எவ்வளவு நாள்?
வசந்தம் போய் கோடையும் வந்து விட்டது.
துவைக்கப் பட்ட கருஞ்சேலையாய் சாலை ஈரத்தில் மின்னிக் கொண்டிருந்தன. வழுக்கிக் கொண்டிருக்கும் வாகனங்களின் மறுபுறம் செவ்வண்ண தென்றலாய் அவள். நான் பார்க்க.. நான் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் தென்றல் பேருந்தில் ஏறும் வரை. மழைக் காலத்தில் சாரல் தானே அடிக்கும்.. எங்கிருந்து தென்றல் வந்தது என என்னால் யோசிக்க முடியவில்லை.
ஒருவேளை செவ்வண்ணம் என்னுள் வானவில்லை தோற்றுவித்திருக்கலாம். கடைசியில் நானுமா? ஆனால் வெளியில் தெரிந்தால் தானே நான் நாண வேண்டி இருக்கும் என பீறிட்டு எழும் கவிதை எழுதும் ஆசையையும் அடக்கிக் கொண்டேன்.
நான் சாப்பிடும் அளவு குறைகிறதா, தூக்கம் சரியாக வருகிறதா,காதல் பாட்டு பிடிக்கிறதா என என்னை உள்நோக்கி பார்த்தேன். வானவில்லும், மழையும் ஒருங்கே தெரிந்தது.ம்ம்..நடப்பவை எல்லாம் இயற்கைக்கு மாறாகவே நடக்கின்றன.
அக்னி நட்சத்திரம் அனைத்தையும் எரித்து விடுவது என தீர்மானித்து விட்டது போலும். பாவம் என்னை அன்று தாக்கிய தென்றல் முக்காடு போட்டு கொண்டு ‘தேமோ’வென வெயிலில் சென்றுக்கொண்டிருந்தது.பாரதியார் பாடல் எல்லாம் என்னவளுக்கு பரீச்சயம் இல்லை போலும். பெரும்பாலும் அவள் பாதம் பார்த்தே நடக்கிறாள்.நான் பின் தொடர்கிறேன் என்று எப்படி தான் நான் தெரியப்படுத்துவேன்?
அலையோ அலை என அலைந்து,தென்றலைக் குறித்து எந்தவொரு தொல்லை தரும் நண்பர்களின் உதவியுமில்லாமல் தெரிந்துக் கொண்டேன். தென்றலின் வழியில் எந்த இடைஞ்சலும் இல்லை என தெரிந்துக் கொண்டு அகமகழிந்த நொடியில் வசந்தம் பிறந்தது.
பருவங்கள் மாறுகின்றன.ஆனால் இன்னும் முதல் படியிலேயே நின்றுக் கொண்டிருக்கிறேன்.எவ்வளவு நாள் தான் இப்படியே!! என்னையும் மீறி கண்கள் கலங்கி விடும் போல.எவரையோ பார்ப்பது போல் அவள் என்னை ஒரு முறை பார்த்து விட்டாலும் கூட போதும்.ஒரு நம்பிக்கை துளிர்க்கும். ச்சே..இந்த வெயிலும்,வியர்வையும் என்னை மேலும் சோர்வும்,எரிச்சலடைய செய்கின்றன.இன்று கூட அவள் திரும்பவில்லை எனில்..நினைத்து பார்க்கவே அழுகை,அழுகையாக வருகிறது.
சடசடவென்று ஆலங்காட்டி மழை திடீரென பெய்தது. இருக்கும் வெப்பத்தை மேலும் கிளறுகிறது.மழை நல்லதுக்கு தான் என்றாலும், அவளும் நனைவாளே என்று கவலையாக இருந்தது.ஆனால் அவளோ மிக குதூகலமாய்,முகத்தில் வழிந்த நீரை வழித்து வானத்தை நோக்கி வீசி எறிந்தாள்.எவ்வளவு அழகு? ஒரு குழந்தையின் துள்ளல் போல!!!.
சட்டென்று மழை நின்றது.கிளறப்பட்ட வெப்பம் மட்டும் அலையாய் எழுகின்றது.துப்புக் கெட்ட மழை. ஊருக்கும் நல்லது செய்யவில்லை. என்னவளையும் அதிக நேரம் மகிழ்விக்கவில்லை. என்னை பார்க்காத அவள் மகிழ்ச்சியில் வானத்தை பார்த்தாள்.ஆனால் இந்த மழையோ..
ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்..
அவ்வ்.. ஒருவேள இப்படி இருக்குமோ? அவள் கண்டுக்கொள்ளவில்லை என்பதால் சுட்டெரிக்கும் ஆதவன் மனம் வருந்தி அழ,பிறகு என்னவள் பார்த்தவுடன் அழுகையை நிறுத்தி இருக்குமோ!!
– இரகுராமன்