Shadow

இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

கதிர்வேலனின் அப்பாக்கு காதலென்றால் பிடிக்காது. ஆனால் ஆஞ்சனேய பக்தனான கதிர்வேலனுக்கு காதல் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை.

ஓகே.ஓகே.வில் நடித்தவரா என அதிசயிக்க வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தலையை மட்டும் வேண்டிய மட்டும் ஆட்டிவந்தவரின் முகத்தில் சில பாவனைகளும் எட்டிப் பார்க்கின்றன. மீண்டும் அவருக்கு தோதான கதாபாத்திரத்தினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நடனமும் முயற்சி செய்திருக்கார். கேமிரா பற்றிய பிரக்ஞை கூடியுள்ளதால், சிரமமில்லாமல் தன்னை அழகாக திரையில் எக்ஸ்போஸ் செய்கிறார். சந்தானத்தின் துணையில்லாமலேயேகூட அடுத்த படத்தில் துணிந்து தனியாகவே திரையில் தோன்றலாம். அதற்கு அப்படத்திலாவது கதையிருக்க வேண்டியது அவசியம். அட்லீஸ்ட் சுவாரசியமான திரைக்கதையாவது!

மயில்வாகனமாக சந்தானம். கிட்டத்தட்ட அவரின் எல்லாப் படத்தினைப் போலவே, கதாநாயகனின் காதலுக்கு யோசனை சொல்லிச் சேர்த்து வைக்கும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். (உங்களுக்குச் சலிக்கவே சலிக்காதா பாஸ்?) மற்றவர்களைக் கலாய்த்தே கலகலப்பூட்டும் சந்தானத்திற்கு இன்னும் பாடி லேங்குவேஜ் கைகூடவில்லை என்பது பரிதாபமான விஷயம்.

பவித்ராவாக நயன்தாரா. பளிச்சென இருக்கிறார். அவரைவிட அவரது மலையாளம் பேசும் தோழி பளிச்சென இருக்கிறார். காதலிக்கிறோமோ இல்லையா என யோசிப்பதுதான் நயனுக்கு படத்தில் பிரதான வேலை. நயன்தாரா சின்னதாகப் புன்னகத்து விட்டாலே படத்தில் பாட்டுவந்து விடுகிறது. இதேபோல் அரதபழசான காட்சிகளுக்குப் பின் பாடல் போட்டு இன்னும் எத்தனை காலம்தான் இம்சிப்பார்களோ தெரியவில்லை?

Nayantharaபடத்தில் ஆங்காங்கே ரசிக்கும்படியான காட்சிகள் இருந்தாலும் ஒட்டுமொத்த படமாக ஓர் இழுவை உணர்வையே தருகிறது. படத்தின் கதாபாத்திரங்களை ஒவ்வொருவராக அறிமாகும் செய்து முடிக்கும் முன்பே ஒன்றிரண்டு கொட்டாவிகள் எட்டிப் பார்த்து விடுகிறது. ரொம்ப வருடங்களுக்குபின், மயில்சாமி ரசிக்கும்படியான காட்சிகளில் வருகிறார். சுந்தர பாண்டியனில் உபயோகித்த அளவு ஆடுகளம் நரேனை, இயக்குநர் உபயோகிக்கவில்லை எனினும் நரேன் தன் ஆளுமையால் கவரவே செய்கிறார். முக்கியமாக ‘அப்பா’வாக நடிப்பதில் கரைகண்ட ஜெயப்ரகாஷ் உடனான காட்சியில், அப்பாவாக தான் உனர்வதைப் பற்றிச் சொல்லுமிடத்தைக் குறிப்பிடலாம். படத்தில் ஒரு குண்டூசியைக்கூட அச்சுறுத்தும் வகையில் இயக்குநர் காட்டவில்லை என்பது ஆறுதலான விஷயம். ‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷின் நண்பராக வரும் சுந்தரும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். செல்வராகவன் படத்திலேயே அப்பாவியாக நடித்திருப்பவரை வித்தியாசமாகக் காட்டியுள்ளார் இயக்குநர்.

சுந்தரபாண்டியனில் பார்வையாளர்களை இழுத்துப் பிடித்து வைத்திருந்தார் பிரபாகரன். இம்முறை திரைக்கதையின் நேர்த்தியில் அவ்வளவு சிரத்தையோ கவனமோ எடுத்ததாகத் தெரியவில்லை.