
சைக்கிளில் டைனமோ இல்லாமல் சென்ற இருவரை மடக்குகிறார் காக்கி சட்டை காவல்காரர். சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவர் மிடுக்காக இறங்கி, தனது பையில் கை விட்டு தபால் ஆபீசில் தரப்படும் அடையாள அட்டையை எடுத்து நீட்டுகிறார். காவல்காரர் அதைப் பார்த்து விட்டு, “நீங்க போகலாம் சார்” என்று பம்முகிறார்.
“இவன் என் பையன்” என்று பின்னால் அமர்ந்திருந்த பையனை காட்டி, “இந்த காலேஜுல தான் படிக்கிறான். ஏதாச்சும் பிரச்சனைன்னா பார்த்துக்குங்க” என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்.
“சரிங்க சார்.”
1989, கடலூர்..
வேகமாக சென்றுக் கொண்டிருந்த இரு சக்கர வண்டியை நிறுத்துகிறார் காவல்காரர்.
“எங்கடா போற?”
“சகாயம் சார் ட்யூஷனுக்கு.”
“துரை ஏன் இவ்ளோ வேகமா போறீங்க? லைசென்ஸ் இருக்கா?”
“இல்ல சார்.”
“ஓ.. துரைக்கு லைசென்ஸ் வேற இல்லையா?” என்று மீசை கீழ் நான்கு பற்கள் தெரிவது போல் நமுட்டு சிரிப்பை உதிர்ந்தார்.
“எல்.எல்.ஆர். இருக்கு சார்” என்று எடுத்து நீட்டுகிறான்.
அதை வாங்கி பார்த்து விட்டு, “சரி.. சரி.. மெதுவா போ. எல்லாம் உங்க நல்லதுக்கு தான் சொல்றோம்” என்று முனுமுனுத்தார்.
அவன் எடுத்து நீட்டியது தேர்வு அனுமதி சீட்டு. ஆங்கிலத்தில் ஹால் டிக்கெட் என்பார்கள்.
2003, மாமல்லபுரம் (கிழக்கு கடற்கரைச் சாலை)..
அதி வேகமாக செல்லும் மகிழுந்து ஒன்றினை மடக்குகிறார் காவல்காரர். அதிகபட்சமாக 80 கி.மீ. வேகம் செல்ல வேண்டும் என்று அறிக்கை பலகை இருந்த இடத்தில் நூறு கி.மீ. வேகத்தினை தொட்டதால் கப்பம் கேட்க நிறுத்தியிருந்தார். மகிழ்வுந்தின் பின் இருக்கையில் சஃபாரி ஆடை அணிந்திருந்த பெரிய மனிதர் தனது அடையாள அட்டையை எடுத்து நீட்டினார். பெரிய காவல் சலாம் ஒன்றினை போட்டு ஒதுங்கி வழி விட்டார். காவல்காரரிடம் கொடுக்கப்பட்ட அட்டை பின்னிருக்கையில் அமர்ந்திருந்த தனியார் பள்ளி நிறுவன தலைமையாசிரியரின் பணியிட அடையாள அட்டை.
ஆக நகைச்சுவை நடிகர் விவேக் ‘பார்த்திபன் கனவு’ என்ற படத்தில் பள்ளி மாணவர்களின் விடுப்பு கடிதத்தை ஒப்பித்து போக்குவரத்து காவல்காரரிடம் இருந்து தப்புவதென எள்ளி நகையாடியது உண்மை என்றே நிருபனம் ஆகிறது. இவர்களின் இத்தகைய போக்கு அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையை தளர செய்கிறது. மிகுந்த சிரமம் மிக்க துறை எனினும் அதன் பொறுப்புணர்ந்து நடப்பவர்கள் மிக சொற்பமே. அவர்களையும் அவர்களது நேர்மை அடிக்கடி இட மாற்றத்திற்கு வித்திடுகிறது. பொதுவாக அனைத்து காவல்காரரிடம் அதிகார த்வனி மித மிஞ்சியே உள்ளது. தலையில் கொம்பு முளைத்தது போலவே மற்றவர்களிடம் பேசும் உரிமையை காவல்காரர்களுக்கு அளித்தது யார்?
எப்படியாவது போகட்டும். இவர்கள் இருப்பதனால் தான் ஓரளவு பயமற்று மக்கள் இருக்கிறார்கள் என நம்பி இருந்தோம். ஆனால் இப்பொழுதைய நிலைமை என்ன? பொது மக்கள் போலவே வேடிக்கைப் பார்க்கின்றன இந்த காக்கிகளும், கரை வேட்டிகளும். போதும். உங்களையாவது நீங்கள் காத்துக் கொண்டு ஏழையின் வயிறு போல் சன்னமாய் ஒட்டிக் கொண்டிருக்கும் நம்பிக்கையை வருங்காலத்தில் காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.