Shadow

இசை

நானும் அவளும் எப்பொழுதுமே ஒன்றாகத்தான் விளையாடுவோம் எங்களுக்குள் ஆண் பெண் பேதமெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நானும் அவளும் உள்ளாடைகளுடன் பலதடவை எங்கள் ஊர் மோட்டர் பாம்பு தண்ணீர் இறைக்க, ஒரே தொட்டியில் குளிப்போம். யார் அதிக நேரம் நீரில் மூச்சடக்கி மூழ்கி இருக்கிறார்கள் என பந்தயம் அவ்வப்பொழுது நடேந்தேரும். அதில் பலமுறை ஜெயிப்பது நான்தான் ஆனால் உண்மையில் ஜெயிப்பது அவள்தான். நான் நீரில் மூழ்கியுடன் உடனே வெளியே தலையை நீட்டி கொஞ்சநேரம் கழித்து நான் மீண்டும் மூழ்குவேன் அது அவளுக்கு தெரியாது.

சின்ன வயதில் நாங்களிருவரும் விளையாடாத விளையாட்டே கிடையாது. அப்பா அம்மா (நீங்க நினைப்பது மாதிரியான விளையாட்டு இல்லைங்க) விளையாட்டு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அப்பொழுதுதானே நாங்கள் மற்றவர்களை அதிகாரம் பண்ண முடியும். நான்தான் அப்பா, எங்களுக்கு மூன்று குழந்தைகள், அந்த மூன்று குழைதைகளும் நாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மற்ற பெற்றோர்களின் வாரிசுகள். காலை நேரம் எங்களுக்கு மாலையாகவும், இரவகாவும் மாறிவிடும். நான் காலை பதினோறு மணிக்கெல்லாம் பணிமுடித்துவிட்டு மாலை வீடு திரும்புவேன். வந்தவுடன்

“ஏய் சாப்பாடு போடுடி , பசங்க எங்க? மண்ணுல விளையாடகூடதுன்னு நான் எத்தினி தடவ சொல்லியிருக்கன், அங்க பாரு சின்ன பைய்யன் கை காலெல்லாம் ஒரே மண்ணு போடி போ அவன இங்க தூக்கிக்கிட்டுவா……………..

ம் …………… என்ன சொல்லுங்க எதுக்கெடுத்தாலும்……………….. மத்த ரெண்டும் என்பேச்ச மதிச்சி எப்படி வீட்டோட அடங்கி கடக்குதுங்க பாரு, சின்னவருக்கு உங்களால ரொம்ப ஏறிப்போச்சு வர வர அவுரு தொல்ல தாங்கல, எல்லாம் நீ பண்ற வேலையா ………….. கடகுட்டின்னு தூக்கிவச்சி கொஞ்சுவ இல்ல அதான் நீ குடுக்கற செல்லம் ……….

போடி போ முதல்ல அவன தூக்கிகிட்டு வா …………. அப்பறம் பேசுவ உன் ராமாயணத்த …………….”

இது நாங்கள் பேசிய வார்த்தைகளில் சிற்சில மட்டும் இன்னும் நிறைய இருக்கிறது. அவள் எனக்கு சோறு போடுவது, (நான் அவளிடம் சோற்றில் உப்பில்லையென , சாம்பார் இன்னும் கொஞ்சம் கொதிசிருக்கணும் ) ஆடையில் அழுக்கு சரியாக போகவில்லையென நான் அவளை வஞ்சியது, குழைந்தைக்கு உடல்நிலை சரியில்லையென மருத்துவமனைக்கு கூட்டிசென்றது, மருந்து கொடுத்தது ,நான் சில நாட்கள் இரவுப்பணி(night shift/work) முடித்துவிட்டு வருவேன் அப்பொழுது தூங்கிகொண்டிருக்கும் குழந்தைகளை எழுப்பி பொட்டலம் கொடுத்தது.

தூங்கிகொண்டிருக்கும் குழைந்தைகள் அன்று செய்த சேட்டைகளை அவள் என்னிடம் அட்டவனையிடுவது ………………………… என எங்கள் குடும்ப வாழ்க்கை கதை இன்னும் நீளும் ……….

