள்ளாமல், தங்களது நாட்டு மந்திரவாதியுடன் போட்டியிட்டு, அவன் வைக்கும் மோடியை எடுக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
மலையாள நாட்டின் மந்திரவாதியுடன் நடந்த போட்டியில் முதலில் பல இன்னல்களை அடைந்தாலும், முடிவில் மோடி எடுத்து காத்தவராயன் வெற்றிபெறுகிறான். அத்துடன் அந்த மந்திரவாதியையும் தனது அடிமையாக்கிக் கொள்கிறான்.
இருவரும் பார்வதி தேவியிடம் செல்ல, அவர் எவரும் எவருக்கும் அடிமையில்லை எனக் கூற, இருவரும் நண்பர்களாக மாறுகிறார்கள்.
ஒரு சமயம் மன்னர் தன் பரிவாரங்களுடன் வேட்டையாட காட்டிற்கு வரும் போது அவருடன் மந்திரியும், அவருடைய மகளான ஆர்யமாலாவும் வருகிறார்கள். அந்தக் காட்டில் மானைப் பிடிக்க வலை வீசுகிறார்கள் காத்தவராயனும் அவனது மந்திரவாதி நண்பனும். அதில் மாட்டிக் கொள்கிறாள் ஆர்யமாலா. அதிலிருந்து அவளை விடுவிக்கிறான் காத்தவராயன். ஆர்யமாலாவை விரும்ப ஆரம்பிக்கிறான். ஆனால் அவள் யாரென்பது காத்தவராயனுக்குத் தெரியவில்லை.
வெற்றிலையில் மை போட்டுப் பார்த்து, அவள் ஆர்யமாலா என்றும், அவளை அடைவது மிகவும் கடினம் எனவும் மாந்திரீக நண்பன் கூறுகிறான்.
ஆர்யமாலாவை அடைய பல திட்டங்கள் தீட்டுகிறான் காத்தவராயன். கிழவன் வேஷத்தில் ஒரு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஆர்யமாலா காதில் விழும்படியாகப் பாடுகிறான். அங்கு வந்த ஆர்யமாலாவின் தோழிகளை படாதபாடு படுத்துகிறான். அவர்கள் மந்திரியிடம் சென்று புகார் செய்கிறார்கள். ஆட்களுடன் வந்த அவரையும் விரட்டி அடித்து விடுகிறான். மந்திரி அரசரிடம் சென்று முறையிடுகிறார். அவர் தனது சேனாதிபதியை அனுப்பி காத்தவராயனைப் பிடித்து வரும்படி கட்டளையிடுகிறார். சேனாதிபதி படைவீரர்களுடன் சென்று சண்டையிட்டு தோல்வி அடைகிறான். ஆனால் தந்திரமாக அவனைப் பின் தொடர்ந்து சென்று, ஒரு சாக்குப்பைக்குள் அடைத்து அரசர் முன் கொண்டு வந்து விடுகிறார்கள்.
அரசர் முன் சாக்கு மூட்டையை அவிழ்க்க, கிழவனுக்கு பதில் உள்ளே இருந்து இளைஞனான ஒரு ஜோதிடன் வெளிப்படுகிறான். காத்தவராயன் இம்மாதிரியாக இப்படத்தில் பல்வேறு வேஷங்களில் தோன்றுகிறான். இவற்றிலெல்லாம் பி.யு.சின்னப்பா காத்தவராயனாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
வண்ணானாக, வளையல் வியாபாரியாக, அரண்மனை வீரனாக, பண்டாரமாகப் பல வேஷங்களில் பி.யு.சின்னப்பா அக்காலத்தில் நடித்து, திரை ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
அது போலவே மலையாள மாந்திரீகனாக நடித்த என்.எஸ். கிருஷ்ணனிடமிருந்தும் சிறப்பான நடிப்பு வெளிப்பட்டது. இப்படத்தில் இவர் அடிக்கடி பேசும் ‘ஐயோடா’ வசனம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ஆச்சரியமான எந்த விஷயத்திற்கும் ‘ஐயோடா’ என்பார். இந்த ‘ஐயோடா’ வசனம் சமீபத்தில் சின்னத்திரை தொடர் ஒன்றில் பயன்படுத்தப்பட்டு, அதுவும் ரசிக்கப்பட்டது. நமது முன்னோடிகள் ஏற்கெனவே விட்டுச் சென்றதை கையிலெடுத்தும் புதுப்பித்து, ஏதோ புதியது போல் இன்றைய ரசிகர்கள் மீது விட்டெறிந்து, தங்களது புதிய திறமையை வெளிப்படுத்திக் கொண்டார்கள்!
