Exodus: Gods and Kings
எக்சோடஸ் என்றால் கிரேக்க மொழியில் பெருந்திரளான மக்களின் வெளியேற்றம் அல்லது பயணம் என பொருள்படும். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான படம். பலமுறை படமாக்கப்பட்ட மோசஸின் கதையை, கிளாடியேட்டர் படத்தின் இயக்குநர் ரிட்லி ஸ்கோட் இயக்குகிறார் என்பதுதான் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் காரணம்.
வருடம் 1500 கி.மு. எகிப்தின் மெம்ஃபிஸ் எனும் நகரத்திலுள்ள அரண்மனையில் இளவரசனாக வளரும் மோசஸ், 400 வருடமாக அடிமைகளாக இருக்கும் ஹீப்ருகள் வேலை செய்து கொண்டிருக்கும் பைதோம் நகரத்துக்குச் செல்கிறான். ஹீப்ருகளின் மதகுரு ஒருவரின் மூலம் தானும் ஒரு ஹீப்ருதான் எனத் தெரிந்து கொள்கிறார் மோசஸ். இந்த உண்மை தெரிய வந்ததும் புதிய மன்னரான ரம்சீஸ் – II, மோசஸை நாடு கடத்துகிறார். செங்கடல் அருகிலிருக்கும் டைரனுக்குச் (Straits of Tiran) செல்கிறார். ஜிஃபோரா எனும் பெண்ணை மணந்து, 9 வருடங்கள் அங்கேயே ஆட்டிடையராக வாழ்கிறார். ஒருநாள் மலை மீதேறும் ஆடுகளைப் பிடிக்க முயலும்போது மண் சரிவு ஏற்படுகிறது. அதில் சிக்கிக் கொள்ளும் மோசஸின் கண் முன் ஒரு முட்செடி தீப்பற்றி எரிகிறது. மோசஸ் முன் ஹீப்ருக்களின் கடவுள் தோன்றி, மீண்டும் எகிப்துக்குச் சென்று ஹீப்ருகளை விடுவிக்குமாறு கூறுகிறார்.
எகிப்துக்குச் சென்று ரம்சீஸிடம் ஹீப்ரு மக்களை அடிமைத்தளையில் விடுதலை அளிக்குமாறு கேட்கிறார். ரம்சீஸ் மறுக்கிறார். மோசஸ் புரட்சியாளராக மாறி எகிப்தின் தானியக் கிடங்கையும், கப்பல் படையையும் நிர்மூலம் ஆக்குகிறார். பின் மோசஸ் கடவுளுடன் இணைந்து எகிப்து மீது ஒன்பது வகையான பேரழிவை (Plague/கொள்ளை நோய்) ஏவுகிறார். இறுதியாக ஹீப்ரு கடவுள், எகிப்தியக் குடும்பங்களின் முதல் ஆண் குழந்தை இறக்கும் என்ற சாபத்தை ஏவுகிறார். மன்னரான ரம்சீஸின் குழந்தையும் இறந்துவிடுகிறது. வேறு வழியில்லாமல் ரம்சீஸ் ஹீப்ரு மக்களை விடுதலை செய்கிறார். ஆனால் அடுத்த நாள் கோபம் மூண்டெழ, அவர்களை அழித்தொழிக்க சேனையுடன் புறப்படுகிறார். மோசஸ் தன் மக்களை செங்கடலைக் கடந்து வழிநடத்தி சென்று நிரந்தர விடுதலையைப் பெற்றுத் தந்து விடுகிறார். இதுதான் படத்தின் கதை.
