Search

இன்னொரு பொட்டலம் கொடுங்கள் அவனுக்கு

தலைவனின்
சின்ன வீட்டிற்கு பிறந்த
பெரிய பையனின் பிறந்தநாள்
ஊரெல்லாம் கொடி, பட்டாசு, தோரணம்
தொண்டர்களின் காசில்

அவன் வீட்டின்
அடுப்பில் பூனை தூங்குகிறது
தலைவர் வரும்பொழுது எதுவும் குறுக்கே வரக்கூடாது
அதனால் இந்த பூனைப்படை

சுவரொட்டிதனில்
அவனைப்பார்த்து சிரிக்கிறார்
விரைவில் உனக்கு வேலை வாங்கித்தருகிறேன்
என பணத்தை வாங்கும்பொழுது சிரித்த அதேதங்கப்பல்லுடன்

மேலே
கையை தூக்கி காட்டும்பொழுதெல்லாம்
நானிருக்கிறேன், உதவிசெய்கிறேன்
உங்களுடன் நான் என பேசுவார்
இப்பொழுதுதான் புரிகிறது
எப்பொழுதுமே எனக்கு கீழேதான் நீங்கள்
உங்களுக்கு மேலேதான் நானென்பதை அப்படிச்சொன்னாரென

இன்னும் சில கொண்டாட்டங்கள் இன்றிரவாம்
கூட்டத்தில் மிதிபட்டுக்கொண்டே வாங்கவிருக்கும்
அந்த உணவுப்பொட்டலத்திற்காக
காத்துக்கொண்டிருகிறான் இன்னுமவன் …

ஒருவனின் பிறந்தநாள்
எத்தனை உயிர்களின்
இறந்தநாளாக மாறுகிறது
பிரியாணி

நான் இருபது ஆண்டுகளாக
தொண்டனாகவே இருக்கிறேன்

– சே.ராஜப்ரியன்