எங்க வாழ்க்கை விளையாட்டை நன்றாகத்தான் விளையாடிக்கொண்டிருந்தோம். ஆனால் அதை கெடுப்பதற்கென்றே எங்க தெருவில் உள்ள ஒரு உருபடாதவன், எங்களை விட வயதில் இரண்டு வருடம் பெரியவன் அவனை நா(ன்)ங்கள் எங்கள் விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. அவன் அப்பா பாத்திரம் கேட்பான் அதனாலேயே அவனை எனக்கு பிடிக்காது. சில நேரம் என்னை அவன் அடித்தும் இருக்கிறான் அப்பொழுதெல்லாம் அவள்தான் அதற்கும் சேர்த்து சில கேள்விகள் கேட்பாள் என்னிடம் ” ஒரு அம்மாவுக்கு ரெண்டு அப்பா இருப்பாங்களா”………….. எனக்கு மட்டும் அப்பொழுது என்ன தெரியும் ஆனால் நான் அப்பவே உஷார் “உனக்கு நான்மட்டும்தான் புருஷன் எனக்கு நீ மட்டும்தான் பொண்டாட்டி “. என சொல்லி என் உரிமையை உறுதிப்படுத்துவேன். அவனுக்கு நாங்கள் விளையாடுவது தெரியக்கூடாது என்பதற்காகவே நாங்கள் குடித்தனம் நடத்தும் வீடு பலமுறை இடம்பெயர்த்திருக்கிறது பலரின் வீட்டு தோட்டத்திற்கு …. எங்கள் இருவரின் வீட்டு தோட்டத்தை விட அதிகமாக எங்கள் குழந்தையின் வீட்டு தோட்டம் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும் மலரும் பூக்களின் மூலம் தினம் தினம் …….

மாலையில் படிப்பதும் ஒன்றாகவேதான், அவள் வீட்டு திண்ணையில். ஐந்து பேர் கொண்ட குழு படிக்கிறோம் என்கிற பெயரில் படம் பார்த்துகொண்டிருப்போம் பாடநூல்களை மாற்றி மாற்றி ……. ஐந்தாம் வகுப்பு வரை இப்படி போனது ………

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி வந்தது அந்த விளையாட்டு எங்களுக்கு பிடித்திருந்தாலும் எங்களின் வீட்டில் வந்த எதிர்ப்பு(கட்டுப்பாடு), பிறரின் பார்வையிலும் அதற்கு அர்த்தம் புரியவந்தது. பிறகு பேசுவதும் குறைந்தது பள்ளியில் பேசுவதை தவிர . நாட்கள் செல்ல செல்ல அவளுடன் உறவு பலப்பட்டது ஆனால் மனத்தால் பலகீனம் அடைந்தோம் பேசுவது குறைந்ததனால். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு தேர்வின் முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தோம். என்னைவிட அவள்தான் ஆவலாக இருந்தால் தேர்வின் முடிவை எதிர்நோக்கி, அவளுக்கு மருத்துவம் படிக்க ஆசை. எங்கள் வகுப்பில் நன்றாக படிக்கும் முதல் நபர் அவள்தான் தேர்வுதொடங்கும் இரண்டு மாதத்திற்கு முன்பிலிருந்தே என்னை தேற்றிவிட நிறைய பாடுபட்டாள். எனக்கு படிப்பதை விட அவளுடன் சேர்ந்து இருக்கவேண்டும் அதற்காகவே அவள் வீட்டிற்கு படிக்கபோகும் நபர்களில் நானும் என்னை ஐக்கிய படுத்திக்கொண்டேன். இத்தனைக்கும் அவள் வீட்டில் பலத்த எதிர்ப்பு ” நீ மட்டும் படியேன் ஏன் இவ்வளவு கும்பல வீட்ல சேக்கற”என்று .

நான் கோடைவிடுமுறைக்கு எனது மாமா வீட்டிற்கு சென்றிருந்தேன் தேர்வுமுடிவு இன்னும் பத்துநாட்களுக்குள் வந்துவிடும் என ஒரு செய்தி. “பாஸோ/பெய்லோ அது நம்ம ஊரோட போகட்டும் இங்க வேற ஒரு ஊருல நம்ம மானம் போகனுமா ” என மனம் என் மானம் பற்றி சொன்னது. ஊருக்கு திரும்பினேன் (1) ஒருநாளானது முழுவதுமானது அவளை காண முடியவில்லை. (2)தேர்வு முடிவு வந்தது அவளின் கரிசனத்தால் /கருணையில் தேறிவிட்டேன். அவள் பள்ளியிலேயே முதலாவதாக வந்தால்.நான் ஆசையாக முட்டாய் வாங்கிக்கொண்டு அவளிடம் கொடுக்கபோனேன்.