பேட் மேனாக நடித்த க்றிஸ்டியன் பேல்தான் மோசஸாக நடித்துள்ளார். உற்சாகமும் இறைநம்பிக்கையுமற்ற மோசஸாக நடித்துள்ளார். ரிட்லி ஸ்கோட் சித்தரிக்கும் கடவுள் கூட கைகளில் டீ கோப்பையுடனுடைய மூர்க்கமும் விளையாட்டுத்தனமும் மிக்க பதின்ம வயது சிறுவன். சூப்பர் ஹீரோவான மோசஸின் அற்புதங்களில் முக்கியமானது செங்கடல் பிளந்து அவருக்கு பாதை விடுவது. ஆனால் ரிட்லி ஸ்கோட்டோ, எகிப்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக செங்கடலில் ஏற்படும் சுனாமியால்தான் நீர் உள்ளிழுக்கப்பட்டதென லாஜிக்கல் ரீசன் எல்லாம் சொல்கிறார். ஆதலால் படத்தில் உணர்வுபூர்வமாக ஒன்றமுடியவில்லை. இவ்வளவு லாஜிக் பார்த்தாலும், எகிப்தைச் சேர்ந்த பிரதான கதாபாத்திரங்கள் அனைவரும் வெள்ளைத் தோலினராக இருக்கின்றனர். அதைவிட கொடுமை, கருப்புத் தோலினர் சேடிப் பெண்களாகவோ அடிமட்ட வேலைக்காரர்களாகவோ சித்தரிக்கப்பட்டிருப்பது.
மோசஸின் கதை அனைவருமே அறிந்தது என்பதாலோ என்னவோ மோசஸ் எகிப்து அரண்மனைக்கு வந்து சேரும் கதையெல்லாம் விட்டுவிட்டு வளர்ந்த மோசஸான க்றிஸ்டியன் பேலையே திரையில் அறிமுகப்படுத்துகின்றனர். பின் பிரம்மாண்டமான போர்க்களக் காட்சியொன்று வருகிறது. செங்கடலைக் கடந்ததாக நம்பப்படும் மக்களின் எண்ணிக்கை சுமார் 600,000 பேர். அந்த பிரம்மாண்டத்தை படத்தில் உணரச் செய்துள்ளனர். ஆனால் அதைவிட பேரழிவுக் காட்சிகள் மிகத் தத்ரூபமாய் சி.ஜி. செய்யப்பட்டுள்ளது. நைல் நதி ரத்தமாக மாறுவது, மெம்ஃபிஸ் நகரம் முழுவதும் தவளைகளால் நிறைவது, கால்நடைகள் இறப்பது, புழுதிப்புயல் போல் வெட்டுக்கிளி நகரத்துக்குள் பறந்து வருவது, பனிக்கட்டி மழை என மிரட்டியுள்ளனர். ரம்சீஸின் அழகான குழந்தை இறக்கும்போது, பதினம் வயது கடவுளாக வரும் ஐசக் ஆன்ட்ரூஸ் மேல் கோபம்தான் எழுகிறது. அடிமைகள் காக்கப்பட வேண்டுமென்ற உணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறிவிட்டார் இயக்குநர். தன்னை கடவுளென செருக்குற்றிருக்கும் ரம்சீஸை வன்மத்துடன் அடிபணிய வைக்க ஹீப்ரு கடவுள் முயல்வதாகவே தோன்றுகிறது. மோசஸும் தன்னை தேவத் தூதராகவோ, மக்களைக் காக்க வந்த இரட்சகராக உனர்ந்ததாகத் தெரியவில்லை. கடவுளின் தொல்லை தாங்காமல் அவரது கைப்பாவையாகவும், நடப்பவை யாவுக்கும் சாட்சியாகவுமே இருக்கிறார். எகிப்திய மன்னருக்கும், ஹீப்ரு கடவுளுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டியாகவே படம் தெரிகிறது.
ரம்சீஸீன் சேனை ரதங்களை மலை விளம்பில் வேகமாகச் செலுத்தும் காட்சி அச்சுறுத்துவதாக இருக்கிறது. கண்டிப்பாக படத்தை 3டியில் பார்க்கணும். சுனாமியால் அலைகள் எழுந்து வேகமாக வரும்போது, அதை ஒரு ஒற்றைக் குதிரை வேடிக்கை பார்த்துவிட்டு ஓடும் காட்சி மனதை ஏதோ செய்கிறது. ஆனாலும், கிளாடியேட்டரில் நிகழ்த்திய மேஜிக்கை ரிட்லி ஸ்கோட் செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.