Shadow

ஆஹா கல்யாணம் விமர்சனம்

ஆஹா கல்யாணம் திரைவிமர்சனம்

நானியின் நேரடி தமிழ்ப்படமிது என்ற போதிலும்.. தெலுங்கு ரசிகர்களுக்கும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டதாலோ என்னமோ படம் முழுவதும் வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. முதல் பாதியின் அத்தனை ஃப்ரேமிலும் பாதி ஸ்க்ரீனுக்கு மேல் இடம்பிடிப்பது சிவப்பு நிறம்தான். இதுவே தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்.

சக்தியும் ஸ்ருதியும் இணைந்து, ‘ஃபினான்சும் ரொமான்சும் ஒண்ணு சேரக்கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திக் கொண்டு ‘கெட்டிமேளம்’ எனும் நிறுவனம் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ரொமான்ஸ் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை.

‘நான் ஈ’யில் பார்த்தே அதே நானி. ‘வெப்பம்’ படத்தில் அவர் சீரியசாக நடித்தது எதுவும் ஞாபகமில்லை. ஆனால் ‘நான் ஈ’ படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும், ‘ஈ’ தான் அதில் நாயகன் என்றாலும்.. நானி மனதில் பதியுமளவு அழகாக நடித்திருப்பார். அங்கு அவருக்கு அற்பாயுசு என்பதால் அவரை படம் நெடுகும் பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்தக் குறையை இப்படம் தீர்த்து வைக்கிறது. எவர் வேண்டுமானால் எதிர் பாலினத்தவரைக் கண்டு வழியலாம். ஆனால் உறுத்தாமல் ரசிக்கும்படி அழகாக வழிய வெகு சிலரால்தான் முடியும். அதில் நானிதான் நம்பர் 1. அவரது முகம் அதற்காகவே ஆனதுபோலுள்ளது.

வாணி கபூர்ஸ்ருதியாக வாணி கபூர். பல காட்சிகளில் நானியைவிட உயரமாகத் தெரிகிறார். வழக்கமான படமாக இருந்தால், நாயகியை பாடல்களில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் இதில் நாயகனுக்கு சமமாக திரையில் தோன்றுகிறார். படம் முழுவதும் இவர்கள் இருவர் மட்டுமே பெரும்பாலான காட்சிகளில் வருகின்றனர். ஆனால் படம் எந்தவித சலிப்பையும் ஏற்படுத்தாமல், தொடங்கிய வேகத்திலேயே பயணித்து, அப்படியே முடிகிறது. பல நாயகிகளுக்கு கிடைக்காத சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்பைப் அறிமுகப் படத்திலேயே பெற்றுள்ளார் வாணி.

மொத்த தமிழ்நாட்டிற்கும், இரவில் ஒரு மணி நேரத்திற்கு தேவைப்படும் ‘லைட்’டை இந்தப் படத்தில் மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள். முக்கியமாக தமிழில் வந்த பன்ச் டயலாக்குகளைக் கொண்டு மட்டுமே ஒரு பாடல் வருகிறது. “வாடா என் மச்சி.. என் வாழைக்காய் பஜ்ஜி” என வரிகள் வரும்பொழுது.. விஜய டி.ராஜேந்திர் போலவே ஆடுகிறார் நானி. ஆனால் பாடல் வரிகளையும், நடனத்தையும் ரசிக்க முடியாதபடி ஒளியும் ஒலியும் ஆதிக்கம் செலுத்துகிறது.

வசனம் எழுதியிருபவர் ராஜீவ் ராஜாராமன். படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். நானியைப் பார்த்து அவர் நண்பர், “டேய்.. தமிழை முதலில் தமிழா பேசுடா. ஏன் தெலுங்கு மாதிரி பேசித் தொலைக்கிற?” என்பதில் தொடங்கி படம் நெடுக ‘லைவ்’வான வசனங்கள். படம் சுபமாக முடியப் போகும் கடைசி நேரத்தில்கூட வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.  நானி பேசும் ஆங்கிலம், கலர்ஃபுல்லான செட் வொர்க் என இரண்டரை மணிநேரத்தை பார்வையாளர்கள் சலிப்புறாமல் ஜாலியாகக் கழிக்க அறிமுக இயக்குநர் கோகுல் கிருஷ்ணா பொறுப்பெடுத்துக் கொள்கிறார். இவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் இயக்குநராகப் பணியாற்றியவர்.

‘பேண்ட் பஜா பராத்’ என்ற ஹிந்திப் படத்தை தென்னிந்தியாவில் ரீ-மேக் செய்ததன் மூலம் மீண்டும் ஜாக்பாட் அடிக்கப் போகின்றனர் ‘யஷ் ராஜ் ஃப்லிம்ஸ்’.