Search

இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

“இன்னிக்கு (ஆகஸ்ட் 4) ஃப்ரெண்ட்ஸ் டே. லவ்வர்ஸ் டே மாதிரி இங்க ஃப்ரெண்ட்ஸ் டே கொண்டாடப்படலை. அதற்கு காரணம், செல்வராகவன் மாதிரி இயக்குநர்கள் தான். எனக்கும் அவருக்கும் நேரடி பழக்கம் இல்லை. அவருடைய ‘மயக்கம் என்ன’ படத்திலும், என் ‘கோ’ படத்திலும் ஹீரோ ஃபோட்டோக்ராஃபர். சோ ஃபோன் பண்ணி அரை மணி நேரம் கதை சொன்னேன். ஆனா அவர் தனுஷை வச்சு பிளான் பண்ணியிருந்த அடுத்த படத்தின் கதை இதுல இருந்தது. அவர் அந்தப் படத்தையே கை விட்டுட்டார்” என்றார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

“செல்வராகவன் படம் ஒவ்வொன்னும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவருக்கு அவரே தான் போட்டி. இந்தப் படத்தில் என்னப் பண்ணியிருக்கார்னு பார்க்க.. சினிமாவை சேர்ந்த டெக்னிஷீயன்ஸே ஆவலாக வெயிட் பண்றாங்க. ஆர்யா.. இப்ப தான் ‘நான் கடவுள்’ பார்த்த மாதிரி இருக்கு. அதற்குள் இன்னொரு பெரிய கேரக்டர். அவரை நீங்க தினமும் காலை மகாபலிபுரத்தில் பார்க்கலாம். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஓ.எம்.ஆர். ரோட்டில் சைக்கிளிங் போயிட்டிருக்கார். அனுஷ்கா.. இந்தப் படத்துக்காக ஜார்ஜியால ஷூட்டிங்கென எவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்கன்னு தெரியும். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்றார் சூர்யா.

“செல்வராகவன் என்னப் பண்றாரு பண்ணப்போறாரு என்றே எங்க வீட்டினராலேயே புரிஞ்சுக்க முடியாது. சில சமயம் என்னப் பேசுறாரேன்னே புரியாது. அவரை நம்பி படம் பண்ணும் பி.வி.பி.க்கு ரொம்ப நன்றி” என்றார் செல்வராகவனின் தந்தை கஸ்தூரிராஜா.

தடையறத் தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, “நான் அவர் ஆரம்பகால உதவி இயக்குநர்களில் ஒருவன். ‘காதல் கொண்டேன்’ படம் முடிஞ்சு, ஒருநாள் அவர் ஆஃபீசுக்குப் போனேன். அந்தப் படத்தைப் பற்றி மணிரத்னம் சார் பாராட்டி எழுதியிருந்த கடிதத்தை கண்ணில் படுற மாதிரி வச்சிருந்தார். இது ஆஸ்காரை விட பெரிய விருது” என்றார். 

இரண்டாம் உலகம் ட்ரெயிலர் பார்த்து ரொம்பவே ஆச்சரியப்படுறேன். பக்கத்தில் அமர்ந்திருந்த ஹாரிசிடம், படத்துக்கு மியூசிக் போட்டாச்சா என்று கேட்டேன். அவர் சிரிச்சுட்டே, இன்னும் ஆரம்பிக்கவே இல்லை சார் என்றார். ட்ரெயிலருக்கே இவ்ளோ வேலை பண்ணியிருக்காரே என்று ஆச்சரியமாக இருக்கு. செல்வா ரொம்ப கான்ஃபிடென்ட்டான ஆளு. இதை பழகின பின் தான் சொல்லணும்னு அவசியமில்லை. அவர் படங்களின் சில காட்சிகளைப் பார்த்தாலே அது தெரியும். அவர் காட்சியை ஸ்டார்ட் செய்து, முடிக்கிற இடம்லாம் பிரமிப்பு தரும். ஒவ்வொரு படமும் ரொம்ப வித்தியாசமாகச் செய்றாரு. புதுப்பேட்டை பண்றாரு; இரண்டாம் உலகம் பண்றாரு. ரொம்பவே ஆச்சரியப்பட வைக்கிறாரு” என்றார் இயக்குநர் மணிரத்னம்.

“செல்வா, மணிரத்னம் சாரோட மிகப் பெரிய ஃபேன். அவர் ஆஃபீசில் நானும் மணி சாரோட லெட்டரைப் பார்த்திருக்கேன். செல்வா செட்ல பிழிஞ்சு எடுத்துடுவார். நா கேமிரா மேன் ராம்ஜியைப் பார்த்து லைட் கம்மியாகிடுச்சுன்னு சொல்ல சொல்லி  சிக்னல் செய்வேன். அவர் ஒவ்வொரு சீனையும் நடிச்சுக் காட்டுவார். முன்னாடி படங்களில் நடிச்சது போல வந்துடக்கூடாதுன்னு ரொம்ப மெனக்கெடுவார். ஆனா ஷூட்டிங் விட்டு வெளியில் வந்ததும் ரொம்ப ஜாலியான ஆள். 

