Search

உத்தம வில்லன் விமர்சனம்

உத்தம வில்லன் விமர்சனம்

பரம(க்குடி) நாத்திகரான கமல்தான், சக மனிதர்களை நேசிப்பவர் கடவுள் என அன்பே சிவம் படத்தில் சொல்ல வேண்டியிருந்தது. இம்முறை, உத்தம வில்லனில் வாழ்வின் நிலையாமையைக் குறித்த ஆத்ம விசாரம் செய்துள்ளார். யாருமே வில்லன் இல்லை என்பதுதான் படத்தின் கரு. பின் யார்தான் உத்தம வில்லன்?

இந்த வசீகரமான தலைப்புக்குத்தான் எத்தனை அர்த்தங்களைக் கொணர்ந்துள்ளார் கமல்!?

1. உத்தமன் என்பவர் கதை சொல்ல தமிழக வில்லுப்பாட்டையும் (வில்லன்), கதையின் களம் செல்ல கேரள தெய்யத்தையும் இணைத்து கூத்து கட்டுபவர்.
2. உத்தமன் கட்டும் பிரதான வேடம் வில்லனான (வில்லாளியான) அர்ஜூனன் வேடம்.
3. தன் பெண்ணின் விருப்பத்துக்காக, ஒரு காதல் ஜோடியைப் பிரிக்கிறார் உத்தம அப்பாவான பூர்ண சந்திர ராவ்.
4. கள்ளக் காதலியுடன் தொடர்பில் இருந்தாலும், குடும்பத்தின் மீது பாசத்தைப் பொழிகிறார் உத்தம ஹீரோவான மனோரஞ்சன்.
5. படத்துக்குள் எடுக்கப்படும் படத்தின் பெயர் உத்தம வில்லன்.

என தலைப்புக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கமலின் பலமும் பலஹீனமும் அதுவே!

வழக்கமான ஹோலிவுட்டின் சுழற்சியில் இருந்து விடுவித்துக் கொண்டு சோதனைகளை மேற்கொள்பவர் கமல். அறுபதைத் தொட்ட பெரிய ஹீரோக்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை, இம்முறை திரைக்கதையின் மூலம் லாவகமாகக் கடந்துள்ளார். டிகிரி முடித்த பெண்ணின் தந்தையாக வருகிறார் கமல். உச்ச நட்சத்திரமான நடிகர் மனோரஞ்சன் எனும் பாத்திரத்தின் பலம், அது கமல் ஹாசனைப் பற்றிய பொதுவான பிம்பத்தை அப்படியே பிரதிபலிப்பதுதான். எனவே மிகச் சுலபமாக அந்தக் கதாப்பாத்திரத்துடன் ஒன்ற முடிகிறது. ஆனால், உத்தமரோ அதற்கு நேர்மாறாக மனதில் ஒட்டாமல் ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுபவராக மட்டுமே உள்ளார்.

நாளை என்பது வெகு தூரத்தில் இல்லை என்ற நிதர்சனம் புரிந்ததும், பைக்கில் கிஸ்ஸிங்கும் வீலிங்கும் செய்து ‘லவ்’ செய்யும் வீர விளையாட்டை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு ரசிகர்கள் மனதில் என்றென்றும்(!?) நிலைத்து நிற்பதுபோல் ஒரு நகைச்சுவைப் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் மனோரஞ்சன். நேரம் குறைவு என்பதால், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவருக்கும் ஏதாவது செய்ய நினைக்கிறார். குரு, மாமனார், மகன், மனைவி, மகள் என அனைவரிடமும் உண்டான மனக் கசப்புகளை அகற்ற முற்படுகிறார். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் நிறைவானதாகவும் முடிக்க நினைக்கிறார். சுற்றமும் நட்பும், அனுசரணையாகவும் பக்கப்பலமாகவும் இருந்தால் எல்லாம் சாத்தியம்தானே.! துரோகம் இழைத்தவர்களையும் அரவணைத்துக் கொள்ளும் மனோரஞ்சன் ஆசிர்வதிக்கப்பட்டவர்.