“நில்லு நில்லு எங்க போற ?”

“நான் பாஸ் ஆயிட்டன் அதான் யாழினிக்கு முட்டாய் கொடுக்கபோரன். யாழினி எங்க, அவதான் ஸ்கூல் பஸ்ட் சாரெல்லாம் அவள தேடிகிட்டு இருக்காங்க “

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும் இனிமேல் அவள தேடிகிட்டு எங்கவீட்டுக்கு வரவேலையெல்லாம் வச்சிக்காத, அவகிட்ட இனிமேல் நீ பேசறத பார்த்தேன் உங்கப்பன்கிட்ட சொல்லி உடம்பஉறிக்க சொல்லிடுவன் “

எவ்வளவு மகிழ்ச்சியாக போனேனோ அதைவிட ஆயிரம் மடங்கு சோகத்தில் திரும்பினேன். நான் தேறியதே ஒரு பெரிய விடயம் எங்கள் வீட்டில் எங்க அம்மா, அப்பா குலதெய்வம் கோவிலுக்கு பெரிய படையல் போட அனைத்துவேலைகளும் செய்துகொண்டிருந்தனர். அக்கம் பக்கம் என்னைப்பற்றி எங்கம்மா, தம்பி, தங்கை அனைவரும் ஒரே தம்பட்டம் எனக்குமட்டும் மகிழ்ச்சியில்லை யாழினியின் பாட்டி அப்படி ஏன் என்னை திட்டினார்கள் என புரியவேயில்லை.

(3)மறுநாள் அவளை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்னும் எண்ணத்தில் அவள் வீட்டு பக்கம் போனேன். பலனில்லை மூதாட்டிகள், அவளின் தோழிகள், மற்ற பெண்மணிகள் என வீடு நிரம்பியிருந்தது. வீட்டை கடக்கும் சில நொடியில் தெருவிலிருந்தே வாசல் வழியே பார்த்தேன் வீட்டினுள்ளே அவளைத் தவிர மற்ற பெண்கள் தெரிந்தனர். அவள் வீட்டு வாசலில் பந்தலும், பந்தலில் மாவிலை, வேப்பிலை, தோரணம், பச்சைநிற தென்னங்கீற்று என அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டிருந்தனர் பாடல் போடுவதற்காக. பந்தலின் வண்ண விளக்குகள் கொத்து தொங்கவிடப்பட்டிடுந்தது. அநேகமாக இன்றுமாலை அது ஒளிரும் விஷயம் புரிந்தது எனக்கு.

அம்மாவிடம்

“புரியாததுபோல நான், யாழினி வீட்ல என்னமா ஏன் அவுங்க வீட்ல அதெல்லாம் கட்றாங்க? அவள பாக்கவே முடியல நேத்து நான் முட்டாய் கொடுக்கபோனதுக்கு அவுங்க பாட்டி என்ன திட்டிட்டாங்க இனிமேல் பாக்ககூடதுன்னு சொன்னாங்க

அதுவா அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் அப்பிடி சொல்லியிருக்காங்க இனி மேல் நீ அவ கிட்ட பேசாத,

அன்று மாலை யாழினிக்கு பட்டுபுடவை கட்டி அலங்காரத்துடன் ……………….. நடந்தது.

(4)மறுநாள் எங்கள் வகுப்பு சகாக்கள் அது பற்றி பேசியே பொழுதை கழித்தோம் நமக்கும் (ஆண்களுக்கும்) இது மாதிரி வயதுக்கு வந்ததை ஊரறிய கொண்டாடினால் எப்படியிருக்குமென ? அதற்கு ஒருவன்,

” அப்பறம் தம்பி மாசத்துல மூனுநாளு வயித்த வலிக்கும்,
ஏன் எப்புடி சொல்ற
எங்க அக்கா அதுமாதிரி அழுவுமே, அப்ப எதுவுமே தொடக்கூடாதுன்னு எங்க அம்மா திட்டுவாங்க … பூ கூட எங்க அக்கா அன்னைக்கு பறிக்காது. வீட்லயே இருக்கும் …
இன்னும் சிலவற்றை பேசினோம் அவைகளை நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள்.”

