Search

உன்னோடு கா விமர்சனம்

Unnodu Ka Vimarsanam

ஐந்து தலைமுறைக்கு முன், இரண்டு குடும்பங்களுக்குள் மூண்ட பகை, சிவலிங்கபுரம் எனும் ஊரையே வடக்கு, தெற்கு என இரண்டு ஊராகப் பிளவுபடுத்தி விடுகிறது. சிவலிங்கபுரம் மீண்டும் எப்படி ஒன்றிணைகிறது என்பதுதான் படத்தின் கதை.

நகைச்சுவைப் படத்தின் பலம் அதன் கதாபாத்திரங்களே! இப்படத்தின் கதாபாத்திரத் தேர்வுகள் கச்சிதமாகக் கதையோடு பொருந்துவதோடு நகைச்சுவௌக்கும் உத்திரவாதமளிக்கிறது. தன் கதையை, இயக்குநர் ஆர்.கே.-விடம் தந்து படத்தைத் தயாரித்துமுள்ளார் அபிராமி ராமனாதன். ஆர்.கே.வின் திரைக்கதையும் வசனங்களும் நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கிறது. தேசத்தின் அடையாளமாகவும், சிலை கடத்தல்காரர் காசியாக வரும் மன்சூர் அலிகானும், ஆள் கடத்தல்காரர் ‘யோகா மாஸ்டர் மார்த்தாண்ட’மாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் அதற்கு உதாரணங்கள்.

தங்களது மகனும் மகளும் ஊரை விட்டு ஓடி விட்டார்கள் என அறிந்ததும் அதைக் கொண்டாடுகின்றனர் ஐந்து தலைமுறை பகையாளிகளான ஜெயவேலும் கீர்த்திவாசனும். ஜெயவேலாக பிரபுவும், கீர்த்திவாசனாக தென்னவனும் கலக்கியுள்ளார்கள். ஜெயவேல் மனைவி ராஜலக்ஷ்மியாக ஊர்வசி நகைச்சுவையில் அசத்தியுள்ளார். படத்தின் இரண்டாம் பாதியில் வரும் மேட்ரிமோனியல் ஓனர் ‘டீல் பாண்டி’ சாம்ஸும், மாப்பிள்ளை ‘ப்ரூஸ் லீ’யாக வரும் நாராயணனும் குறைவான காட்சிகளில் வந்தாலும் ரசிக்க வைக்கின்றனர். சாம்ஸ்க்கும், எம்.எஸ்.பாஸ்கருக்கும் நடக்கும் ஃபோன் உரையாடலில் திரையரங்கம் சிரிப்பொலியில் குலுங்குகிறது.

Unnodu Ka Vimarsanam

நெடுஞ்சாலை, மாயா என தன் நடிப்பால் கலக்கிய ஆரி, இப்படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். டார்லிங் – II படத்து நாயகி மாயா, சிவாவை அனைத்திலும் முந்தத் துடிக்கும் அபிராமியாக நடித்துள்ளனர். பரம்பரைப் பகையைத் தலையிலேற்றிக் கொண்டு திரியும் மாயன், பரமன் பாத்திரத்திற்கு ராஜாசிங்கும், வினோத் சாகரும் (பிச்சைக்காரன் படத்தில் ரைட்டாய் இருந்து லெஃப்ட்டாய் மாறியவர்) சரியான தேர்வுகள்.

சக்தி சரவணின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். க்ளோஸ்-அப் ஷாட்ஸ், ஸ்லோ-மோஷன் ஷாட்ஸையும் கூடக் கச்சிதமாகவும் கோர்வையாகவும் சுவாரசியமாகவும் தொகுத்துள்ளார் சேவியர் திலக். சத்யாவின் பின்னணி இசை படத்தின் போக்கிற்குப் பக்கவாத்தியமாக உதவியுள்ளது.

ஐந்து தலைமுறைக்கு முன் மாமன் மச்சானுக்குள் ஏன் பகை மூண்டதென்ற கிளைக் கதையும், தனது குடும்ப வழக்கத்தால் எப்படி மன்சூர் அலிகான் தேசத்தின் அடையாளமானாரென்ற உப கதையும் ரசிக்க வைக்கிறது.

படத்தில் ஏகத்துக்கு நடிகர் பட்டாளம். பகத்சிங்காக வரும் பாலசரவணனுக்கு படத்தின் தொடக்கம் முதலே ஆரியால் ஏகத்துக்கு தர்ம சங்கடம் எழுகின்றது. பாலசரவணனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மிஷா கோஷல். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாக வரும் சுப்பு பஞ்சு கலகலப்பூட்டுகிறார்.

ஆங்காங்கே சின்னச் சின்ன வசனங்களாலும் முடிந்தளவு படத்தைச் சுவாரசியப்படுத்தி தன் அறிமுகத்தை அழுத்தமாகப் பதிந்துள்ளார் இயக்குநர் ஆர்.கே.