மழைப் பொய்த்த மாரிக் காலத்திற்கு பின் வரும் கடும்கோடையின் வறட்சி போல தமிழ்த் திரைப்படங்களில் கதைக்கான வறட்சி நிலவுகிறது.
கதையில் பல ‘மீண்டும்’. பதின்மத்தில் இருக்கும் நாயகி காதல் வயப்படுகிறாள். அவளை, காவலை மீறி நாயகன் தூக்கிச் செல்கிறான். தங்களை துரத்துபவர்களிடம் இருந்து காதலர்கள் தப்பினரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வியக்க வைக்கிறார். இது அவரது முதற்படமாக வர வேண்டிய திரைக்கதை என சொல்லப்படுகிறது. பிருத்விராஜ் – சம்யுக்தா கதை எண்ணற்ற முறை சொல்லப்பட்டு விட்டாலும், அதை மற்றொரு முறை சுவாரசியமாக சொல்ல முயன்றுள்ளார். படத்திலிருந்து பார்வையாளனை விலகாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உதாரணம் நாயகி போலவே நாயகன் “எப்படி”யும் வந்து விடுவான் என எந்தவித ஐயமோ, பதைபதைப்போ இன்றி இருக்க முடிகிறது.
வக்கீலாக நரேன். சுந்தர பாண்டியன், சுண்டாட்டம் எனத் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் அசத்துகிறார். வெற்றிமாறனின் ஆடுகளத்தில், காவல்துறை அதிகாரியாக கலக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. நரேன் போல் சில காட்சிகளிலேயே தோன்றும், ஒழுக்கத்திற்கான விருது வாங்கிய கான்ஸ்டபிள் பாபு பாத்திரமும் ஈர்க்கிறது. நாயகன் பிரபுவாக சித்தார்த். மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே நாயகியை மீட்க நண்பர்களுடன் திட்டம் தீட்டுகிறார். எனினும் ரன்னிங் கமென்ட்ரி போல, “நாம ட்ரெயின்ல போலன்னு கண்டுபிடிச்சிருப்பாங்க.. நம்ம வாய்ஸை ட்ராக் பண்ணியிருப்பாங்க.. IMEI நம்பர் வச்சு சிம் நம்பரை கண்டுபிடிச்சிருப்பாங்க..” என அந்நேரத்து திட்டம் போலவே தொடக்கம் முதல் பேசுகிறார். நேரம் அதிகம் இருந்தும், திட்டமிடலில் சாலையை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு ‘நம்பர் ட்ரேசிங்’கைத் தவிர்க்க நண்பர்கள் ஏன் புது சிம் வாங்கி கொள்ளவில்லை?
படத்தின் முன்பாதி சுவாரசியத்திற்கு, நாயகியின் நண்பராக வரும் தீபக் பாத்திரமும், கர்நாடக ‘சைபர் லேப்’பின் செயல்பாடுகளும், பங்காரப்பட்டு நண்பன் கோணத்தில் கதை சொல்லுதலும் காரணமாகிறது. காரை ஸ்டேஷனில் விட்டு விட்டு பங்காரப்பட்டில் இருந்து சித்தார்த் ட்ரெயின் ஏறியிருக்கலாம். பாவம் பங்காரப்பட்டு நண்பனைக் கோர்த்து விட்டு உதை வாங்க வைக்கிறார். முதல் பாதியில் இருந்த சுவாரசியமும் இரண்டாம் பாதியில் குறைந்து விடுகிறது.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கே கே மேனனின் அறிமுகம் என்கவுன்ட்டரில் இருந்து தொடங்குகிறது. திரைப்படங்களில் தான் காவல்துறை அதிகாரியை நல்லவராக காட்டவும் என்கவுன்ட்டர் பயன்படுகிறது, கெட்டவராக சித்தரிக்கவும் பயன்படுகிறது. மகனுக்கு என்ன வாங்கலாம் என யோசனை சொல்லும் தீபக்கின் முதுகை பதம் பார்க்கும் காட்சியை விடவா என்கவுன்ட்டர் காட்சி மிரட்டலானது? தொடக்கத்திலேயே கள பலி கொடுத்து விடுவதால், அதன் பின் படத்தில் யாரும் சாகடிக்கப்படவில்லை. குடித்து விட்டு பைக் ஓட்டும் நாயகனின் நண்பன் கூட பிழைத்துக் கொள்கிறான். மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு போகணும் என்ற விருப்பத்திற்கும் கட்டாயத்திற்கும் இடையில், ஓடிப்போகும் அரசியல்வாதியின் மகளை மீட்க வேண்டிய கடமையில் மூழ்குகிறார். அவருக்குள் இருக்கும் மென் பக்கத்தை தட்டி எழுப்ப, தொலைபேசியில் அழைக்கும் அவரது மனைவியின் குரலை உபயோகித்துள்ளனர். மென்பக்கம் எழுப்பப்பட்டு விடும் என்பது படத்தின் மத்தியிலேயே யூகிக்க கூடியதாக உள்ளது. ஆனால் கே கே மேனன் நாயகியின் நெற்றியில் துப்பாக்கி வைத்து அறைந்ததும், நாயகன் எதிர்க்காமல் அடிவாங்கும் காட்சிகள் எல்லாம் இனி எத்தனை நாளுக்கு தான் பார்க்க வேண்டியிருக்குமோ? கட்சி, மானம் என பேசும் அரசியல்வாதியாக வரும் அவினாஷின் பாத்திரம் மிக அருமையான பதிவு. எடியூரப்பாவுடன் ஒரு புகைப்படத்தில் இருப்பவர், பார்ட்டிக்கு செல்லும் பெண்களை அடித்து விரட்டும் கட்சியை சேர்ந்தவர்.
