

ப்ளட் டைமன்ட் – சியாரா லியோன் என்னும் கடலோர ஆஃப்ரிக்கா நாட்டில் நடந்த 11 வருட உள்நாட்டுப் போரை (1991- 2002) அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். போரினால் ஏற்படக்கூடிய அனைத்து வித அக்கிரமங்களையும் தன் சமீபத்திய வரலாற்றில் பதிந்துள்ளது சியாரா லியோன். மேலோட்டமாக பார்த்தால் புரட்சிக்காரர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் நடக்கும் உள்நாட்டுப் போராக தெரிந்தாலும், அதன் பின்னால் உள்ள பலமான அரசியலில் அந்நாட்டில் கிடைக்கக் கூடிய வளமான கனிம வளங்களே அனைத்திற்கும் காரணமாய் உள்ளது. அதில் முக்கியமாக வைரம், தங்கம், டைட்டானியம், பாக்ஸைட் (bauxite), ருட்டைல் (rutile) போன்ற பொருட்கள் அடங்கும். ஆனால் உள்நாட்டுப் போரை தீர்மானித்தப் பொருள் அங்கு கிடைத்த வைரங்களே. ஒரு நாட்டின் வளமே அந்நாட்டிற்கு சாபமாய் மாறும் கொடுமை, கொழுத்த வல்லரசுகளின் பார்வையில் அவை விழும் பொழுதே!!
உலகின் மூன்றாவது மிக நீளமான இயற்கை துறைமுகம் கொண்ட நாடு சியாரா லியோன். சமீபமாக 2009ல் அந்நாட்டு கடலோரங்களில் பெட்ரோல் கிணறுகள் உள்ளதாக அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இத்தகைய வளமான நாட்டின் சொந்த மக்களுக்கு நித்ய சொத்தாக இருப்பது ஏழ்மை மட்டும் தான். 97% சதவிகித மக்கள் ‘க்ரியோ’ என்னும் மொழியை பேசினாலும், பள்ளிகள் ஊடகங்கள் அரசு அலுவலகங்கள் என அந்நாட்டின் அதிகாரப் பூர்வ மொழியாக இருப்பது “ஆங்கிலம்”. ஆம், அங்கும் அதே கதை தான். பிரிட்டன் அந்நாட்டிற்கு சுதந்திரம் அளித்து விட்டு 1961ல் வெளியேறினாலும், அவர்கள் ஆளுமை அந்நாட்டில் இருந்து முழுவதுமாக விலகியபாடில்லை.
மீனவனான சாலமன் வேன்டி தன் மகன் படித்து மருத்துவர் ஆகி விடுவான் என்று மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாழும் சாதாரண மீனவன். ஷெங்கே என்னும் அவனது கிராமத்தில் புகும் புரட்சிக்காரர்கள் (ரஃப்- RUF: Revolutionary Union Front) அந்த கிராமத்தை நிர்மூலம் செய்கிறார்கள். ரஃப்பில் இருக்கும் சிறுவர்கள் கண் மூடித்தனமாக கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுடுகின்றனர். தப்பியோடும் சிலரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களை எல்லாம் பிடித்து வரிசையாக கைகளை துண்டிக்கின்றனர் (அவர்கள் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பதற்காக). குடும்பத்தை தப்பிக்க வைக்கும் சாலமன் மாட்டிக் கொள்கிறான். ஆனால் சாலமனின் உறுதியான தேகம் அவன் கைகயையும், உயிரைக் காப்பாற்றுகிறது. தங்க சுரங்கங்களில் அடிமையாக பணி நிமித்தப் படுகிறான். 7 வயது முதல் 40 வயது உள்ளவர்களில் திடகத்திரமான ஆண் மற்றும் பெண்களை தவிர்த்து அனைவரையும் கொன்று விடுவார்கள். சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி, பெரியவர்களுக்கு தங்க சுரங்கத்தில் வேலை, பெண்கள் பாலியல் பயன்பாட்டுகளுக்கு என பிரிக்கப்படுகின்றனர். (இந்த உள்நாட்டுப் போரில் புரட்சிக்காரர்கள் அழித்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 1200க்கு மேல்.)