மையக் கதையின் பலம், அதன் தனித்துவமான கதாப்பாத்திரங்களும் அவர்களுக்கிடையேயான உறவுப் போராட்டங்களும். படத்துக்குள் வரும் கிளைக் கதையில் வரும் கதாபாத்திரங்களோ, பெரும்பாலும் கோமாளிகளாக உள்ளனர். முதற்கதையின் பாத்திரம் மரணத்தை எதிர்நோக்கியுள்ளது, கிளைக்கதையின் பாத்திரமோ மரணம் நெருங்காத சீரஞ்சிவி (அ) மிருத்யுஞ்செயன் எனக் கருதப்படுகிறது. இந்த முரண் தொடக்கத்தில் சுவாரசியப்படுத்தினாலும், கூத்தாடிக்கு நாட்டைக் காக்கும் வேலை வந்ததும் கொஞ்சம் சுருதி குறைகிறது. ஆனாலும், சம காலத்து அரசியல் கூத்துகளை பகடி செய்வது போல் நாளிலும் கோளிலும் நம்பிக்கையுள்ள மன்னன் முத்தரசனை ரசித்துக் கலாய்க்கிறார் உத்தமன். பகடை உருட்டி தாயம் விழுந்தால் மந்திரிகளின் பதவியைப் பறிக்கத் திட்டமிடும் கோமாளி மன்னனாக நாசர் பிரமாதப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் ரமேஷ் அரவிந்த் அசத்தியுள்ளார். தமிழில் அவர் இயக்கிய முதற்படம் கண்டிப்பாக முக்கியமானதொரு படமாக இருக்கும். ஜெயராம், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி (மேனன்), பார்வதி நாயர் என முன்னணி நடிகர்கள் பலரோடு மூத்த இயக்குநர்களான கே.விஸ்வநாத் மற்றும் கே.பாலச்சந்தர் ஆகியோரையும் நடிக்க வைத்ததோடு அன்றி, எவர்க்கும் படத்தில் முக்கியத்துவம் குறையாமலும் பார்த்துக் கொண்டுள்ளார். இடைவேளை விடுவதற்கு முந்தைய காட்சியில், உயிரை விடுமுன் துடிக்கும் மீன்களைக் காட்டிவிட்டு கமலின் மூக்கில் வழியும் ரத்தத்தைக் காட்டி அசத்தியிருப்பது அவரின் திறமைக்கொரு சிறு சான்று. அதே போல், கமலைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் அவரது மகளுக்கும் மகனுக்கும் உண்மை தெரியும்போது அவரின் வேடம் கலைக்கப்பட்டு அரிதாரமற்ற தந்தையாக நிற்பதையும் சொல்லலாம்.

படம் எத்தகைய சிலிர்ப்பையும் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை எனினும், நெளிய வைக்கும் படங்களுக்கு மத்தியில் சத்தமில்லாமல் நல்ல படமென்ற நிறைவைத் தருகிறது. அதற்கு, மனோரஞ்சனும் அவரின் மகன் மனோகரனும் பேசிக் கொள்ளும் காட்சியைப் போன்ற சில கனம் மிக்க காட்சிகள் படத்திலிருப்பது காரணமாய் இருக்கலாம். மற்றொரு காரணம் ஜிப்ரானின் பின்னணி இசை.

படத்தில் மேலும் சில சுவாரசியங்கள்..

மனோரஞ்சன் என்றால் Entertainer. மனோரஞ்சனின் மனைவி பெயர் வரலக்ஷ்மி (ஊர்வசி). அவர் பூர்ண சந்திர ராவ் (கே.விஸ்வநாத்) எனும் தயாரிப்பாளரின் செல்வ / ஐஸ்வர்ய மகள் (Varalakshmi Productions எனும் பேனரின் கீழ்தான் மனோரஞ்சனின் படங்கள் வெளிவரும்).

சதிலீலாவதி படத்தில் டாக்டராக வரும் கமல், ரமேஷ் அரவிந்தையும் ஹீராவையும் பிரித்திருந்தாலும், அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல்.. உத்தம வில்லன் படத்தில் கமலை டாக்டராக வரும் ஆண்ட்ரியாவிடமிருந்து பிரிக்காமல் விட்டிருக்கார் ரமேஷ் அரவிந்த் (ஒருவேளை பஞ்சதந்திரத்தில் ரமேஷ் அரவிந்த்க்கு கமல் உதவியதால் இருக்குமோ?)

அனைத்துக்கும் மகுடம் வைத்தாற்போல் அதி சுவாரசியமான விஷயம் என்னவென்றால்: ‘வீரவிளையாட்டு’ படத்துக்குப் பிறகு மனோரஞ்சன் நடிக்கவிருந்த படம் ‘ஆதி சங்கரர்’. தனது நிலையாமையை மனோரஞ்சன் உணரத் தொடங்கியதும் செய்யும் முதல் வேலை, அந்தப் படத்துக்குப் பெற்ற அட்வான்ஸைத் திருப்பிக் கொடுப்பதுதான். ‘எல்லாமே பிரம்மம். பிரம்மத்தில் நிலையாமை இல்லை’ என்ற அத்வைத சாரத்தில் இருந்து, “நாராயணனே சுதந்திரமான முழுமுதல் கடவுள்; ஜீவர்களும் பிரகிருதியும் அவர்க்குக் கட்டுப்பட்டவை” என்பதை வலியுறுத்தும் உத்தமரின் / மத்துவரின் த்வைத சாரமாக மாறுகிறது மனோரஞ்சனின் கடைசிப் படம்.

ஓநாயின் நியாயம் ஓநாயாக இருந்தால்தான் தெரியுமென ஹே ராம் படத்து அபயங்கர் சொல்வது போல், இரணியாட்சனின் மனநிலையோ, மனோரஞ்சனின் மனநிலையோ அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால்தான் புரியும். பெற்ற மகனோ/மகளோ தன்னை உதாசீனம் செய்து வேறொருவரைக் கொண்டாடும்போது அந்த தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும்? இரணியன் கோபம் கொண்டு தூணைப் பிளந்தான்; பகுத்தறிவாளனான மனோரஞ்சனோ உண்மையை ஏற்பது தவிர வேறு வழியில்லை என உணர்கிறான்.

ஏனெனில்..

த்வைதம் கொண்டாடும் நிலையான நாராயணனை மறுத்து, அறிவும் அன்புமே நிலையானது எனச் சொல்லுபவன் பரம நாத்திகனும் நடிகனுமான மனோரஞ்சன். தனது படைப்பில் நரசிம்மனைக் கொன்று, அப்பன் சரித்திரத்தை முழுமையாக்குகிறார் கமல்.