Shadow

இயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய்

இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ மேனனுக்கும், அவரது பட தயாரிப்பு நிறுவனமான ‘ஃபோட்டான் கதாஸ்’ நிறுவனத்துக்கும் இது தங்கமான நேரம் என்றுதான் சொல்ல வேண்டும் .தங்க மீன்கள் படத்துக்கு கிடைக்கும் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து  தரமான வித்தியாசமான கதைகளை,  தகுதியான திறமையானவர்களை தேர்ந்தெடுக்கும் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பான ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்‘ திரைப்படத்தின் தொடர்ந்து நடைபெற்று வரும் படப்பிடிப்பால் மிகவும் உற்சாகமாக உள்ளனர். ஹைதராபாத் நகரில் நடை பெறும்  இந்த தமிழ் தெலுங்கு இரு மொழியில் தயாராகும் இந்தக் காதல் கலந்த நகைச்சுவை படத்தின் இயக்குனர் பிரபு தேவாவிடம் இணை இயக்குனராகபணியாற்றிய பிரேம் சாய். இவர் சின்னத் திரையில் நடித்துக் கொண்டிருந்த பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் இயக்குநர் பிரேம் சாய் பற்றி தயாரிப்பாளர் கௌதம் கூறும் போது, “பிரேம் சாய்  என்னை மிகவும் கவர்ந்த திறமையான இயக்குனர். எதையும் திட்டமிட்டு  நேர்த்தியுடன்  செயல்பட்டு வரும் அவருடைய தொழில் நேர்த்தி, தெளிவான சிந்தனை, தன்னுடைய கதையின் மேல் அவர் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கை மற்றும் எண்ணத்தையும் எழுத்தையும் படமாக்கும் திறமை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது” என்றார் . 

காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படங்களின் ஆஸ்தான நாயகன் ஜெய் இப்படத்தில் நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் யாமி  கௌதம். இவர்களுடன் சந்தானம் , வி.டி.வி.கணேஷ் , நாசர், அஷுடோஷ் ரானா மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ரஷ்ஷஸ் பார்த்த பின்னர்தான்  பிரபு  தேவா யாமி கௌதமை தன்னுடைய ஹிந்திப் படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது. பின்னணி பாடகர் கார்த்திக்கின் இசையமைப்பில்  இப்படத்தின் ‘பார்’ பாடல் ஒன்றுக்காக கோவாவில் இசைக் கோர்ப்பு நடந்தது. ‘கொரியர் பாய் கல்யாண்’ என்ற தலைப்பில் நிதின் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் ஏக எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது . அடுத்த மாதம் வெளிவர உள்ள தங்களது தங்க மீன்கள் படத்தினுடன், இப்படத்தின் டீசர் வெளியிட திட்டமிட்டு உள்ளனர் ஃபோட்டன் கதாஸ் நிறுவனத்தினர்.