Shadow

இசை விமர்சனம்

இசை விமர்சனம்

தனக்குக் கிடைக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் தனது திறமை மட்டுமே காரணமென நம்பும் ஒருவன், அவனுக்கு ஏற்படும் தொய்வுக்கும் இயலாமைக்கும் மட்டும் மற்றவர் செய்யும் சதிதான் காரணமென நம்புவான். செயலூக்கம் குறைந்த சாமானிய மனிதனின் கற்பிதமிது.

அப்படித்தான் மகத்தான இசைக் கலைஞரான வெற்றிச்செல்வன் தன் சறுக்கலுக்கு தனது சிஷ்யன் ஏ.கே.ஷிவாதான் காரணமென கோபம் கொள்கிறார். தனது கோபத்தை வெற்றிச்செல்வன் எப்படித் தணித்துக் கொள்கிறார் என்பதுதான் இசை படத்தின் கதை.

சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் படம் வந்துள்ளது. சம கால பாணி பற்றிலாம் கவலைப்படாமல், தனது பிரத்தியேக முத்திரையுடன் அசராமல் களமிறங்கியுள்ளார். ரத்தமும் சதையுமாக பழி வாங்கப் புறப்படும் தமிழ்ப்பட வில்லன்களைப் போலன்றி, நாயகனுக்கு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்த முயல்கிறார் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன்.

இது போன்ற உளவியல் சார்ந்த கதைதான் அவரது பாணி. ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீது செலுத்தும் உளவியல் வன்முறை (வாலி), இருவருக்கிடையேயான தன்முனைப்பு உரசல்கள் (குஷி), இளைஞனின் உடலைச் சுமக்கும் சிறுவனின் மனம் (நியூ), நினைவுகளை நிஜமென நம்பும் மனம் (அஆ..) என அவர் இயக்கிய படங்கள் எல்லாம் மனம் சார்ந்து இயங்கும் கதைகளே! ஆனால் தன்னை நாயகனாக தமிழக மக்கள் அங்கீகரிப்பார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை எஸ்.ஜே.சூர்யாவுக்கு உண்டெனப் படுகிறது. அதனால்தான் முதல் இரண்டு படங்கள் போலல்லாமல், தனது அடுத்த இரண்டு படங்களிலும் சிம்ரனையும் நிலாவையும் கொண்டு தன்னிருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ளச் சமாளித்திருப்பார். அந்தப் பயத்தின் நீட்சியாக இந்தப் படத்தில் சாவித்திரியைப் பயன்படுத்தியுள்ளார்.

இசை சத்யராஜ்எனினும் படத்தைச் சுமப்பது என்னவோ சத்யராஜ்தான். அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் அவரது கதாபாத்திரத்தையும், படத்தின் கதையையும் கச்சிதமாய்ப் பிரதிபலிக்கின்றன. எஸ்.ஜே.சூர்யா சாவித்திரி காதல் காட்சிகளைவிட, சத்யராஜும் கஞ்சா கருப்பும் வரும் காட்சிகள் ஈர்க்கின்றன. படத்தின் தலைப்புப் போடப்பட்டதுமே கதை சொல்லத் துவங்கிவிடும் இயக்குநர்.. அதிலிருந்து விலகி கண்டதும் காதல், அதில் வெற்றியடைய நாயகன் மேற்கொள்ளும் பேத்தலான பிரயத்தனங்கள், பாம்புக் கடிக்கு மருந்து கொடுக்க சாவித்திரி வரும் காட்சிகள் போன்றவற்றைச் சுருக்கியிருக்கலாம் அல்லது க்ளிஷேக்களைத் தவிர்த்து வேறு மாதிரியாவது சுவாரசியப்படுத்தியிருக்கலாம். இதற்கு மாறாக, இடைவேளைக்குப் பின்னான இரண்டாம் பாதியின் திரைக்கதை நேர்த்தி ஆச்சரியப்படுத்துகிறது. சின்ன சின்ன விஷயங்கள் எப்படி மனிதனைச் சலனப்படுத்தி ஸ்தம்பிக்க வைக்கின்றன என அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

நாற்பதின் மத்தியைத் தொட்டுவிட்ட எஸ்.ஜே.சூர்யா, திரையில் தேனீ போல் சுறுசுறுப்பாக ரீங்காரமிடுகிறார். பின்னணி இசையில் தேறினாலும் பாடல்கள் படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் மிகச் சிறந்ததாக இல்லாதது ஒரு குறையே! ஆனால் படத்தின் மிகப் பெரிய பலமே மனதின் வன்மத்தையும், குழப்பத்தையும் உள்ளவாறே பிரதிபலிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் வசனங்களே!

எஸ்.ஜே.சூர்யாவின் கனவு இதோடு நின்று விடாமல்.. மனித மனங்களின் இருண்மைகளையும் பகட்டுகளையும் அடிக்கடி திரைக்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.