புரட்சியாளர்கள் சுரங்கங்களில் எடுக்கப்படும் வைரங்களை விற்று உள்நாட்டு போருக்கு உதவ ஆயுதங்களை வாங்குவதையும், கள்ளச் சந்தையில் வைரங்களின் புழக்கம் அதிகமாவதையும் தடுக்க… ஆன்ட்வெர்ப்பன், பெல்ஜியத்தில் நடக்கும் ஜி- 8 மாநாட்டில் முடிவெடுக்கப் படுகிறது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் இராணுவ வீரரான டேன்னி ஆர்ச்சர் சியாரா லியோனிலிருந்து பக்கத்து நாடான லைபீரியாவிற்கு ஆடுகளில் மறைத்து வைரம் கடத்தும் பொழுது கைதி செய்யப்படுகிறான். அதே போல் வைர சுரங்களை முற்றுகையிடும் இராணுவம், புரட்சியாளர்களுடன் சாலமன் வேன்டியையும் கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். சிறையில் புரட்சிக்காரர்களின் தலைவன், சாலமன் வேன்டி மறைத்து வைத்த பெரிய வைரத்தை கேட்கிறான். இல்லையேல் அவன் குடும்பத்தை அழித்து விடுவதாக கத்துகிறான்.
சிறையில் இருந்து வெளியில் வரும் டேன்னி ஆர்ச்சரை தென் ஆஃப்ரிக்காவில் இருக்கும் அவனது முன்னாள் இராணுவ தளபதியை சந்திக்கிறான். அவருக்காக தான் டேன்னி வைரங்களை கடத்துகிறான். டேன்னி தொலைத்த வைரங்களுக்கு ஈடாக, சாலமனின் வைரத்தை கேட்கிறார் தளபதி. டேன்னி அந்த வைரத்தை முன்பே லண்டனை சேர்ந்த வைர வியாபாரியிடம் பேரம் பேசி இருந்ததையும் சூசகமாக கண்டித்து அனுப்புகிறார். சாலமனை சிறையில் இருந்து மீட்கும் டேன்னி, வைரம் இருக்கும் சாலமன் இடத்தை சொன்னால் அவனது குடும்பத்தை மீட்டு தருவதாக பேரம் பேசுகிறான்.
சிறையில் இருந்து வெளியேறும் புரட்சிக்காரன் சாலமனின் மகனை ரஃப்பின் சிறுவர் படையில் சேர்த்துக் கொள்கிறான். டியாவோடு சேர்த்து அனைத்து சிறுவர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மூளை சலவை செய்கின்றனர். துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து அப்பாவி மக்களையும், இராணுவத்தினரையும் சுட வைக்கிறார்கள். ‘
உங்கள் தந்தைகள் எல்லாம் கோழைங்க; விவசாயி; மீன் பிடிக்கிறவங்க. அதனால் நாடு அவர்களின் இரத்தத்தை சுரண்டி விட்டது. ஆனால் நீங்க எல்லாம் ஹீரோக்கள். நாட்டை காப்பாத்த போறவங்க. நீங்க இனிமே குழந்தைங்க இல்ல.. ஆம்பளைங்க. உங்கள யாரும் மதிக்க மாட்டாங்க. ஆனா உங்க துப்பாக்கிய பார்த்து பயப்படுவாங்க. பயப்படாதவங்கள பயப்பட வைக்கனும். அவங்க இரத்தத்த துப்பாக்கி மூலமா வெளியில் எடுக்கனும்‘ என்று