Shadow

இன்னுமா இப்படி மனிதர்கள்

   சென்னையில் புறப்பட்டு விழுப்புரத்திற்கு நுழைந்த பிறகு தான் திருக்கோவிலுருக்கு எந்த ரோட்டில் போக வேண்டுமென்ற குழப்பம் ஏற்பட்டது அரசு மருத்துவமனை அருகில் திரும்ப வேண்டும் என்று சொன்னார்கள், அங்கு வந்து பார்த்தால் நான்கு ரோடு பிரிகிறது, எந்த ரோடு எங்கே போகிறது என்று தெரிந்து கொள்ள விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது தான், ஆனால் அதை படிப்பதற்கு எங்கே முடிகிறது. நீத்தார் அறிவிப்பு, பிறந்த நாள் வாழ்த்து என்று ஏகப்பட்ட நோட்டிஸ் ஒட்டும் பலகையாக தான் வழிகாட்டும் பலகை பயன்படுகிறது.

    மருத்துவமனை மூலையில் காரின் வேகத்தை குறைத்து கையில் துணிப்பையுடன் நின்ற ஒருவனிடம் அரகண்டநல்லுருக்கு எப்படி போக வேண்டும் என்று வழி கேட்டேன். இதோ இப்படி மேற்கு பக்கமா போற ரோடுதான் சார். இங்கிருந்து சரியா பதினாறு மைல்தான் சார், என்றார் சரி ரொம்ப நன்றி என்று வண்டியை நகர்த்த போனேன். சார் சார் ஒரு நிமிஷம் நீங்கள் எந்த ஊர் வரை போகிறீங்க என்று கேட்டான். அரகண்டநல்லூர் வரை தான் போகிறேன் என்று நான் பதில் சொல்லவும் நானும் அங்க தான் போகனும், காரில் ஏறிக்கலாமா சார் என்று கெஞ்சலாக கேட்டான்.

   குழி விழுந்த கன்னமும், நரம்பு தெரியும் உடல்வாகும், கரிய நிறமும், கெஞ்சலான கண்ணும் அவனை அப்பாவி என்று சொல்லாமல் சொல்லியது. பொதுவாக அடையாளம் தெரியாதவர்களை நடுவழியில் ஏற்றிக் கொள்வது நடைமுறைக்கு உகந்ததல்ல, வருபவனின் குணம் என்ன? நோக்கம் என்ன? என்பது நமக்கு தெரியாது. அவன் நம் கழுத்தில் கத்தி வைத்து திருட வரலாம், காரை கூட கடத்தலாம் அட முரட்டு அசாமியாக இல்லாது நோஞ்சானாக இருக்கிறான் என்றால் கூட திடிரென நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழந்து விட்டான் என்றால், எங்கே சேர்ப்பது, யாருக்கு தகவல் கொடுப்பது இப்படி எத்தனையோ சிக்கல்களை யோசித்து தான் அந்த பழக்கத்தை வைத்து கொள்வது கிடையாது. ஆனாலும் இவன் முகத்தை பார்க்கும் போகும் ஏனோ ஏற்றிக்கொள்ள தோன்றியது.

    நீ மட்டும் என்றால் ஏறிக்கொள் நான்கு ஐந்து பேர் என்றால் முடியாது. என்றேன். அத்தனை பேர் எல்லாம் இல்ல சார் நான் மட்டும் தான், என்று காரின் முன்னிருக்கையில் ஏறிக் கொண்டான். கார் புறப்படவும் ஏ.சி. நல்லா குளிராயிருக்கு சார். இப்படியே இருந்தா எம்மா தூரம் என்றாலும் வலிக்காமல் போய்கிட்டே இருக்கலாம் என்று பேசினான். நான் பதில் சொல்லவில்லை. சிலருக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டே போவார்கள். பதில் சொல்லி மாளாது. எப்போ கல்யாணம் பண்ணினே. காலையில் சாப்பிட்டது. இட்லியா இடியாப்பமா? என்பது வரையில் கேட்பார்கள் அடுத்தவர் விஷயத்தை தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு.