தனது நெற்றியில் விழும் முடியை ஒதுக்கியவாறு நாயகி அர்ஷிதா ஷெட்டி அறிமுகமாகியும், கண்டதும் காதல் என்ற அபத்தம் படத்தில் இல்லை. தன்னை தனிமையில் இருந்து மீட்க வந்த உயிருள்ள ‘டெட்டி’யாக நாயகனை பாவிக்கிறாள். எனினும், “உங்கிட்ட பேசுறது, பல சமயம் தனியா பேசுறாப்ல தான் இருக்கு” என்றும் சொல்கிறார் சித்தார்த்திடம். நாயகிக்கு டாப்ஸீயை ஞாபகப்படுத்தும் ஜாடை. நாயகனையே பார்ப்பது, நாயகனுக்காக உருகுவது, நாயகனை நம்பி வீட்டை விட்டு வருதல், காவல்துறை அதிகாரியிடமிருந்து நாயகன் காப்பாற்றுவான் என நம்புதல் என பன்முக நடிப்பில் கவர்கிறார். வெற்றிமாறனின் நாயகிகள் வீட்டை விட்டு வெளியேற எந்தக் குற்றவுணர்ச்சியும் அடைவதே இல்லை. ஆடுகளத்தில் எப்படி வட்டார தொனியில் கவனம் செலுத்தப்பட்டதோ, அதே போல் இப்படத்திலும் நாயகியும் நாயகியின் நண்பன் தீபக்கும் பேசும் தமிழில் பிரத்தியேக கவனம் செலுத்தியுள்ளனர். பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் படத்தில் இடைச்சொருகலாக உறுத்துகின்றன.
மழைப் பொய்த்த மாரிக் காலத்திற்கு பின் வரும் கடும்கோடையின் வறட்சி போல தமிழ்த் திரைப்படங்களில் சுவாரசியமான திரைக்கதைக்கான வறட்சி நிலவுகிறது என்பதே சரியாக இருக்கும். இப்படம் சற்றே ஆறுதல். இயக்குபவர் தான் திரைக்கதை எழுதியிருக்க வேண்டும் என்ற தவிப்பு தமிழ்த் திரையுலகில் உண்டு. அந்த தவிப்பில் சிக்காமல் நமது நேரத்தை எரிச்சலின்றிப் போக்க இயக்குநர் மணிமாறன் உதவுகிறார். படத்திலிருந்து பார்வையாளனை விலகாமல் பார்த்துக் கொள்கிறார் வெற்றிமாறன். ‘தமிழ்க்காரப் பசங்க’, நண்பர்கள் ஆவது அழகான சித்தரிப்பு. நட்பு, உறவுகள் என சமுதாயக் கட்டமைப்பின் அடித்தளம் ஆதிமனிதனின் ‘இனக்குழு மனப்பான்மை’யே காரணம். அதை உறுதிப்படுத்துவது போல, அந்நிய மண்ணில் தமிழால் இணையும் குழு நண்பர்காளாகி விடுகின்றனர். காதல் புனிதமானது, நட்பு உன்னதமானது என்ற பாசாங்கு எல்லாம் வசனங்களில் இல்லை. ‘நண்பனின் காதலை விட தங்களை துகிலுறிந்து அவமானப்படுத்துபவனுக்கு வலிக்கணும்’ என்பது நண்பர்களின் மனநிலை. பேட்டைக்காரரின் மனநிலை தான், ஆடுகளத்தையும் வெற்றிமாறனையும் கொண்டாட வைக்கிறது. ஆனால் படத்தின் மையக் கருவாக இந்த உளவியல் அமையாததால், சென்னை – பெங்களூரு (மும்பை) நெடுஞ்சாலை NH4-இல் செல்லும் எண்ணற்ற வாகனங்களில் ஒன்றாக படம் கடந்து விடும்.