காத்தவராயன் தனது மாமனான மஹாவிஷ்ணுவின் துணையுடன் மாறு வேஷத்தில் வளையல் வியாபாரியாக வந்து அனைவரையும் மயக்கமடையச் செய்து, மயங்கிய நிலையிலிருந்த ஆர்யமாலாவுக்குத் தாலிக்கட்டி விட்டுப் போய் விடுகிறான்.
மயக்கம் தெளிந்து எழுந்த ஆர்யமாலா, வந்தது காத்தவராயன் என அறியாமல் வேறு எவரோ என நினைத்து, வருந்தி, தன்னை மாய்த்துக் கொள்வதற்காக கடலை நோக்கி ஓடுகிறாள். மகாவிஷ்ணுவின் அருளால் பிறந்த அவளை, மகாவிஷ்ணு ஒரு கற்சிலையாக மாற்றி விடுவார். அனைவரும் அழுது, புலம்பி, பரிதவிக்கின்றனர். அங்கு வந்த காத்தவராயனின் ஸ்பரிசத்தால், சுய உருவை அடைகிறாள் ஆர்யமாலா. அவளைத் தனது இருப்படத்திற்குக் கொண்டு சென்று விடுகிறான் காத்தவராயன்.
தனியாக ஒருநாள் வந்து கொண்டிருந்த காத்தவராயனை தனது ஆட்களுடன் மறைந்திருந்த சேனாதிபதி பிடித்து, சங்கிலியில் பிணைத்து அரசர் முன் இழுத்து வந்து விடுகிறான். சேனாதிபதியாக, மிக மெலிந்த உருவத்தில் நடித்த டி.எஸ்.பாலையா பார்ப்பதற்கு அழகாகத் தானிருந்தார்.
காத்தவராயனின் செய்கைக்காக, அவனை கழுவிலேற்ற உத்தரவிடுகிறார் அரசர். கழு மரத்தின் முன்னே நின்று காளியை நினைத்து உருக்கமாகப் பாடுகிறான் காத்தவராயன்.
மகாவிஷ்ணு, சிவனை இழுத்துக் கொண்டு காத்தவராயனை கழுவிலேற்றும் இடத்திற்கு வருகிறார். சரியான நேரத்தில் வந்த சிவபெருமான் கழுவைக்காணாமல் செய்து விடுகிறார். அனைவருக்கும் ஆசி வழங்கி, பார்வதி தேவியுடன் கைலாசம் சென்றுவிடுகிறார். காத்தவராயன், ஆர்யமாலா திருமணம் இனிதே நடைபெறுகிறது. ஓம்!
ஆர்யமாலா படத்தின் கதாநாயகன் பி.யு.சின்னப்பா, இவர் அப்போது மிகவும் பிரபலமாக விளங்கிய தமிழ்ப்பட ஹீரோக்களில் ஒருவர். மற்றொருவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1936 இல் வெளிவந்த சந்திரகாந்தா, 1938 இல் வெளிவந்த ‘யயாதி’, 1940 இல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ‘உத்தமபுத்திரன்’ படங்களுக்குப் பிறகு ‘ஆர்யமாலா’ படம் பி.யு.சின்னப்பாவிற்கு அதீதப் புகழை ஏற்படுத்திய படம். நடிக்கவே தெரியாதவர்கள் நடிகர்களாக வலம் வந்த காலத்தில் நன்கு நடிக்கத் தெரிந்த நடிகராக விளங்கியவர் பி.யு.சின்னப்பா.
