இவர்கள் எப்பவும் இப்படி தான். எனது கல்லூரி கடைசி ஆண்டின் பொழுது இவர்கள் பள்ளியின் பால் வாசம் மாறாமல் கல்லூரியில் கால் எடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் வந்த சில நாட்களிலியே இவர்கள் ஐந்து வருட காதல் கல்லூரி முழுவதிற்கும் தெரிந்த ஒரு விஷயமாக ஆகி இருந்தது. ‘ஆஹா.. ஏழாவதிலேயே ஆரம்பிச்சிட்டாங்களா?’ என்று நாம் ஆச்சரியத்தில் வாய் பிளந்தால், ஒரு நாளைக்கு இரண்டு வார்த்தைகள் மேல் பேசிக் கொள்ள மாட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலால் திறந்த வாய் தானாக மூடிக் கொள்ளும்.
தவிர்க்க இயலாத சூழலில் ஒரு நாள் இருவரும் ஒன்றாக இரு சக்கர வாகனங்களில் போக வேண்டிய நெருக்கடி. அதை காணும் ஆவலில் நாங்கள் எல்லாம் காத்திருந்தோம். அது என்ன நெருக்கடி என மூக்கு விடைப்பவர்களுக்கு மட்டும் சொல்கிறேன். அன்று பார்த்து ஒரே மழை. ஏரி உடைந்ததால் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக அரை நாள் நிறுத்தப்பட்டது. வீட்டிற்கு செல்வதில் ஆசிரியர்களுக்கு தான் பிரச்சனை. ஓடுற பாம்பை மிதிக்கும் மாணவர்களுக்கு அல்ல என்பது வேறு விஷயம். தனக்காக ஆடா விட்டாலும் தன் காதலிக்காக அவன் ஆடியே தீருவான் என அனைவரும் நம்பினோம். ஆனால் ஆடிப் போனது மீண்டும் நாங்கள் தான். நண்பனிடமிருந்து ‘ஸ்கூட்டி’யை வாங்கி தலைவர் தலைவியிடம் கொடுத்து விட்டு, நண்பனை இவர் அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டார். ‘நல்ல மழையில தனியா போற வாய்ப்பை விட இவனுக்கு எப்படி மனசு வந்தது?’ என நான் புலம்ப, ‘சரி விடு மாப்பி.. இவங்க இவ்ளோ நல்லவங்களா இருக்கிறதால தானே நம்மூர்ல மழையே பெய்யுது’ என்றான் பக்கத்திலிருந்த நண்பன். இதேயே தான் வள்ளுவரும் சொல்லியிருக்காரு என எப்பவோ தமிழ் வாத்தியார் சொன்னது மூளையின் ஓரத்தில் எட்டி பார்த்தது.
நடுவில் ஐந்து வருடங்கள் ஓடியும் இவர்கள் இன்று வரை மாறாதது எனக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து காதலிக்கும் மற்றவர்களையும் கெடுத்து விடுவார்கள் என அவர்கள் மேல் ஏக எரிச்சலாக இருந்தது. இரண்டு நாள் ஆகியும் அந்த நல்லவர்கள் கண்ணில் இருந்து அகல மறக்கின்றனர். இவர்களை மறக்க மீண்டும் ஒரு முறை நல்ல மொழிப் பெயர்ப்பாளருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு போகலாம் என முடிவு செய்த பொழுது செல்லிடப்பேசி ஒலித்தது.
“மாப்பி.. நம்ம மழை பார்ட்டிங்களுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம்.”
இப்படிக் கூடவா உலகத்தில் காதலிப்பவர்களையே கல்யாணம் பண்ணிப்பாங்க என்ற அதிர்ச்சி தாங்காமல் நான்..