Search
இரும்பு குதிரை விமர்சனம்

இரும்பு(க்) குதிரை விமர்சனம்

இரும்பு குதிரை விமர்சனம்

பைக், பைக் ரேஸ் என ஆர்வத்தைக் கிளறிய படம். ஆனால் தமிழ் சினிமாவின் எல்லைகளுக்குள் நின்று, ஊறுகாயாகத்தான் மேற்படி விஷயத்தை உபயோகித்துள்ளார்கள்.

தாய் இறந்ததும் நாயகனை நாயகி தேற்றுகிறார். அது ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’. அப்படத்தில் நாயகியை யாரோ கடத்தி விட்டதாக கற்பனையாக நினைத்துக் கொள்வார் அதர்வா. இந்தப் படத்தில், கண் முன்னேயே தந்தை இறந்துவிடுவதால் மனமுடைந்து போகிறார். நாயகி ப்ரியா ஆனந்தைக் கண்டதும் காதலாகி, மனதை சுயமாகத் தேற்றிக் கொள்கிறார். ஆனால் இந்தப் படத்தில், நிஜமாகவே நாயகியைக் கடத்தி விடுகின்றனர். யார் எதற்கு ஏன் கடத்தினார்கள் என்பதுதான் படத்தின் கதை.

பரதேசிக்குப் பின் சிக்ஸ்-பேக்குடன் வந்துள்ளார் அதர்வா. தேமோவென இருக்கும் அவரை படம் முழுவதும் இயக்குவது பெண்கள்தான். அம்மா தேவதர்ஷினி, பாட்டி சச்சு, பால்ய காலத்தோழி ராய் லட்சுமி, ஒரு தலை காதலி ப்ரியா ஆனந்த் ஆகியோரே! ப்ரியா ஆனந்தை விட லட்சுமி ராய் கொஞ்சூண்டு சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரத்தில் வருகிறார். ஆனால் உடை விஷயத்தில் லட்சுமி ராயுடன் பாடல்களில் டஃப் காம்படீஷன் தந்துள்ளார் ப்ரியா ஆனந்த்.

காதல், காதலென படம் முழுவதும் மருகுகிறார் அதர்வா. ‘நான் உன்னைப் பார்த்ததும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். உனக்காக பைக் வாங்கினேன். என்னை நீ லவ் பண்ணித்தான் ஆகணும்’ என குழந்தை போல் அடம்பிடிக்கிறார். கொஞ்சம் சமாதனமாகி, நாயகனுக்கே உரிய பெரிய மனதுடன், ‘அவ காதலிக்கலைன்னாலும் நான் காதலிக்கிறேனே!’ எனச் சொல்கிறார். இவர் பைக் வாங்குறது காதலுக்காக, பைக் ஓட்டுவது காதலுக்காக. சகலமும் காதலுக்காக எனச் சொல்கிறார். ஆனால் பார்வையாளர்களுக்குத்தான் அதை உணர்த்தத் தவறவிடுகிறார் இயக்குநர் போஸ்.

படத்தின் எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணம், ஏழாம் அறிவு படத்தில் டோங் லீயாக நடித்த ஜானி ட்ரை ங்குயென். போட்டியில் வஞ்சமாக வலையைத் தட்டிவிடும் தமிழ்ப்பட வில்லன் போல் ஜானியைக் காட்டினாலும், மார்ஷியல் ஆர்டிஸ்ட் ஆன அவரை அதர்வா உணர்ச்சிப் பிழம்பாகி தாடை தசைகள் அதிர அடித்து வீழ்த்தப்படுவதாகக் காட்டாதது ஆறுதல். பல்சர், அப்பாச்சி போன்ற பைக் விளம்பரங்களில் கூட ஒரு சின்ன கான்செப்டுடன் ஆக்ஷன் சீக்வென்ஸ் வருகிறது. படத்தின் க்ளைமேக்ஸை ஊகிக்க முடியாதவர்கள் ஒருவர் கூட இருக்கமுடியாது. ஆக, திரைக்கதையில் கொஞ்சமேனும் சுவாரசியத்தையோ விறுவிறுப்பையோ இயக்குநர் போஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். எழுத்தாளர் நர்சிம் இருந்தும், வசனங்களிலும் சோடை போகிறது படம். ஆனால் ஜானி ட்ரை ங்குயென்னைக் காட்டி சலிப்பேற்படுத்தாமல் படத்தை நகர்த்தி விடுகிறார்கள். க்ளைமேக்ஸ் காட்சியில் காட்டப்படும் குட்டி விமானமும், ரேஸ் ட்ராக்கும் பிரமாதமாக இருந்தது. ரேவன் என்றழைக்கப்பட்ட டுகாட்டி பைக்கும்!