சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது. அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மனமில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்க்கை பயணமே ’ஆந்திரா மெஸ்’.
“அனைவரும் அதென்ன ஆந்திரா மெஸ்னு தலைப்பு என்றே கேட்கிறாங்க. தலைப்பு ரொம்ப கவர்ச்சியாக இருக்கு. அப்புறம் சாப்பாடு. அனைவருக்கும் பிடிச்ச விஷயம். இதுல ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கிறது. காரம், புளிப்பு, ஸ்வீட் என கதாபாத்திரங்களின் metaphor (உருவகம்) தான் தலைப்பு. படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை மெட்டோஃபர் தான்.
படத்தில் ஹீரோ, ஹீரோயின் இல்லை. ஏன்னா முதல் சீன்ல ஹீரோவாகத் தெரிஞ்சவன் மூணாவது சீன்ல வில்லனாகத் தெரிவான். ஒருவரிடம் கடன் வாங்கும்பொழுது அவர் ஹீரோவாகத் தெரிவார்; அவரே நாளைக்கு கடனைத் திருப்பிக் கேட்கிறப்ப வில்லனாகத் தெரிவார்.
ஸ்நூக்கர் விளையாட்டு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அந்த விளையாட்டில் எப்படி மேஜையில் உள்ள ஒரு பந்தைக் குறிவைத்துத் தள்ளும்பொழுது அது வேறொரு பந்தை மோதி அது சம்பந்தமே இல்லாத மற்றொரு பந்தை இடித்து அதன்மூலம் வேறு ஒரு பந்து சென்று பள்ளத்தில் விழுகிறதோ அதைப்போலவே ஆந்திரா மெஸ் கதைசொல்லும் முறையும் இருக்கும்.
நடிகர்கள் முற்றிலும் புதியவர்கள். ஏ.பி.ஸ்ரீதர் ஒரு ஓவியர், ராஜ்பரத் – ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வில்லனாகப் பார்த்திருப்பீங்க. மதிவாணன், ஜான் சந்தீப் போன்றவர்கள் எல்லாம் தியேட்டர் ஆர்டிஸ்ட். எனக்குப் படத்தில் ரொம்ப பிடிச்ச ரோலை வினோத் பண்ணியிருக்கார். கஸ்தூரி முக்கியமான ரோல் பண்றாங்க.
நான் விளம்பரத்துறையில் க்ரியேட்டிவ் டைரக்டராக வளர்ந்துட்டு வந்தேன். பாலாவும் விளம்பரத் துறைதான், என் ப்ரெண்ட். அவர்தான் நல்ல கதை சொல்றீங்க.. படம் பண்ணலாம்னு கேட்டார். நான் வேணாம்னு சொன்னேன் ஆனா இழுத்து வந்துட்டார். புதுசா ட்ரை பண்ணலாம்னு.. இதுவரைக்கும் தமிழில் வராத wacky film genre பண்ணியிருக்கோம்.
படத்தில் மியூஸிக் செய்வது பிரசாந்த் பிள்ளை. இவர் ஹிந்தில ‘சைத்தான்’, ‘டேவிட்’ அப்புறம் மலையாளத்தில் ‘ஆமென்’ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கார். எங்களுக்கு ஹிட் சாங்ஸ் தரணும்னு எண்ணமில்லை. படத்துக்குத் தேவையான புது சவுண்ட்ஸை உருவாக்கணும்னுதான் ஆசை” என்றார் அறிமுக இயக்குநர் ஜெய்.
“உங்களைப் படத்தில் நடிக்க வைக்கணும்னு ஆசப்படுறாங்க என ஃபோன் வந்தது. நான் கேலரிக்கு வரச் சொன்னேன். என்னுடைய ஸ்டில்ஸ்லாம் எப்படியோ பார்த்திருக்கங்க. பார்க்க பி.சி.ஸ்ரீராம் மாதிரி வேற இருக்கேன்னு சொல்லிட்டாங்க. என்னப் பண்ணணும்னு கேட்டேன். பணத்தைத் தூக்கிட்டு ஓடணும் அண்ணான்னு சொன்னாங்க. எவ்ளோன்னு கேட்டேன். கோடிக்கணக்குலன்னு சொன்னாங்க. உடனே நிகிலுக்கு ஃபோன் பண்ணி, ‘என்னப் பண்ணலாம்’னு கேட்டேன். நல்ல வாய்ப்புய்யா.. பணத்த எடுத்துக்கிட்டு ஓடுன்னு சொன்னார். நானும் ஓடிட்டேன்.
தாடியை வெள்ளையாக்கணும்னு சொன்னாங்க. ஏதோ எடுத்துட்டு வந்து தடவுனாங்க. அது பிளாஸ்டிக் மாதிரி பிடிச்சிக்கிச்சு. ‘சார் இயற்கையாவே எனக்கு வெள்ளை தாடிதான். இப்போ கருப்பாக்கியிருக்கேன். 15 நாளுக்கு அப்புறம் வெள்ளை தாடியாக தானா மாறிடும்னு சொன்னேன். சரின்னு 15 நாள் விட்டுட்டாங்க. அப்படின்னுதான் நினைச்சேன். ஆனா கூத்துப்பட்டறையில் இருந்து சஞ்சீவின்னு ஒருத்தரை நடிக்கச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு பண்ணாங்க. 15 நாள்தான். ஆனா பெண்ட்டை நிமித்திட்டாரு.
ஒரு கேள்வி கேட்பார். நான் பதில் சொல்வேன். ‘அதெப்படி சார் சொல்றீங்க?’ன்னு கேட்பார். என்ன பதில் சொல்ல முடியும்? எனக்குத் தெரிஞ்சதை வாயாலதான் சொல்லமுடியும். சாதாரணமாக இருங்க சார்னு சொல்லிச் சொல்லி, என்னை சாதாரணமாக ஆக்கிட்டார். இப்படிதான் வேணும்னு ஜெய் கேட்டிருப்பார் போல! இயக்குநர் ஜெய்க்கு ஃபோன் செய்து, ‘அவரை சாதாரணம் ஆக்கிட்டேன்’ என சொன்னார் சஞ்சீவி. சாதாரணமாகி என்னப் பண்ணியிருக்கேன்னு படத்தில் பார்த்தப்பதான் தெரியுது” என்றார் பிரதான நடிகரான ஏ.பி.ஸ்ரீதர்.
ஆந்திரா மெஸ்க்குப் போயிட்டு வந்தால் கிடைக்கும் திருப்தி, கண்டிப்பாக இப்படம் பார்க்கும் பொழுதும் கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தது ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் டீம்.