“எங்க ஊர்ல படம் பார்த்துட்டு வருபவர்களிடம், படமெப்படின்னு கேட்பேன். அவங்க நல்ல படம் எனச் சொன்னால், படத்தின் எத்தனை சண்டைக் காட்சி எத்தனை கற்பழிப்புக் காட்சின்னு கேட்பேன். அவங்களும் நாலு சண்டைக் காட்சி, ரெண்டு கற்பழிப்புக் காட்சி என கணக்கு சொல்வாங்க. இந்த மாதிரி படம்லாம் நான் ரசிச்சுப் பார்த்துட்டு இருந்தேன். அப்போ நான் பதினொன்னாவது படிக்கிறப்ப மண் வாசனைன்னு ஒரு படம் பார்த்தேன்.
ஜெயமோகன் சார் ஓரிடத்தில் சொல்லியிருப்பார். வியாபார நோக்கத்தோடு எழுதப்படுற எழுத்த மட்டும் தொடர்ந்து வாசிச்சுட்டு, ஓர் இலக்கியப் படைப்பைப் படிக்கு நேரும்பொழுது அவன் திடுக்கிட்டு மிரண்டிடுவான். இதுவரைதான் படித்தது அனைத்தும் ஒன்னுமில்லே என அவனுக்குத் தோன்றும். உண்மைன்னா என்னன்னு காட்டும் இலக்கியம்.
அதுபோல், இயக்குநர் இமயத்தின் “மண்வாசனை” படம் எனக்கு நிஜத்தைக் காட்டியது. இதுவரைக்கும் பார்த்தது படமே கிடையாதுன்னு தோணுச்சு. ஸ்க்ரீன்-பிளே பற்றி பாக்கியராஜ் சார் சொல்லுவார். உன்னாலேயே அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சை ஸ்க்ரீன்-ப்ளேவில் போடணும். அவிழ்க்கவே முடியாத ஒரு முடிச்சைப் போட்டுத்தான் இந்தப் படத்தை முடிச்சிருக்கேன்ன். பாரதிராஜா சாரும், பாக்கியராஜ் சாரும் என் படத்து இசை வெளியீட்டுக்கு வந்ததை மிகப்பெரிய பரிசாகக் கருதுகிறேன்” என்றார் இயக்குநர் M.மருதுபாண்டியன்.
“சீனியராக இருப்பது ரொம்ப கொடுமையான விஷயம். குத்து விளக்கு ஏத்த வா, பாடல் வெளியீட்டு விழா, ட்ரெயிலர் ரிலீஸ் என எதற்காவது கூப்பிட்டுட்டே இருப்பாங்க. இன்னிக்கு மருதுபாண்டியன் எப்படிப் பேசினானென ஆச்சரியமா இருக்கு. வார்த்தைகளை மென்னு முழுங்குவான். பேசுறதே இந்த லட்சணத்தில் இருக்கு, என்னத்த படமெடுத்துன்னு நான் யோசிச்சுட்டிருந்தேன்.
சினிமா கனவுகளைச் சுமந்து வருபவனின் கதை சொல்லி சிம்பத்தி வாங்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனால் இப்படத்தில் அதைச் சொல்லி, பார்ப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துற வண்ணம் எடுத்திருக்கான்.
நான் கொஞ்சம் காமெடி, ஃபேன்டஸி, கம்ர்ஷியலென இருக்கும். மண்வாசனையில கொஞ்சம் எதார்த்தம், ரொம்ப எதார்த்தம்னா கருத்தம்மாவைச் சொல்லலாம், முதல் மரியாதையில் கொஞ்சம் சினிமா கோட்டிங் இருக்கும். ஆனா சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படம் எந்தப் பூச்சுமில்லாத நிதர்சனமான படம். எங்கயும் சினிமாத்தனம் கிடையாது. படம் ரொம்ப அற்புதமா வந்திருக்கு. படம் பார்த்துட்டு கொஞ்ச நேரன் ஸ்டன் ஆயிட்டன். எனக்கு சந்தேகம். நிஜமாகவே இவன்தான் எடுத்தானா என?
இதில் நடிச்சுள்ள பெண்கள் எல்லாம் ரொம்ப அழகிங்க கிடையாது. ஆனாலும் அழகு. இந்தப் படத்துல லிங்கா நடிச்சிருக்கான். முதல் தடவை பார்க்கிறப்ப இப்படி டீசெண்ட்டாக இல்லை. எப்படித்தான் இப்படி சரியா பிடிச்சுப் போட்டாங்களோ தெரில. இவனா இப்படி நடிச்சிருக்கான் என ஆச்சர்யமாக இருக்கு. படத்துல கதாபாத்திரங்கள் பின்னால பின்புலமாக வர பேப்பர் கூட அருமையாக நடிச்சிருக்கு. அவ்ளோ அற்புதமான படம்.
நாயகன் என்றொரு படம் பார்த்தேன். ரெண்டு நாள் அது என்னைத் தூங்கவே விடலை. மறுபடியும் பிரிண்ட் வர வச்சுப் பார்த்தேன். நாமலாம் என்னடா படம் பண்றோமென நினைச்சேன். அப்படி இந்தப் படமும் என்னை பிரிமிக்க வைத்தது” என்றார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
“படம் ரொம்ப நல்லா இருக்கு. லிங்கா நல்லா பண்ணியிருக்காரு. நண்பன் பாபி நடிச்சிருக்கான். நான்லாம் சான்ஸ் தேடுறப்ப, ஊர்ல இருந்து வந்த பசங்க கூட தங்கியிருப்போம். லன்ச் அவங்க சமைப்பாங்க. அவங்க ரூம்லயே சாப்ட்டு, அங்க தூங்கிட்டு, எழுந்து சினிமா கம்பெனிகளுக்கு ஃபோட்டோ கொடுக்கிறதுன்னு வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. அந்த வாழ்க்கையை எதார்த்தமாக, எவ்ளோ பக்கத்துல சொல்ல முடியுமோ அப்படிச் சொல்லியிருக்காங்க. அதே சமயம் எண்டர்டெயினிங்காவாம் இருந்தது” என்றார் விஜய் சேதுபதி.