பசங்க-2 படத்தில், தன்னை விருந்துக்கு அழைத்தவரை ஃபோனில் தொடர்பு கொண்டு, தன் மனைவிக்கு என்ன உணவுகள் பிடிக்குமெனப் பட்டியலிடுவார் சூர்யா. “விருந்துக்குப் போற இடத்தில் என்னென்ன வேணும்னு இப்படியா லிஸ்ட் போடுவாங்க?” எனக் கேட்பாங்க அமலா பால். “பின்ன நம்மள விருந்துக்குக் கூப்பிட்டு, அவங்களுக்குப் பிடிச்சதைலாம் சமைச்சு வச்சிருப்பாங்க. நம்மளுக்குப் பிடிச்சதுலாம் அப்றம் எப்ப சாப்பிடுறது?” எனப் பதிலளிப்பார் சூர்யா.
இத்தகைய அற்புதமான காட்சி வைத்தமைக்கு இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டியே ஆகவேண்டும். அன்புடன் நமக்களிக்கப்படும் உணவு நம் விருப்பத் தேர்வாக இருந்தால் நல்லதுதானே.!
துரதிர்ஷ்டவசமாக, நாம் உண்ணும் உணவுகள் இப்போ நம் விருப்பத்திற்கு இருப்பதில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் நூடுல்ஸைக் கண்டோமா, ஓட்ஸைக் கண்டோமா? விளம்பரங்கள் மூலம் யாரோ எவரோ நாம் சாப்பிட வேண்டியதைத் தீர்மானிக்கத் தொடங்கி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் சின்ன காக்கா முட்டை போல், ‘ஆயா சுட்ட தோசையே பீட்சாவை விட நல்லாயிருந்துச்சுடா!’ என்ற முடிவுக்கு வருவதில்லை. என்ன டாப்பிங்ஸ், என்ன ஃப்ளேவரெனத் தீர்மானிப்பது வரை முன்னேறி விட்டார்கள் பதின்மத்தைத் தொட்டிடாத சிறுவர்கள்.
பொருளாதாரம் உயர்ந்ததும், அதாவது சுயமாய்ச் சம்பாதிக்கத் தொடங்கியதுமே கையேந்தி பவன்களும் சாலையோர சின்ன கடைகளும் “அன்-ஹைஜினிக்” எனக் கண்டுபிடித்து ஹாட் சிப்ஸிலும், கே.எஃப்.சி.யிலும் தஞ்சமடைகிறார்கள். நாமென்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, எங்குச் சாப்பிடணும் என்பதை நம் பொருளாதாரமே நிர்ணயிக்கிறது.
“உங்களுக்கு சுகர். நீங்க அரை ஆப்பிள் தான் சாப்பிடணும்” என நம் உணவு முறையைத் தீர்மானிக்கும் வன்சக்தியாக மருத்துவர்கள் உள்ளார்கள். “மருத்துவரை நம்பாதே.! ஆதி மனிதனின் உணவுமுறையை நம்பு” என மருத்துவர்களுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்துகிறார் நிர்வாகியல் துறை ஆய்வாளரான அமெரிக்க வாழ் நியாண்டர் செல்வன்.
யார் யாரோ நாமென்ன சாப்பிடணுமென உள்ளே புகுந்து குழப்பம் செய்யும் வேளையில், “எனக்கோ, என் குழந்தைகளுக்கோ, தொண்டையில் இறங்கிடாத விலை குறைவான கேக்லாம் வாங்கி அநாவசியமா பணம் செலவு செய்யாதீங்க” என்பதைச் சொல்லத் தெரியாமல் பகட்டான தொனியில் சொல்லி, ஃபேஸ்புக் உபயோகிக்க வசதியுள்ள சில ஏழைகளிடம் சிக்கிப் படாதபாடுபட்டார் ப்ரியா குருநாதன்.
ப்ரியா குருநாதனின் பதிவைக் கிண்டல் செய்யும் வகையில், ‘ஆதி மனிதன் அருந்திராத கோக்கை எனக்கு ஒருவர் தந்தார். அதை என் எதிரிக்கும் தர மாட்டேன். கிச்சன் சிங்க் கழுவப் பயன்படுத்திக் கொண்டேன்’ என்கிறார் பேலியோ டயட் புத்தகம் எழுதிய எழுத்தாளர் நியாண்டர் செல்வன். இவருக்குத் தான் நினைப்பதை எழுத நன்றாக வருகிறது. அதனால் இவரை யாரும் ஓட்டவோ, திட்டவோ போவதில்லை. ப்ரியாவுக்கு எழுத வரவில்லையே தவிர்த்து, இருவரின் ஸ்டேட்டஸில் இருக்கும் ஒற்றுமை, ‘என் உணவு என் தேர்வு. உங்க அன்புக்காக எனக்குப் பிடிக்காத/ஒவ்வாத எதையும் சாப்பிட மாட்டேன்’ என்பதே.! கூடவே, அநாவசியமாக மற்றவர்கள் பணம் கரியாகிறதே என்ற அக்கறையும் இருந்தது ப்ரியாவுக்கு. தனக்குப் பிடிக்காத கேக்கைத் தூக்கி எறியாமல் வீட்டில் வேலை செய்தவர்களுக்குக் கொடுத்துள்ளார். மேலும், ‘நீங்கள் வாங்கிச் செல்வதை உங்க அன்புக்குரியவர்கள் உபயோகிக்காமல் தூக்கிப் போட்டால், அந்த உணவு வீணாகிறதுதானே!’ என்றும் கேள்வியெழுப்புகிறார் ப்ரியா. இங்கு பகட்டோ, ஆணவமோ வரவில்லை.
ஒருவர் தனக்கான விருப்ப உணவைத் தேர்ந்தெடுக்க உரிமை இருப்பது போல், அன்பின் மிகுதியில் மற்றவர் அவர் மேல் திணிக்கும் உணவை மறுக்கவும் உரிமையுள்ளது.
“நாங்க எங்க பசங்களுக்கு சாக்லேட்லாம் பழக்கறதில்லை.”
“எனக்கு சுகர். ஸ்வீட்ஸ், ஏன் ஃப்ரூட்ஸே சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்.”
“நான் டயட்டில் இருக்கேன்.”
“ஹி..ஹி.. முட்டை போடாத அய்யங்கார் பேக்கரி கேக்ஸ்தான் சாப்பிடுறது.”
அப்போ நீங்கள் வாங்கிச் செல்லும் சாக்லேட்டோ, ஸ்வீட்ஸோ அல்லது எதுவோவின் கதி? விருந்தாளி மனம் கோணக் கூடாதென அவர்கள் வாங்கி வருவதைப் பெற்றுக் கொண்டு, அவர்கள் போனதும் அதைக் குப்பையில் வீசுவதை விட.. உணவு வீணாகாமல் இருக்க சூர்யாவைப் போல், “என்ன வேண்டும்!?” என ஃபோனில் அழைத்துக் கேட்டு விடுங்கள் அல்லது ப்ரியா குருநாதன் பரிந்துரைப்பது போல் கை வீசிக் கொண்டு சும்மா செல்லுங்கள். உணவு விரயமாகக் காரணமாய் இராதீர்கள்.
பி.கு.: ஃபேஸ்புக் உபயோகிக்க வசதியுள்ள ஏழைகள், அப்படியே கூகுளில் ‘இந்தியாவில் விரயமாக்கப்படும் உணவு (Food wastage in India)’ என தேடிப் பார்க்கவும்.