  அரகண்டநல்லூருக்கு புதுசா தான் வறிங்களா? என்றான், அதற்கு தலையை மட்டும் ஆட்டினேன். அங்கே யார் வீட்டுக்கு போறிங்க என்று அடுத்த கேள்வியை தூக்கி வைத்தான், இதற்கு தலையாட்டி பதில் சொல்ல முடியாதே, வாய் திறந்தே ஆக வேண்டும், அதனால் பலராமன் நாயக்கர் வீட்டுக்கு என்றேன்.

    அடடே நம்ம முதலாளி வீட்டுக்கா நான் அவருடைய நிலத்தில் தான் பயிர் செய்கிறேன். ரொம்ப நல்ல மனுஷன் சார் அவர். என்று சொன்னான். அதற்கு நான் எந்த பதிலும் திரும்ப பேசவில்லை. எனது கவனம் எல்லாம் சாலையிலேயே இருந்தது சாலையின் இரு புறமும் மிக நீளமாக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. மிக சிறிய ரோட்டில் ஒதுங்க கூட முடியாமல் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவது கையிற்றின் மேல் நடப்பது போல் சிரமமாக இருந்தது.

   அந்த கஷ்டத்தையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் அந்த மனிதன் இல்லை பேச்சு சுவாரஸ்யம் அவனை பற்றி கொண்டது போல தெரிகிறது அப்படியா மேலே சொல் என்று நான் கேட்டது போல அவனுக்கு தோன்றியதோ என்னவோ? நாயக்கர் மாதிரி மனுஷங்களை பார்ப்பது ரொம்ப அரிது. காலங்காத்தால சூரியன் முளைக்கும் முன்பு கழுனியில் இருப்பார். வரப்பு வெட்றவன் களையெடுப்பவள் எல்லோருக்குமே, நாயக்கர் தான் சாமி வயித்த வலிச்ச புள்ளையை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனியா? மாமியக்காரி கீழே விழுந்து கால ஒடிச்சிக் கிட்டாளே இப்போ எப்படி இருக்கு என்று ஒவ்வொன்னா ஞாபகம் வச்சி விசாரிப்பார்.

   சில பேருங்க வார்த்தையில மட்டும் வெல்லத்த தடவி பேசுவாங்க. பத்து பைசா உதவின்னு போனா அறுத்துகிட்ட கைக்கு சுண்ணாம்பு தரமாட்டாங்க, ஆனா நாயக்கர் அப்படியில்லை, கேட்டாலும் செய்வார் கேட்காமல் இருந்தாலும் முககுறிப்பை பார்த்தே செய்வாரு நான் நேத்து கொடுத்தேனே இன்னிக்கு நீ வந்து உழைச்சி தான் தீரமுண்ணு வலுகட்டாயம் பண்ண மாட்டாரு அவ்வளவு நல்ல மனுஷனுக்கு ஆண்டவன் கொடுத்த கஷ்டம் இருக்கே, கொஞ்ச நஞ்சம் இல்லை ராஜாவா அலங்கரிச்சு நின்ன ராமனை காவி கட்டிகிட்டு காட்டுக்கு போன்னு சொன்ன சோதனையை விட அதிகமாக எங்க ஐயா வேதனையை அனுபவிச்சாரு ஆனாலும் அவரு முகத்துல ஒரு நாள் கூட வாட்டத்த பார்த்ததேயில்ல. மத்தாப்பு கொளுத்தின மாதிரி சிரிப்ப மட்டும் தான் பார்த்திருக்கேன்.

இப்பொழுது அவன் பேசுவதில் எனக்கு ஆர்வம் பற்றி கொண்டது. அப்படியென்ன உங்க ஐயா யாரும் அனுபவிக்காத கஷ்டத்தை அனுபவிச்சிடாரு என்று கேட்டேன். கேள்வி கேக்காமலே மடை திறந்த வெள்ளமாக கொட்டுகிற அவனுக்கு கேள்வி கேட்டால் போதாதா?

     இருக்கையில் தாராளமாக சாய்ந்து கொண்டான் . காருக்கு சொந்த காரணான நான் கூட இப்படி சாய்ந்து பயணம் செய்திருப்பேனா என்பது சந்தேகம் தான், நாயக்கர் சம்சாரம் கூட முதல் பிள்ளை பெற்ற பிரசவ அறையிலிருந்து பொணமாக தான் வெளியில் வந்தாங்க தாயை விழுங்கிவிட்டு பிறந்த அவர் குழந்தை அப்பாவுக்கு இன்னும் கஷ்டத்தை கொடுக்க போறோம் என்று தெரியாமலே சிரிச்சிகிட்டு கிடந்தது.