(5) மறுநாள் அவள் அத்தை புட்டு கொண்டுவந்து கொடுத்தார்கள் எல்லோர் வீட்டிற்கும் எங்கள் வீடும் அதில் சேரும்.

அன்றிலிருந்து நான் அவளிடம் பேச முயற்சித்தேன் முடியவில்லை, இந்த ஏழு வருடத்தில் மூன்றுமுறை பேசியிருக்கிறேன் அவளிடம். ஒரு முறை பேருந்தில் எப்படி இருக்க? ம் ………….. நல்லா இருக்கான் ……. நீ., மற்றொருமுறை அம்மன் கோவிலில், இறுதியாக அவள் பாட்டியின் இறந்தநாள் அன்று. அவ்வப்பொழுது உதட்டோரம் புன்னகை, ஒரு மெல்லிய புன்முறுவல் வார்ப்பால் அதுவும் அவள் வீட்டை கடக்கும்பொழுது துணியை மொட்டைமாடியில் காயபோடவந்தால், இருவரின் நேரமும் ஒன்றிவந்தால், ஒரு புன்னகை பரஸ்பரம் பரிமாறப்படும். அதுவும் சர்ச்சையை கிளப்பியதால் குனிந்துகொண்டே போய்விடுவேன். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இருந்ததனால் அவளின் திருமணத்திற்கு கூட என்னால் போக முடியவில்லை.

வேலை(நான் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிறுவனத்தின்) காரணமாக நான் கோவை சென்றுவிட்டு தொடர்வண்டியில் திரும்பிகொண்டிருந்தேன். பாதிவழியில் அவள், அவள் கணவன், மூன்று குழைந்தைகள் ஒரு தொடர்வண்டி நிலையத்தில் ஏறினார்கள் அவளுக்கும் குழந்தைக்கும் இருக்கையை கொடுத்துவிட்டு நானும் அவள் கணவனும் கதவின் ஓரத்தில் நின்றுகொண்டு பேசிக்கொண்டு வருகிறோம்.

எனக்கு அவளை சந்தித்ததில் ஒரே ஒரு மகிழ்ச்சி அவளை பார்த்தேன் அதுமட்டும்தான். அவள் என்னை அவள் கணவனிடம் ” எங்க ஊர் காரு ” என்னை இந்த வார்த்தை காயப்படுத்தியது. எத்தனை முறை என்னை போடா வாடா , எத்தனைமுறை கணக்கு போடும் போது தலையில் குட்டியிருக்கிறாள் அந்து எங்கே போனதோ ?

அவள் சொல்லிகொடுத்து படித்தனான் முதுகலை பட்டதாரி, இன்னொருவன் காவலர் துறையில், இன்னொருவன் வழக்குறைஞர் ………………. அவள் சொல்லி கொடுத்த குமுதா பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தால், ஒரு தேர்வுக்கு வராததால் அன்று அவளுக்கு திருமணம் ஆகையால் இன்று தரையில் இரண்டு வயிற்றில் ஒன்று என தாங்கிக்கொண்டிருக்கிறாள்.

யாழினியின் குழந்தையிடம் நான் கேட்டேன்
நீ என்ன பண்ற ?
நான் UKG படிக்கிறேன் நானு டாக்டர் ஆவ போறேன் ………………….
இதுதான் அங்கிள் இருக்கிற வீட்டு அட்ரெஸ் நீ எப்பவேனுமுன்னாலும் வரலாம் டாக்டரம்மா ……………….

நான் அவள் குழைந்தையை கொஞ்சிக்கொண்டே யாழினியை பார்த்து சிரித்தேன், அவளும் சிரித்தாள். எங்கள் சிரிப்பொலி தேய்ந்து முடியும் இடத்தில் ஒரு சிந்தனை பிறக்கும் என நம்புகிறேன் .

– சே.ராஜப்ரியன்