Shadow

எங்கள் ஆசான் விமர்சனம்

Engal-Aasaan

“எங்கள் ஆசான்” என்ற பெயரைப் பார்த்தவுடன், நாட்டுக்கு நீதி சொல்ற கதையாக இருக்குமோ என்ற கிலியாக இருந்தது. ஆனால் இது பேன்ட், ஷர்ட் போட்ட “பெரியண்ணா” பாகம் இரண்டு . விஜயகாந்த் ஊருக்கு நல்லது செய்கிறார். அப்படியே ஒரு காதல் ஜோடியையும் சேர்த்து வைக்கிறார். இதை பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமில்லாமல் சொல்லியுள்ளார் இயக்குனர் கலைமணி. பெரியண்ணாவில் சூர்யா, எங்கள் ஆசானில் சிக்கியது விக்ராந்த். ஒரு ஃபைட்டு, ரெண்டு பாட்டு என்று முதல் பாதியில் வலம் வந்து விட்டு அதோடு பொறுப்பை விஜயகாந்திடம் கொடுத்து விட்டு கடைசியில் நேராக க்ளைமாக்சில் தலையை காட்டுகிறார்.

தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இந்த படம் ஒரு பெரிய உதாரணம். அமர்களமான அறிமுகம் கதாநாயகனுக்கு இல்லை. புது முயற்சியாக சம்பந்தமே இல்லாமல் மிரட்டலான வில்லி அறிமுகம். படம் முழுவதும் வில்லியாக வலம் வந்து, கடைசி நேரத்தில் கதாநாயகியாக மீண்டும் ஸ்டன்ட் அடித்து விஜயகாந்தை கட்டி பிடித்துக் கொள்கிறார். இந்த கதாநாயகிகளே இப்படி தான் என்று நிருபித்து விட்டார். காதல் சந்தியாவின் தந்தையான தண்டபாணி சிரிப்பு எம்.எல்.ஏ. வாக படத்தின் அறிமுக காட்சியில் தோன்றி அப்படியே மறைந்தும் போகிறார். படத்தில் விஜயகாந்த்தின் கொ.ப.செ. யாக இளவரசு படம் முழுவதும் வந்து பேசிக் கொண்டே இருக்கிறார். விக்ராந்தை போலவே கலாப காதலனில் அறிமுகமான அக்ஷ்யாவிற்கும் இரண்டு பாட்டுகள். சிவாஜி சுமன் போல் மழமழவென்று வருகிறார் அறிமுக வில்லன். ஊர் மக்களை ஏமாற்றி வங்கியில் அவர்கள் பெயரில் பண மோசடி செய்கிறார். வங்கி மேலாளராக வரும் கதாநாயகன் இதை கண்டுபிடிக்க வில்லனுடன் பகைமை வளர்கிறது. அதனால் கதாநாயகனை பழி வாங்க நாயகியை வில்லியாய் மாற்றுகிறார் வில்லன். பிறகு தன் பெண்ணின் காதலுக்காக விக்ராந்த்தை கடத்துகிறார். விஜயகாந்த் வில்லனுக்கு எதிராக அக்ஷ்யாவையும், விக்ராந்த்தையும் ராணுவமே எதிர்த்தாலும் சேர்த்து வைப்பதாக சூளரைக்கிறார். முடிவு பாரம்பரிய தமிழ் சினிமா முடிவே தான். சுபம்.

நகைச்சுவை: நகைச்சுவை பகுதிகளை பிரத்யேகமாக தயாரிப்பாளரான எச்.வி. தங்கராஜ் அவர்களே எழுதியுள்ளார். படம் முழுவதும் ஒரு மாதிரி நகைச்சுவையாக சென்றாலும், நகைச்சுவை பகுதி மட்டும் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. செந்திலும், கஞ்சா கருப்பும் வரும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. விஜயகாந்த் இருக்கும் பொழுது தேவையில்லாமல் இவர்கள் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை.
திருப்பங்கள்: * கூட்டுறவு வங்கி எரிந்து விட, புதிதாய் வங்கி ஒன்று ஆரம்பிக்கிறார் விஜயகாந்த். (தனி வங்கி முறை இந்தியாவில் இல்லை என்பது இயக்குனருக்கு தெரியாது போலிருக்கு..) * எம்.எல்.ஏ ஒருவர் வங்கி மேலாளரைப் பார்த்து பயந்து பம்முவது. (எந்த ஊர்ல நடக்கும் அநியாயம் இது…) மன்னிச்சிடுங்க விஜயகாந்த்தை பார்த்து பயப்படுகிறார் என்ற பார்வையில் பார்க்கனும் போல. அப்ப சரி. * வில்லனை நம்பும் ஊர் மக்கள் திருந்துவது. தற்கொலைக்கு முயலும் அக்ஷ்யா நொடியில் திருந்துவது. திருடர்களாக வரும் செந்தில் மற்றும் கஞ்சா கருப்பு திருந்துவது. வில்லியாக வரும் கதாநாயகி திருந்துவது. கடைசியில் வில்லன் திருந்துவது. இப்படி எல்லாரையும் திருத்தி விடுகிறார் எங்கள் ஆசான்.

கை தட்டல்: “மதம் கொண்ட யானை என்ன பண்ணும் தெரியுமா?” “சினம் கொண்ட சிங்கத்த பார்த்து பயந்து ஓடும்.” இந்த படத்தில் வரும் எம்.ஜி.ஆரின் “ஆயிரத்தில் ஒருவன்” வசனம் வரும் பொழுது விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

Leave a Reply