   நம்ம சுகத்துக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டா புள்ள வாழ்க்கை கருகி போயிடும்ன்னு இரண்டாங் கல்யாணத்த பற்றி அவர் யோசிக்கவே இல்ல. அந்த பெண் குழந்த சரசரன்னு வளர்ந்து குமரியா சமைஞ்சி நின்னபபோ ஊரே ஆச்சர்யப்பட்டு மூச்சி விட முடியாம நின்னு போச்சு அழகுன்னா அழகு அப்படியொரு அழகு, என் ஆயுழுக்கும் அவ்வளவு அழகான பொண்னை இன்னுவர பார்த்ததே இல்ல, சந்தனத்த கரைச்சி விட்ட மாதிரி ஒரு நிறம், பார்த்து பார்த்து செய்ஞ்ச செல ஒன்னு உசுரோட நடந்து வர மாதிரி இருக்கும் அந்த பொண்ணு வர்றது.

    தன் மக பேர்ல உசுரையே வச்சிருந்தார் நாயக்கர், அந்த பொண்ணு எத கேட்டாலும் அடுத்த நிமிஷமே வாங்கி கொடுத்திடுவார், அந்த பெண்ணையும் சும்மா சொல்ல கூடாது, பணக்கார குடும்பத்தில பொறந்திருக்குகோம் பார்க்கிறவ கண்ணு படும்படியா அழகா இருக்கோம், என்கிற கர்வம் துளிகூட கிடையாது. நல்லா படிக்கும், எல்லோர்கிட்டேயும் அனுசரனையா நடக்கும் அத்தன நல்ல குணம் இருந்த அந்த படுபாவி மகள் கடையிசில எங்க ஐயா தலையில கல்ல தூக்கி போட்டுட்டா இப்படி சொன்ன அவன் கொஞ்ச நேரம் மௌனமாகி விட்டான். அவன் மனதிற்குள் அழுகையும் ஆக்ரோஷமும் மாறி மாறி ஒடிக் கொண்டிருப்பதை முக பாவம் காட்டியது. அந்த பொண்ணு ஒன்ணு செத்து போயிருக்கலாம் இல்லன்னா நாயக்கர கொலை செஞ்சியிருக்கலாம். இரண்டுமே செய்யாத வந்த படுபாவி படிக்க போன இடத்தில யாரே ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன கல்யாணம் செஞ்சிகிட்டு எங்க ஐயா தலையில மண்ணவாரி போட்டுட்டா என்று அவன் சொல்லும் போது கோபத்தில் உதடுகள் துடிப்பதையும் கண்ணில் நீர் முட்டி நிற்பதையும் என்னால் காண முடிந்தது.

      அவனை சமாதான படுத்துவதற்காக என்று நினைத்து கொண்டு ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்வதெல்லாம் இப்போது சகஜமாகி விட்டது. இதில் கௌரவ குறைச்சல் ஒன்றுமில்லையே என்று சொன்னது தான் தாமதம் புலி போல என்ன திரும்பி பார்த்தான், மனித கண்களில் நெருப்பு எரியும் என்பதை அப்போது தான் நேருக்கு நேராக பார்த்தேன்.

   கௌரவத்தை பற்றி பட்டணத்தில் வாழும் உங்களுக்கு என்ன தெரியும், நாலு பேர் எழுந்து நின்று வணக்கம் போடுவது தான் நீங்கள் கண்ட கவுரவம் எல்லாம், கிராமத்தில கௌரவம் என்பது எத்தனை பேர் கும்மிடு போடுகிறான் என்பதை வைத்து பார்ப்பதில்லை. கும்மிடுகிற மனுசன் நம்மை பற்றி என்ன நினைக்கிறான் என்பதில் தான் எங்கள் கௌரவமிருக்கிறது வழக்கு வம்புன்னாலுமு;, திருவிழா கொண்டாட்டம் என்றாலும் எங்க நாயக்கர் சொல்லு தான் முடிவானது, வீட்டிலிருக்கும் பொம்பள பிள்ளை எவனோடு ஒடி போனபிறகு அதுவும் ஜாதி கெட்ட பயலோட போன பிறகு தலை நிமிர்ந்து பேச முடியுமா? பேசினாலும் இவன் ரொம்ப யோக்கியன்டா என்று ஊரார் நினைக்க மாட்டானா இந்த நெனப்பாலேயே சிங்கம் மாதிரியிருந்த நாயக்கர் ஒடிஞ்சி போயி பல வருஷமா வீட்ட விட்டே நகருவதில்லை. என்றான்.

