“அத்தே என் பிரண்டு ப்ரியாவோட பொண்ணு கல்யாணத்துக்கு நாளைக்கு போனும் .அவர்க்கு ஆபீஸ்ல வேலை இருக்காம் ..வரமுடியாதாம் …கூட வரீங்களா ?
“நாளைக்கு பக்கத்து வீட்ல பால் காச்றாங்க சுகந்தி .ரெண்டு தடவ வந்து அந்தம்மா சொல்லீட்டு போனாங்க ..போகலைனா நல்லா இருக்காது …நீயும் சுரேஷும் போயிட்டு வாங்க ..அவனுக்கு நாளைக்கு காலேஜ் லீவ் தான “
“சரிங்கத்த “
“டேய் சுரேஷ் நாளைக்கு என்னோட ஒரு கல்யாணத்துக்கு நீ வரணும் ..நாளைக்கு காலேஜ் லீவ் தான ..ஏதாது ஸ்பெஷல் கிளாஸ் இருக்கா ?”
“நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இல்ல ஆனா கிரிகெட் கோச்சிங் இருக்குமா “
“ஒரு நாள் போலனா உங்கோச் ஒன்னும் தலைய வெட்டிட மாட்டாரு “
“சரி …எப்பிடியும் நீ விடப்போறதில்ல ..வழக்கம் போல கோச் கிட்ட ஏதாது போய் சொல்லிகிறேன் “
“என்னமோ பண்ணு …கல்யாணத்துக்கு மட்டும் வந்திரு சாமி “
மறுநாள் காலையில் சுகந்தியும் அவள் மகன் சுரேஷும் கல்யாணத்திற்கு பைக்கில் புறப்பட்டனர் …
“டேய் அந்த பூக்காரம்மா கிட்ட பைக்க ஸ்டாப் பண்ணுடா “
“ஏம்மா பூவல்லாம் நேத்தே வாங்கக்கூடாதா ? இது ஒன் வே .இப்போ நாம சுத்தி போகணும் ..அட்லீஸ்ட் முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல…”
“சரிடா சரிடா கோச்சுக்காத ..என்ன கிப்ட் வாங்கலாம்னு யோசிச்சிட்டே சொல்ல மறந்துட்டேன் “
“என்னது இன்னும் கிப்ட் வாங்கலையா ?கிழிஞ்சுது …அது சரி .எப்போ முகூர்த்தம் ?
“முகூர்த்தத்துக்கு இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்குடா ..டென்ஷனாகாதடா “
“அந்த பூக்காரம்மா பக்கத்துலையே ஒரு கிப்ட் கேலரி ஷாப் இருக்கு பாரு ..பூவும் கிப்டும் வாங்கிட்டு அப்படியே கல்யாண மண்டபத்துக்கு போக வேண்டிதான்..மண்டபம் கிட்டதானடா ..அதான் போற வழியில வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன் “
“என்னமோ சொல்ற போ.அதுகப்ரம் நான் கல்யாண மண்டபத்துலதான் நிறுத்துவேன் சொல்லிட்டேன் .அப்புறம் வேற கத எதாச்சும் சொல்லாத “
“சரி டா ..ரொம்பத்தான் அலுத்துகுற..”
“ஒரு மொழம் பூ எவ்ளோ மா ?”
“பத்து ரூபா மா “
“பத்து ரூபாவா ? ரொம்ப ஜாஸ்தி .அஞ்சு ரூபாக்கு குடு “
“பத்து ரூபா எங்க இருக்கு .அஞ்சு ரூபா எங்க இருக்கு ..கொஞ்சமாது நியாயமா கேளும்மா .”
“அதுக்குன்னு ஒரு மொழம் பத்து ரூபாலாம் ரொம்ப அதிகம் ..வேணும்னா ஆறு ரூபா வச்சுக்கோ “
“அதுக்கு நீ இனாமா வாங்கிக்கலாம் …நானே ஒரு மொழம் ஏழு ரூபாக்கு வாங்கி இருக்கேன் …ஆறு ரூபா கட்டு பிடி ஆகாது …இன்னைக்கு முகூர்த்த நாள் வேற”
“சரி ஏழு ரூபா வச்சுக்க “
“சரிமா உனக்கு வேணாம் எனக்கும் வேணாம் எட்டு ரூபாக்கு வாங்கிட்டு ஆளவுடும்மா நீ “
“சரி போ ..மொழம் எட்டு ரூபா ..என்ன பண்றது கலி முத்திபோச்சு.கவர்ல வேணாம் அப்பிடியே குடு “
“வாடா அந்த கிப்டு ஷாப்புக்கு போலாம் “
“ஏம்மா ஒரு பத்து ரூபாய்க்கு ஏம்மா இப்பிடி பேரம் பேசுற ..மானமே போகுது ..அங்க ஏதும் பேச வேணாமேன்னு பாத்தேன் ..ஒரு பத்து ரூபால பெருசா என்ன ஆயிடப்போகுது …ஒன்ன திருத்தவே முடியாது …அப்பா எப்பிடிதான் ஒன்ன இவ்ளோ வருஷம் சமாளிக்குறாரோ .அவருக்கு தான் வெளிச்சம் “
“போடா போடா ..ஒனக்கு இதலாம் புரியாது ..நீ சின்ன பையன் “
“இன்னைக்கு போய் நான் ஒன்கிட்ட மாட்டுவேனா ..என் விதி “
“விட்ரா அந்த விநாயகர் சிலை சூப்பரா இல்ல… வெல என்னனு பாரு “
“1000 ௦௦௦ ரூபா மா “
“என்னடா சொல்ற ..ஆயிரம் ரூபாவா ..அப்பிடி என்னடா இருக்கு இதுல்ல ?”
“இதுல இருக்குற வேலப்பாடுக்கே நீ 1000 ரூபா தாராளமா தரலாம் “
” நான் போய் பேசி பாக்கறேன்”
“எக்ஸ்க்யூஸ் மீ சார் .வீ வுட் லைக் டு பை திஸ் ஐடல் .குட் யூ ப்ளீஸ் ரெட்யூஸ் தி ரேட் “
“மேடம் ஐ கெஸ் யூ டிட் நாட் சீ தி போர்ட் அட் தி என்ட்ரன்ஸ் “
அப்பொழுதுதான் அவள் பார்த்தாள் .”நோ பார்கெயின் ப்ளீஸ் “என்று எழுதியிருந்த பலகையை .
“ஓ சாரி ஐ டின் சீ தட் போர்ட் .ப்ளீஸ் கிப்ட் ராப் இட் அண்ட் புட் தி பில் “
“சூர் மேடம் “
“ஏம்மா இப்போ பேரம் பேசவேண்டிதான?பத்து ரூபாய்க்கு அவ்ளோ நேரம் பேசுன ..இப்போ என்னாச்சு “
“அது வந்து ….அது வந்து …சரி விட்ரா இனிமே பேரம் பேசல என்றவாறே அந்த பூக்காரம்மாவை பார்த்தாள் …”
அப்போதும் யாரோ அவளிடம் பேரம் பெசிக்க்கொண்டுதான் இருந்தனர் “