இந்தப் படத்தில் கதாநாயகி எம்.எஸ்.சரோஜினி என்பவர். இவரை இப்படத்தின் உரிமையாளர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.
இப்படத்தின் இசையமைப்பாளர் அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருந்த ஜி.ராமனாதன். ‘சிவ கிருபையால் புவி மேல் மாதா உன்னை, தெரிந்துள்ளமே மகிழ்ந்தேன்’ என சரஸ்வதி ராகத்தில் பி.யு.சின்னப்பா பாடிய பாட்டு மெத்த பிரபலமடைந்தது. இப்பாடல் தவிர மற்ற பாடல்கள் அப்படியொன்றும் சிறப்பாக அமைந்து விடவில்லை.
ஒளிப்பதிவை அருமையாகச் செய்திருந்தார் பொம்மன் இரானி என்கிற வடநாட்டைச் சார்ந்தவர்.
இதே ஆர்யமாலா கதையை 1958 இல் ‘காத்தவராயன்’ என்கிற பெயரில் திரைப்படமாக மீண்டும் தயாரித்தார்கள் வெறொரு நிறுவனத்தார். டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி ஜோடியாக நடித்திருந்தனர். கதையை நம்பினார்களா! அல்லது சதையை நம்பினார்களா?! எனத் தெரியவில்லை. மிகவும் கனமான நடிகர்களான சிவாஜி கணேசனும், சாவித்திரியும் நடித்தும், இப்படம் ஆர்யமாலாவைப் போல் வசூலில் வெற்றி பெறவில்லை. இவர்கள் இருவரது கனத்தையும் தாங்க இயலாமல் இப்படம் எழுந்திருக்கவில்லை என அப்போது பலரும் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள்.
உண்மையில் பக்ஷிராஜாவின் ‘ஆர்யமாலா’வை விட சிறப்பாக எடுக்கப்பட்ட படம் காத்தவராயன். ஆர்யமாலாவிற்கு இசையமைத்த அதே ஜி.ராமனாதன் தான் காத்தவராயனுக்கும் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பல பாடல்கள் ‘ஹிட்’ ஆயின. சிவாஜியும், சாவித்திரியும் சிறப்பாகவே நடித்திருந்தனர். ஆனாலும் படம் வெற்றி பெறாமல் போனதற்கு, தமிழ்த் திரைப்பட ரசிகனின் ரசனையில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணம் எனக் கருதவும் இடமுண்டு.
காத்தவராயன் பிறப்பால் சிவபெருமானின் மகன் என்றாலும், தாழ்ந்த குடியைச் சேர்ந்த காட்டுவாசிகளால் அவர்கள் மத்தியிலேயே வளர்க்கப்பட்டதால் அவன் ஒரு தாழ்ந்த குலத்தவனாகவே கருதப்பட்டான். பிராமண குலத்தில் பிறந்தவள் ஆர்யமாலா. தாழ்ந்த, உயர் ஜாதி திருமணம் வாயிலாக ஜாதி உணர்வைக் களையும் விதமாகவும் இக்கதையைத் தேர்ந்தெடுத்து, சமூகத்துக்குப் பயனுள்ள செய்தியை இப்படத்தின் வாயிலாக நேர்த்தியாகச் சொல்லியிருந்தார்கள் பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர். சிறப்பான இப்படம் மிகப்பெரிய படம். மூன்று மணி நாற்பத்தியேழு நிமிடங்கள். ஆனால் அலுப்பே தட்டாமல் படத்தைப் பார்க்க முடிவது இப்படத்தின் சிறப்பை உணர்த்தும். பாராட்டுதல்களுக்குரிய படம்.
– கிருஷ்ணன் வெங்கடாசலம்