Search

இஸ்ரேலின் அப்பாடக்கர்கள்

என் அப்பா M.A. வரலாறு  படித்தவர், அதனால் தானோ என்னவோ எனக்கும் வரலாற்றின் மேல் ஒரு தனி ஆர்வம் உண்டு..
ஒரு முறை ஹைதிராபாத்திலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து விழுப்புரத்தில் இருக்கும் என் வீட்டுக்கு சென்றிருந்தேன்.. எப்பொழுதும் பேருந்து நிலையம் வந்து அழைத்துசெல்லும் என் தந்தை அன்று ஏனோ ஷேர் ஆட்டோ பிடித்து நீயே வந்துடு என்று கூறிவிட்டார்..
ஞாயிறன்று  என் தந்தைக்கு, அப்படி என்ன வேலை இருக்கப்போகுது  என்று எண்ணிக்கொண்டே வீட்டை  அடைந்த எனக்கு கோபம்.. 800 கிமீ தொலைவு பயணம் செய்து வந்த என்னை அவர் கண்டுக்கொள்ளவே இல்லை.. காரணம், கையில் ஒரு புத்தகம்..
கருப்பு அட்டை அதில் ஏதோ ஒரு பறவை.. அருகே நெருங்கி சென்று பார்த்தேன் ‘மொஸாட்’ என்றிருந்தது.
‘மொஸாட்’ – இஸ்ரேலிய உளவு துறை.. சரியாக கூற வேண்டுமேயானால் இஸ்ரேலின் உயிர்த்  துடிப்பு அவர்கள். அப்படித் தான் என் தந்தை ஒரு முறை என்னிடம் கூறினார்.
முடிவின்றி நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனை போல் தான் இஸ்ரேல்-பாலஸ்தீன  பிரச்னையும். முஸ்லிம்களின் தேசத்தில் மைனாரிட்டிகளாக இருந்த யூதர்கள், தங்களுக்கு என ஒரு நாட்டை அமெரிக்க மற்றும் இங்கிலாந்தின் உதவியால் அமைத்துக் கொண்டு சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகளின் சவால்களை மொஸாடின் உதவியுடன்  எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கிறார் என்.சொக்கன்.
மொஸாட்  என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரான்னு கேட்பவர்களுக்கு அவர்களின் திறமையை பற்றிய ஒரு உதாரணம்.
“அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும்  இடையிலான பனிப் போர் சூடு பிடித்திருந்த நேரமது.. ரஷ்யர்கள் புதிதாக என்ன செய்தாலும் அமெரிக்கர்களுக்கு ஜன்னி கண்டது..
அந்நேரத்தில் ரஷ்யா தான் தயாரித்த MIG-21போர் விமானத்தை தன்னுடைய தோழமை நாடுகள், முக்கியமாக அமெரிக்காவின் விரோதிகளுக்கு மட்டுமே விற்பனை செய்தது. அதற்கு எரிபொருள் நிரப்புவது, பயிற்சி தருவது என அனைத்தையும் அவர்களே செய்தனர்.  
இதனால் டென்ஷன் ஆன  அமெரிக்கர்கள், அதனை எப்படியாவது கடத்தி விட வேண்டும் என்று எண்ணி பல முயற்சிகள் செய்தனர். ஆனால் அவர்கள் கைகளுக்கு அது கிடைக்கவில்லை.
அப்பொழுது இஸ்ரேலில், விமான படைத்தலைவர் ஜெனரல் மொர்டேசாய் ஹாட், மொஸாடின் தலைவர்  மிய்ர் அமிதை சந்தித்து MIG-21 குறித்து விளக்கினார். மேலும் இஸ்ரேலை சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகளிடம் MIG-21 இருப்பதால், அதன் தொழில்நுட்பத்தை  பற்றி தெரிந்துகொள்வது முக்கியமென்று கூறினார்.
பிறகு அக்கம்பக்கத்தில் எந்த நாடுகளில் MIG-21 இருக்கு என்னும் விவரத்தை திரட்டினார்கள்.. எகிப்த 34, சிரியாவில் 18, ஈராக்கில் 10  இருப்பதாய் அறிந்தார்கள்..
இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் MIG-21 ரக விமானத்தை இயக்க நிறைய அனுபவமுள்ள விமானிகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இவர்களை விலைக்கு வாங்கினால் மட்டுமே விமானத்தை கடத்த முடியும். ஆக அப்படி ஒரு சந்தர்ப்பம் வர காத்திருந்தனர்.
அப்பொழுது தான் ஜோசப் என்பவர், மொஸாடை தொடர்புக் கொண்டு உங்களுக்கு MIG-21 விமானம் வேண்டுமா? விலை ஒரு மில்லியன் டாலர்  என்று கூறி  ஆச்சர்யப்படுத்தினார். கடத்த போவது நானில்லை ஈராக்கில் விமானியாக இருக்கும் எனது மருமகன் ‘முனிர் ரெட்பா’  என்றும் கூறினார்..
முதலில் மொஸாட் அவரை நம்ப யோசித்தது. இருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அவரை அழைத்து மொஸாட் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு ஒப்புக்கொண்டனர்.
முனிர் இராக்கிலிருந்து விமானத்தை கடத்தி இஸ்ரேல் வர தயாராக இருந்தார். அதற்கு முன்பே அவரது குடும்பத்தினரை மொஸாட் உளவாளிகள் இஸ்ரேலுக்கு பத்திரமாக அழைத்து சென்றுவிட்டனர்..
1966, ஆகஸ்ட் 16 ஆம் தேதி திட்டமிட்டபடி ஈராக்கிலிருந்து MIG-21 விமானத்தை இஸ்ரேலுக்கு கடத்தி  உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.”
1975 மியூனிச் ஒலிம்பிக் போட்டியில் பாலஸ்தீன தீவரவாதிகள் இஸ்ரேலிய வீரர்களை பணயக் கைதிகளாக பிடித்த ‘பிளாக் செப்டம்பரிலிருந்து’  ஆரம்பிக்கிறது. மெதுவாக அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் அதன் பின் மொஸாடின் பழிவாங்கும் செயல்பாடுகள் பற்றியும் விரிவிக்கின்றது இந்தப் புத்தகம்.
மேலும் ஹிட்லர் ஆட்சியில் யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளும் அப்பொழுது இஸ்ரேலிலிருந்து யூதர்கள் தன் இனத்தவன் ஜெர்மனியில் படும் துன்பங்கள் தாளாமல் அவர்களை காக்க முயற்சிப்பதும் அழகாக கூறியிருக்கிறார் ஆசிரியர் என்.சொக்கன்.
இப்படி பல சுவாரசியமான விஷயங்களை விளக்கியிருக்கிறது இந்தப் புத்தகம்..
மேலும் பிரான்ஸ் நாட்டை  ஏமாற்றி தங்களுக்கு சொந்தமான படகுகளை திருடும் போதும், சதாம் ஹுசைனின் அணு ஆயுத முயற்சிகளை சீர்குலைக்கும் போதும்  அவர்களின் திறமையை எண்ணி பிரம்மிக்க வைக்கின்றது.
அமெரிக்கர்களின் பயிற்சியும், பல அதிநவீன கருவிகளையும் பெறும் இவர்கள், அதனை பயன்படுத்தி அமெரிக்கர்களையே வேவு பார்த்த விஷயம் நம்மை சிரிக்க வைக்கின்றது.
நான் இதுவரை எந்த ஒரு புத்தகத்தையும் ஒரே நாளில் படித்து முடித்ததில்லை, ஆனால் இந்த புத்தகத்தை முடித்தேன்.Leave a Reply