சிறுவர்களின் மூளையைத் தொடர்ந்து சலவை செய்கிறார்கள். பச்சை மரத்தில் அடிக்கப்படும் ஆணி ஆழமாக இறங்குவது போல 7 முதல் 12 வயது சிறுவர்களின் மனமும் சுலபமாக சலவைக்கு உட்படுத்தப் படுகிறது. போதாக் குறைக்கு ‘கொக்கைன்‘ என்னும் போதை பழக்கத்திற்கும் அடிமையாக்கப் படுகின்றனர். (பல ஆஃப்ரிக்க நாடுகளிலும் சிறுவர் படைகள் அதிகளவில் போராட்டத்தில் அமர்த்தப்படுகின்றனர். இருப்பினும் இதுவரையான அதிகாரப் பூர்வமான அறிக்கைப் படி மிக குறைந்த வயதே (6) ஆன சிறுவர்களை சியாரா லியோன் புரட்சிப் படையிலிருந்து தான் மீட்டுள்ளனர்.)சாலமனின் குடும்பத்தை மீட்க அமெரிக்க பெண்ணான மேடி பெளன் என்னும் நிருபரின் உதவியை நாடுகிறான் டேன்னி. மகனை தவிர சாலமனின் குடும்பத்தினர் கைனீயா அகதி முகாமில் சந்திக்கிறார்கள். டேன்னிக்கு முதலில் உதவும் மேடி, அவன் சாலமனிடம் வைரத்தை திருடுவதற்கு உதவ மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். டேன்னிக்கு தெரிந்த ரகசியங்கள் எல்லாம் மேடியிடம் சொல்கிறான். கடத்தப்படும் வைரங்கள் லைபீரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு போலி ஆவணங்கள் மூலமாக சட்டப்படி இறக்குமதி செய்யப்படுகிறது என்ற உண்மை ஆதாரத்தோடு மேடிக்கு கிடைக்கிறது. அதன் பின் உதவ முன் வரும் மேடி, டேன்னி மற்றும் சாலமன் இருவரையும் வைரம் புதைக்கப்பட்ட இடத்திற்கு நிருபர்கள் என்ற போர்வையில் அழைத்து செல்கிறாள். வழியில் தாக்கப்படும் அவர்கள், ஒரு வழியாக இராணுவத்தினரிடம்* சிக்குகின்றனர். அங்கு பொறுப்பில் இருக்கும் டேன்னியின் முன்னாள் இராணுவ தளபதி, டேன்னியை மீண்டும் இராணுவத்தில் இணைந்து அங்கு அசையும் அனைத்தையும் அழிக்கலாம் என்று கட்டளை இடுகிறார். ஆனால் மேடி பெளனை மட்டும் விமானத்தில் ஏற்றி விட்டு, டேன்னியும் சாலமனும் தேவையான உணவு மற்றும் ஆயுதங்களை இராணுவ கிடங்கிலிருந்து திருடிக் கொண்டு வைரத்தை எடுக்க மேலும் தொடருகின்றனர்.
(*எக்சிக்யூட்டிவ் அவுட்கம்ஸ்- Executive Outcomes. தென் ஆஃப்ரிக்காவில் தொடங்கப்பட்ட தனியார் இராணுவ நிறுவனம். சியாரா லியோன் அரசாங்கம் ரஃப்பை ஒடுக்கவதற்காக இந்த தனியார் நிறுவனத்தின் உதவியை நாடியது. இந்த நிறுவனம் அரசாங்களுக்காக வேலை செய்வதாக சொல்லப்பட்டாலும், பெரிய கூட்டு நிறுவனங்களின் (big corporates) சார்பில் கனிம வள சுரங்கங்களை பாதுகாத்து வந்தனர்.)
