Shadow

இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

சின்னத்திரை நடிகர் தீபக் நாயகனாக நடிக்கும் முதற்படம். இப்படத்தில், ஜீ டி.வி.யின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர்.

தனக்கு எதுவும் சரியாக நடக்க மாட்டேங்குது என்ற விரக்தியில் நண்பர்களுடன் டாஸ்மாக் செல்கிறான் சரவணன். மிதமிஞ்சிய போதையில் தனக்குத் தானே சரவணன் வைத்துக் கொள்ளும் ஆப்புதான் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் கதை.

மார்க் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். இரண்டாம் பாதியின் நாயகன் இவர்தான். ஓடாத திரையரங்கத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியே அட்டகாசமாக உள்ளது. அவரது வேதனையும், லட்சியமும்தான் படத்தின் சுவாரசியமே.!

Ivanukku Thannila Kadam Tamil Reviewஆரண்ய காண்டத்தில் மறக்க இயலாத பாத்திரத்தில் நடித்திருந்த ‘பாக்ஸர்’ ஆறுமுகம், இப்படத்தில் சூடு பாஸ்கராக வருகிறார். ‘என் பணம் எப்ப வரும்’ என அவர் பணம் கேட்கும் மாடுலேஷன் செமயாக உள்ளது. இயக்குநர் வித விதமான கதாபாத்திரங்களின் மூலம் படத்தைச் செலுத்தியுள்ளார் என்றே தோன்றுகிறது. மைக்கா ராஜேஷாக நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டி மற்றொரு உதாரணம்.

தனக்கேற்ற நகைச்சுவைப் படத்தில்தான் நாயகனாக அறிமுகமாகி உள்ளார் தீபக். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் கதையில் ஒரு பாத்திரமாக மட்டுமே வருவது சிறப்பு. சின்னத்திரையில் வந்ததால், இயக்குநர் S.N.சக்திவேலால் நாயகி நேஹாவுக்கும் சிறு முக்கியத்துவம் தர முடிந்துள்ளது. திரையரங்கிற்கு வருபவர்களுக்கு, மெகா சீரியல் பார்க்கிறோமோ என்ற அலுப்பினைத் தந்து இம்சிக்காமல்.. இரண்டு மணி நேரம் ஜாலியாகக் கழிக்க உதவுகிறது படம்.