Search

ஆ விமர்சனம்

ஆ திரைவிமர்சனம்

பேய் இருக்கா இல்லையா?

இருக்கு என நிரூபித்தால் 60 கோடி ரூபாய் வெல்லலாம் என மூன்று நண்பர்களுக்கு பந்தயம் வைக்கிறான் பிராஸ்பர். தமிழ், செர்ரி, சிங்காரம் ஆகிய மூவரும் பேயை வீடியோவாக பதிவு செய்ய செய்து பந்தயத்தில் வெல்ல முனைகின்றனர். என்ன முயற்சி செய்கிறார்கள், பந்தயத்தில் வென்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

அம்புலியாக நடித்த கோகுல்நாத்க்கு நாயகனாக பிரமோஷன் தந்துள்ளனர் இரட்டை இயக்குநர்கள் ஹரி ஷங்கரும் ஹரீஷ் நாராயணனும். பிரபல டி.வி. சேனல்கள் வாயிலாக தனது அவிநயக்கூத்தின் (mime) மூலமாகப் பிரபலமடைந்தவர் கோகுல். அவருக்கு தீனி போடும் விதமாக கானா பாலாவுடன் இணைந்து அவர் ஆடும் அறிமுகப் பாடல் அமைந்துள்ளது. பின் படத்தின் போக்கிற்கு இணையும் கதாபாத்திரமாக மாறிவிடுகிறார் கோகுல்.

செர்ரியாக மேக்னா நடித்துள்ளார். எப்படியாவது பந்தயத்தில் ஜெயித்து 20 கோடி ரூபாயை அடைய நினைக்கும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். இவர்களுடன் இன்னொரு நண்பராக வரும் பால சரவணன் நகைச்சுவைக்கு பெரிதும் உதவவில்லை.

– தமிழின் முதல் ஹாரர் அந்தாலாஜி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரி-ஹரீஷ் என்ற இரட்டை இயக்குநர்களின் முதல் படமான ‘ஓர் இரவு’ இந்தியாவின் முதல் ‘பாயின்ட் ஆஃப் வியூ’ படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இவர்களின் இரண்டாவது படமான அம்புலியும் தமிழின் முதல் 3-டி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது அடுத்த படமான ஜம்போ 3டி-யோ, இந்தியா-ஜப்பான் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்களா விரிகுடாவின் ஆழ் கடலில், ஜப்பான், துபாய், தமிழ்நாட்டில் ஒரு ஏ.டி.எம். சென்ட்டர், ஆந்திர நெடுஞ்சாலை என ஐந்து இடங்ககளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கியதும் பேயைத் தேடி நடுக்கடலுக்குச் செல்கின்றனர் படத்தின் பிரதான பாத்திரங்கள். அங்கு நடக்கும் சம்பவங்கள் மிகப் புதிதாகவும் மிரட்டுவதாகவும் உள்ளது. கேரளாவின் மதிமயக்கி வனம் போலவும், வட அட்லான்ட்டிக் பெருங்கடலின் பெர்முடா ட்ரையாங்கிள் போலவும்.. மந்திக்குழி(!?) என்றொரு விஷயத்தைக் காட்டுகின்றனர் படத்தில். வீடியோவில் பேய் பதிவாகாததால், வேறொரு பேயைத் தேடி ஜப்பான் செல்கின்றனர். பின் ஜீனியாவைத் (பெண் பூதம்) தேடி துபாய்க்குப் பயணிக்கின்றனர். இந்தப் பெண் பூதத்தின் அட்டகாசத்தால், மந்திக்குழி ஏற்படுத்திய தாக்கம் படத்தின் இடைவெளிக்குள்ளாகவே மறைந்து விடுகிறது.

இரண்டாம பாதியில், குரு எனும் ஏ.டி.எம். காவலாளியாக எம்.எஸ்.பாஸ்கர் ஈர்க்கிறார். அவரது பதற்றமான நடிப்பு படத்தின் மிகப் பெரிய பலம். ஆனால் மற்றவை போலவே இவர் வரும் காட்சிகளும் சின்னஞ்சிறு அத்தியாயமாக வந்து மறைவதுதான் படத்தின் பின்னடைவு. படத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் பேய் கதைகளுக்குள் ஒரு பொதுவான விஷயமோ ஒற்றுமையோ இல்லாதது திரைக்கதையின் பலவீனம். மேலும் கேமிராவில் பேய் பதியவில்லை என்றதும் சுதாரிக்காமல், கேமிராவைத் தூக்கிக் கொண்டு திரிந்து மீண்டும் மீண்டும் தோல்வி அடைகின்றனர். அப்படியும் கேமிராவில் பேயைப் பிடித்து விடலாமென்று நம்புகின்றனர். மேலும் நம்மூரில் இல்லாத பேய் கதைகளா? இணையத்தில் படித்துவிட்டு நாடு நாடாகப் பறக்கின்றனர். யோசனை கேட்க இருக்கவே இருக்கிறார்கள் பிரபல ஆவியுலக ஆராய்ச்சியாளர்களான ஆவி அமுதா, விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் போன்றோர்கள். பிளான் செய்யாமல் ஒரு காரியத்தில் இறங்குவதின் பலனை அனுபவிக்கிறார்கள்.

Simhaa Aaaah Tamil reviewமந்திக்குழி தந்த சிலிர்ப்பைக் கூட படத்தின் ப்ரீ-க்ளைமேக்ஸ் தரவில்லை. படத்தின் இன்னொரு சுவாரசியம் பிராஸ்பராக வரும் சிம்ஹா. கொஞ்சமே கொஞ்சம் காட்சியில்தான் வந்தாலும் தன் முத்திரையைப் பதித்துவிடுகிறார்.

ஆ.. தொடரும் என்பதற்கு தோதாக க்ளைமேக்ஸை முடித்துள்ளனர்.