படத்தின் ட்ரெயிலர்ல அனுஷ்கா பாய்ந்து ரெண்டு பேரை கத்தியில குத்துற மாதிரி சீன் பார்த்தீங்க இல்ல? இதை அனுஷ்கா தவிர வேற எந்த ஹீரோயின் நடிச்சிருந்தாலும் செம காமெடியாகப் போயிருக்கும். ஏன்னா அவங்க உடலமைப்பு அது போல. நான் யோசிச்சு வச்சிருக்கிற கேரக்டருக்கு அனுஷ்கா மட்டுந்தான் செட் ஆவாங்க என்றார் செல்வா. ஆஹா.. எனக்கும் அதான் பாஸ் வேணும் என்றேன்” என்றார் ஆர்யா.

“உயரமான அனுஷ்கா; உயரம் தொட்ட ஆர்யா; இந்தியாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர்; வித்தியாசமான இயக்குநர்; ஜனரஞ்சகமான இசையமைப்பாளர். வேறென்ன வேண்டும்?
இப்படம் தோற்கின் பின் எப்படம் வெல்லும்?

நண்பர் கஸ்தூரிராஜாவிற்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு குளத்தில் நீர்ப்பூக்கள் இருக்கும்; மீன்கள் இருக்கும்; தவளைகள் இருக்கும். ஆனால் எங்கோ இருந்து வரும் வண்டு தான் பூக்களில் அமர்ந்து தேன் குடிக்கும். அதே போல் உங்களால் புரிந்து கொள்ள முடியாதவரை, தயாரிப்பாளர் பி.வி.பி. புரிந்து வைத்திருக்கிறார். 

இலக்கியத் தேடல் உள்ள இயக்குநர்கள் வெற்றி பெறுவார்கள். மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா போன்று செல்வராகவனும் வெற்றி பெறுவார். இவர்கள் படங்களில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லை. புரிந்து கொள்ளப்பட்ட படம், புரிந்து கொள்ளப்படாத படம் என இரண்டு தான் உள்ளது. இறந்த பின் கொண்டாடும் வழக்கம் நம்மிடம் உள்ளது. இவர்களை போன்ற ஆட்களை வாழும் பொழுதே கொண்டாடணும்.

30 வருடங்களாக நான் இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் சண்டையிட்டு வருகிறேன். இலக்கியச் சாரத்தை சினிமா பாட்டுகளில் கொண்டு வரும் வேள்வி நடத்துகிறேன். இதற்காக நான் நிறைய இழந்துள்ளேன். ஆனால் தமிழை இழக்கவில்லை” என்றார் வைரமுத்து.

“ஒன்றரை வருடம் முன் ஒரு வித்தியாசமான சிச்சுவேஷனில் மாட்டிக்கிட்டேன். மூன்று நாள், மூன்று பாடல்கள், வித்தியாசமான ஜானரில் 3 படங்கள். முதல் நாள் ஓகே ஓகே படத்திற்கு, “வேணாம் மச்சான்” பாட்டு, இரண்டாம் நாள் ‘கூகுள் கூகுள்’ பாட்டு, மூனாவதாக இரண்டாம் உலகத்தில் வரும் ‘கனிமொழியே..’ பாட்டு” என்றார் ஹாரிஸ் ஜெயராஜ். 

“தமிழ் சினிமா இப்ப ரொம்ப ஆரோக்கியமான பாதையில் போகுது” எனத் தொடங்கி, “கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு, தமிழ் சினிமாவின் இருண்டக் காலம் மீண்டும் வந்ததாகச் சொல்றாங்க. காமெடி ஸ்க்ரிப்ட் இருந்தா உள்ள வாங்க.. இல்லை அப்படியே போயிடுங்கன்னு தயாரிப்பாளர்கள் சொல்றாங்க. வித்தியாசம் வித்தியாசமான படங்கள் வந்து கொண்டிருந்தால் தான ஆரோக்கியமான போக்கு. இந்த மாதிரி சமயத்தில் பி.வி.பி. எங்க படத்தை தயாரிக்கிறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. லிங்குசாமி சொல்றப்ப, வெற்றி தோல்விகளை கணக்கில் எடுக்காம படம் பண்றேன் எனச் சொன்னார். அப்படிலாம் இல்லை சார். கண்டிப்பாக தயாரிப்பாளர் செலவு செய்த ஒவ்வொரு பைசாவும் மனசுல வச்சு தான் உயிரைக் கொடுத்து வொர்க் பண்ணியிருக்கோம். 

இந்திய சினிமா 100 கொண்டாட்டத்தில் இறந்தவர்களுக்கு விருது கொடுக்கிறார்களாம். அவங்கென்ன மேலே இருந்து வந்து வாங்கிக்கவா போறாங்க? மணிரத்னம் சார், வைரமுத்து சார் தொட்ட உயரங்களை யாரால் தொட முடியும்? இவர்களைப் போன்றவர்கள் கெளரவிக்கப்படணும்” என்றார் செல்வராகவன்.