வைரம் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே ரஃப் முகாமிட்டிருக்க, இருட்டும் வரை டேன்னியும் சாலமனும் பொறுமையுடன் காத்திருக்கிருக்கின்றனர். கண் அசரும் டேன்னி விழிக்கும் பொழுது, சாலமன் தன் மகனை தேடி ரஃப் முகாமிற்கு செல்கிறான். சாலமன் தன் மகனை அடையாளம் கண்டு அழைக்கும் பொழுது, “
நீ யாரு? ஒரு மீன்காரன் தான! இங்கிருந்து போயிடு. இல்ல உன் சுட்டுடுவேன்” என்று மூளை சலவை செய்யப்பட்ட டியா தன் சொந்த தந்தையிடமே கத்துகிறான். பேரதிர்ச்சியில் உறையும் சாலமனை புரட்சிக்காரர்களின் தலைவன் பிடித்து வைரம் இருக்கும் இடத்தை சொல்லாவிடில் அவன் குடும்பத்தை அழித்து விடுவதாக அச்சுறுத்துகிறான். டேன்னி அளித்த தகவலைக் கொண்டு இராணுவம் வான்வழி தாக்குதலில் புரட்சிக்காரர்களின் முகாமை நிர்மூலமாக்குகிறது. காட்சிகள் மாறுகின்றன. ஆனால் மீண்டும் சாலமன் வைரம் இருக்கும் இடத்தை சொல்லாவிடில், அவன் மகனை கொன்று விடுவதாக இராணுவ தளபதி மிரட்டுகிறார். டேன்னி, சாலமன், இராணுவ தளபதி, அவர் பிடியிலிருக்கும் சாலமன் மகன் டியா, சில வீரர்கள் என வைரம் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்கின்றனர். டேன்னி இராணுவ தளபதி மற்றும் உடனிருக்கும் சில வீரர்களை கொன்று விட்டு, வைரத்தை எடுத்துக் கொண்டு சாலமன் மற்றும் டியாவோடு தப்பிக்கிறான். அருகிலிருக்கும் மலை முகட்டில் ஏறி சிறு விமானம் ஒன்றில் தப்பிக்க நினைக்கும் டேன்னிக்கு குண்டடி படுகிறது. சாலமன் மற்றும் டியாவை தப்பிக்க வைத்து விட்டு, அந்த மலையிலேயே உயிர் விட தயாராகிறான் டேன்னி. இறக்கும் முன் மேடி பெளனுக்கு தகவல் சொல்லி, சாலமன் கொண்டு வரும் வைரத்தை அவனுக்கு விற்று தரும்படி உதவிக் கோருகிறான். லண்டன் செல்லும் சாலமனுக்கு மறைமுகமாக உதவி செய்கிறாள் மேடி பெளன். வைர வியாபாரியிடம் தனக்கு தன் குடும்பம் கிடைத்தால் போதுமென சொல்கிறான் சாலமன். அதை ரகசியமாக புகைப்படம் எடுக்கிறாள் மேடி. வைர வியாபாரி சாலமனின் குடும்பம் மற்றும் பணம் என இரண்டையும் கிடைக்கும்படி செய்கிறார்.நடந்தவற்றை ஆதாரங்களோடு தொகுக்கும் மேடி பெளன் அவற்றை வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து தென் ஆஃப்ரிக்க நகரமான கிம்பர்லீயில் நடக்கும் கூட்டத்தில் சாலமன் வாயாகவே அவரது அனுபவத்தை அறிந்து, நியாயாமான முறையில் இனி வைர ஏற்றுமதி நடக்க வேண்டுமென முடிவு செய்கின்றனர். (“கே.பே.சி.எஸ் KPCS” என அழைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிம்பர்லீ ப்ராசஸ் செர்டிஃபிகேஷன் ஸ்கீம் (Kimberly Process Certification Scheme) 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ‘ப்ளட் டைமன்ட்ஸ்’- ஐ கள்ளச் சந்தையில் வாங்கி ஆபத்தை விளைவிக்கக் கூடிய உள்நாட்டுப் போருக்கு ஆயுதங்கள் வாங்க நிதி அளிக்காமலும், அப்பாவி மக்களின் இரத்தத்தை காவு வாங்காமலும் வைர வியாபாரம் நடத்தப்படும் என்பதே அந்த ஸ்கீம்மின் சுருக்கம் ஆகும். எனினும் இது ஒரு ‘சாஃப்ட் லா (Soft Law)‘ மட்டுமே!! வைரங்களை அப்படி மீறி கள்ளச் சந்தையில் வாங்கினால் அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் போன்றவைகள் குறிப்பிடப்படவில்லை. எனினும் 70க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் அங்கத்தினராக உள்ளனர். இன்னும் பல நாடுகள் இதில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.)
