வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல்களில் இருந்து மீண்டு, மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு பூமி வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்னறிவிக்க வேற்று கிரகவாசிகள் விட்டுச் செல்லும் தொழில்நுட்பத்தையே உபயோகித்து, ESD (எர்த் ஸ்பேஸ் டெஃபன்ஸ்) என்ற அமைப்பை உருவாக்குகிறது ஐக்கிய சபை. அவ்வமைப்பை, செவ்வாய் கிரகத்திலும் நிலவிலும் ரேயாவிலும் (சனி கிரகத்தின் துணைக்கோள்) அமைத்து, கண்காணிப்பு வேலையைச் செய்கின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன், வேற்றுக்கிரகவாசிகள் தோற்கும் பொழுது தங்கள் தோல்வியைத் தலைமையிடத்துக்குச் சமிக்ஞை செய்துவிடுகின்றனர். மனித இனத்தை வேரோடு அழிக்க, ஒரு பெரும் வேற்றுக்கிரகவாசிப் படை பூமியை நோக்கி வருகிறது.
அதிக சக்தி வாய்ந்த புவியீர்ப்பு இயந்திரம்தான் அவர்கள் ஆயுதம். ரேயாவில் அமைக்கப்பட்ட கண்காணிப்புச் சாவடியை, சனி கிரகத்தின் வளையங்களோடு சேர்ந்து உறிஞ்சுகிறது அப்புவியீர்ப்பு இயந்திரம். சனியின் அருகில் ஒரு கருந்துளை உருவானது போல் பெரும் அழிவை அவ்வியந்திரத்தின் மூலம் ஏற்படுத்தி விட்டு, பூமியை நோக்கி நகர்கிறது அப்படை. இத்தகைய தாக்குதல்களை எதிர்பாராத மனிதர்கள், எப்படி அப்படையை எதிர்கொண்டு அழிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
முதல் பாகத்தை விட மிகச் சுவாரசியமான கதை என்றாலும், இரண்டாம் பாகம் முதல் பாகத்தைப் போல் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றே சொல்லவேண்டும். ஏலியனுக்கும் மனிதர்களுக்குமான சண்டையை மீறி, முதல் பாகத்தில் உறவுகளுக்குள் உண்டான காதல், புரிதலின்மை என சில மனம் சார்ந்த உணர்வுகளைப் படம் வெளிப்படுத்தியிருக்கும். இந்தப் பாகத்தில், உலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை மட்டுமே கதாபாத்திரங்களிடம் பிரதானமாக உள்ளது. ஒரு பெரும் அழிவுக்கு எதிரான மனிதக் குல ஒருங்கிணைப்பையும், எழுச்சியையும் படம் பிரதிபலிக்கவில்லை.
ESD (எர்த் ஸ்பேஸ் டெஃபன்ஸ்) –இல் பைலட் ஜேக்காக வரும் லியாம் ஹெம்ஸ்வொர்த் தான் படத்தின் நாயகன். ஆனால், எந்தப் பாத்திரங்களுமே மனதில் பதியாதது ஒரு குறை. முதல் பாகத்தைப் போலவே நிறைய பிரதான பாத்திரங்கள் உண்டு. முதல் பாகத்தில் ஜனாதிபதியாக வரும் பில் புல்மன், கேபிள் டி.வி. நிறுவனத்தில் பணிபுரியும் லெவின்சன், அவரது தந்தையாக நடிக்கும் ஜூட் ஹிர்ஸ்ச், வில் ஸ்மித்த்ன் மனைவியாக வரும் விவிகா A.ஃபாக்ஸ், டாக்டர் பிராகிஷாக வரும் ப்ரென்ட் ஸ்பைனர் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரங்களில் வருகின்றனர். முதல் பாகத்தில், வியட்நாம் போரில் பங்குபெற்ற குடிக்காரரான ராபர்ட் க்வைட் ஏலியன்களுடனான போரில் தன் உயிரை தியாகம் செய்வார். இப்பாகத்தில், 96 ஆம் வருடத்து ஏலியன் தாக்குதலின் பொழுது ஜனாதிபதியாக இருக்கும் பில் புல்மன் தன் உயிரை தியாகம் செய்கிறார். ஆனால், முந்தைய பாகத்தில் குடிக்காரர் ஒருவர் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட, இப்படம் பார்வையாளர்கள் மனதில் எழப்பவில்லை.
மனிதர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் வேற்றுக் கிரகவாசி, பூமியின் மைய பகுதியை ஏன் ஏலியன்கள் குடைகின்றனர், 100 மில்லியன் டாலர்கள் வேட்டையில் இருக்கும் குழுவின் மனநிலை, காங்கோ புரட்சியாளர்களின் தலைவன் தன் சகோதரனுக்காகப் பழி வாங்க நினைப்பது, இடம் பொருள் ஏவல் அறியாமல் சிக்கிக் கொள்ளும் பொருளாதர நிபுனன் என படத்தில் சின்னிஞ்சிறு சுவாரசியங்கள் ஏராளமாக உண்டு.
‘ஏலியன் தாக்கிய பிறகு, மனிதர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகி, 20 ஆண்டுகள் போரும் சண்டைச் சச்சரவுமின்றி மனித இனம் வாழ்ந்தது’ எனப் பெருமை பேசுகின்றனர். படத்தின் முடிவிலோ, ஏலியன்களைத் தொடர்ந்து சென்று, நட்சத்திர மண்டலப் போர்களில் பங்குபெற ஆர்வம் காட்டுகின்றனர். பிரபஞ்சம் முழுவதும் உயிரினங்கள் இருப்பதோடு, தமக்குள் அவை போரிட்டுக் கொள்கின்றன என்றும், வேற்றுக் கிரகவாசிகளில் நண்பர்களும் உளர் எதிரிகளும் உளரென படம் அழுத்தமாகச் சொல்கிறது. இன்னும் பல பாகங்களுக்கான விதையைத் தூவி விட்டே படத்தை முடித்துள்ளார் இயக்குநர் ரோலண்ட் எமிரிச்.