   இப்போது நான் அவனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை, கார் இரண்டு புறமும், கரும்பு தோப்பு இருக்கும் சாலையில் சொன்று கொண்டிருந்தது பள்ளம், மேடு அடிக்கொரு முறை குறுக்கீட்டதால் பிரேக் போட்டு போட்டு கால் வலித்தது, ஒரு மரத்தடியில் காரை ஒரங்கட்டி இயற்கை உபாதைக்கு இறங்கினேன், அவனும் இறங்கினான், இறங்கியவன் சார் பேச்சிவாக்கில் கேட்கவே மறந்திட்டேன் . நீங்க எங்க நாயக்கருக்கு என்ன உறவு, இல்லன்னா தெரிஞ்சவங்களா? என்று கேட்டான்.

  மெதுவாக நடந்து வந்து காரில் அமர்ந்த நான் அவன் வரும் வரை காத்திருந்தேன் கிராமபுறத்தார்கள் பேசுவதில் மட்டுமல்ல மற்ற காரியங்களையும் கூட நீட்டி முழுக்கி தான் செய்வார்கள் என்பதை அவர் காரியம் நிருபித்தது, மிக நிதானமாக வந்து கார் கதவை திறக்க முயன்ற அவன் நான் கேட்டதற்கு இன்னும் பதிலே சொல்லவில்லையே என்று கேட்கவும் நிலைமையை உணராமலே உங்கள் நாயக்கர் மகளை காதலித்து கல்யாணம் செய்தது நான் தான் என்றேன்.

தொட கூடாததை தொட்டது போல் காரிலிருந்து கையை எடுத்தான், இத்தனை நேரம் அவன் கண்ணில் தெரிந்த மரியாதை காணாமல் போய்விட்டது ஒரு அற்ப புழுவை பார்ப்பது போல் என்னை பார்த்தான் சீட்டுக்கு அடியில் இருக்கும்பையை எடுத்து வெளியில் போடு என்று சடார் என ஒருமையில் பேசினான், கோபத்தில் அவன் உடல் நடுங்குவதை காண முடிந்தது மௌனமாக பையை எடுத்து நீட்டியேன்.

அதை கையில் வாங்கிக் கொள்ளவில்லை அவன் கீழே வையென்றான் கோபத்தில் தூக்கி வீசினேன் பையை எடுத்தவன் திரும்பி பார்க்காமலேயே நடக்க ஆரம்பித்தான்.

   என் இதயத்தை யாரோ பிசைவது போல் இருந்தது. அவன் என்னை உதாசினம் செய்தது நான் தாழ்ந்த ஜாதிகாரன் என்பதாலா? அவன் முதலாளியின் சந்தோஷத்தை கொன்றவன் என்பதாலா? என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை.

  எனக்குள் அவமானமும், இனம் புரியாத சோகமும் மாறிமாறி வந்தது கார் இருக்கையில் அப்படியே அமர்ந்து விட்டேன். எவ்வளவு நேரம் அப்படியிருந்தேன் என்று தெரியாது சாலையில் யாரோ பேசும் ஒலி கேட்டது. இரண்டு சிறுவர்கள் தங்களுக்குள் பேசி கொண்டவந்தனர்

                           டேய் அவன் எல்லாம் மாற மாட்டான்டா அவன் மாற நினைச்சாலும் யாரும் உடமாட்டாண்டா

  எதற்காகவோ அவர்களுக்குள் பேசிய பேச்சு அது

அது தான் எனக்கும் பதிலோ?

– யோகி ஸ்ரீராமானந்த குரு