படத்தின் நாயகன் என்று பார்த்தால் டேன்னி ஆர்ச்சர் தான். உலக புகழ்ப்பெற்ற படமான ‘டைட்டானிக்’ படத்தின் நாயகன் லியனார்டோ டி காப்ரியோ அந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரே கூறியது போல் டைட்டானிக் அளித்த புகழ் அவரை மேலும் வளர முடியாமல் செய்து விட்டது என்று தான் சொல்ல முடியும். ஊரே பற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு குடும்பத்தை பிரதானமாக கொண்டு அப்பிரச்சனையுடன் பிண்ணி பிணைத்து கதையை நகர்த்துவது ஹாலிவுட் பாணி. எப்படிப் பார்த்தாலும் அமெரிக்கர்கள் நல்லவர்கள்,வல்லவர்கள், திறமையானவர்கள், உலகை காக்க வந்தவர்கள் என்று கடைசியில் திரைக்கதை முடியும். அதை இங்கும் சமார்த்தியமாக கொண்டு வந்து விட்டார் திரைக்கதை எழுதிய சார்லஸ் லீவிட். நிருபரான அமெரிக்க பெண் உண்மைகளை உலகிற்கு வெளிக் கொணர்ந்து சியாரா லியோனில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு தீர்வு காணுவது போன்று மிக லாவகமான இயக்கியுள்ளார் எட்வர்ட் ஜ்விக். எவ்ளோவோ பண்றாங்க, பணம் போட்டு படம் பண்றப்ப இதை கூட பண்ணலன்னா எப்படி?
ஆனால் திரைக்கதை ஒரு விஷயத்தை பூசி மழப்பாமல் அப்படியே பதிந்துள்ளது. அது முக்கிய பாத்திரங்களின் மனதில் உள்ள சுயநலத்தை தான். வைரத்தை குடும்பத்திற்காக தர முன் வரும் சாலமன், வைரத்தைக் கொண்டு ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேற துடிக்கும் நாயகன், தகவல் மற்றும் ஆதாரங்களுக்காக மட்டும் உதவி செய்ய முன் வரும் நிருபரான நாயகி என முக்கிய பாத்திரங்களை ஒன்றுடன் ஒன்று பிணைப்பது சுயநலமே!!
செப்டம்பர் 2006இல் வெளிவந்த படமான இது…. மனிதர்களை அலைக்கழிக்கும் வைரம் படுத்தும்பாடினை வரலற்று கோரங்களோடு சித்திரித்துள்ளது.
‘200,000 குழந்தைப் போராளிகள் ஆஃப்ரிக்காவில் இன்னும் உள்ளனர்‘ என்ற வாசகத்தோடு படம் முடிகிறது. அது இதயத்தை மேலும் கணக்கச் செய்கிறது. ப்ளட் டைமன்ட் என்பதற்கு யுத்த பூமியில் கண்டெடுக்கப்பட்ட வைரம் அல்லது ஆயுதங்கள் வாங்க விற்கப்பட்ட கள்ள வைரம் என்று பொருள் கொள்ளலாம். இது ‘சியாரா லியோன்’ என்ற ஒரே ஒரு ஆஃப்ரிக்கா நாட்டின் நிலை மட்டும் அன்று.கள்ளச் சந்தையில் மலிவாக கிடைக்கும் வைரத்தை வாங்காமல் இருப்பதே நாம் செய்யக் கூடிய மிக உத்தமமான மற்றும் மனிதாபிமான செயலாக இருக்கும். நாம் என்பது கள்ளச் சந்தையில் வைரம் வாங்கும் மனிதர்களைக் குறிக்கிறது.