‘ஆவி கம் கேம் (Cam)’ எனும் நிகழ்ச்சி நடத்துபவர் விஷால். ஆவிகளை அறிந்து, அதன் தேவைகளைப் புரிந்து, அதனிடம் பேசி அவைகளை அமைதிப்படுத்தி மறு உலகிற்கு அனுப்பி வைக்கிறார். கோட்டைமேடு எனும் ஊரில் இரத்தக் காட்டேரி உலாவுவதாகத் தெரிய வர, அங்கே கேமிரா மேனுடன் செல்கிறார் விஷால். அங்கே நடக்கும் நம்ப முடியாத அமானுஷ்யச் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
விஷாலாக அர்வி நடித்துள்ளார். பேயின் இருப்பைக் கண்டறிய ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார் அர்வி. உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத உறைந்த முகம் அவருக்கு. இருட்டான இடங்களில் கருவியோடு அலைந்து, ‘எனிபடி இஸ் தேர்?’ எனக் கேட்டு, ஆவிகள் எழுப்பும் சத்தத்தை ரெக்கார்ட் செய்து, அவற்றைக் கேட்டு, உணர்ந்து அவைகளின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு அவைகளுக்கு உதவுகிறார் விஷால். ஆவிகள் எழுப்பும் ஒலிகள் வழக்கமான தமிழ்ப்பட பேயின் சத்தங்களாக இல்லாமல், கான்ஜூரிங் போன்ற ஹாலிவுட் படப் பேய்களின் பாணியில் இருப்பது சிறப்பு.
படத்தில் இரண்டு கதாநாயகிகள். K.D. எனும் பாத்திரத்தில் அலிஷா சோப்ரா நடித்துள்ளார். ‘ஆவி கம் கேம்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளரான இவருக்கு, நாயகன் அர்வி மீது ஒரு தலைk காதல். நாயகனுக்கோ கோட்டேமேடில் சந்திக்கும் செளமியா மீது காதல். செளமியாவாக நடித்திருக்கிறார் ஷாலு. அந்த ஊரில் ஏற்படும் அமானுஷ்யச் சம்பவங்களை மீறி செளமியாவும் விஷாலும் இணைந்தார்களா என்பதற்குப் பதில்தான் படத்தின் முடிவு.
சென்னைக்கு மிக அருகில், வீடு கட்டித் தரும் ரியல் எஸ்டேட்காரராக இயக்குநர் ரவி மரியா நடித்துள்ளார். படத்தின் கலகலப்பிற்குச் சிறிது உதவினாலும், ‘இது அப்பா கட்டடம்; இது அம்மா கட்டடம்; இது அப்பா வச்சிருந்த சித்தி கட்டடம்’ என மொக்கை போட்டுச் சாவடிக்கிறார். பூசாரியாக மயில்சாமி நடித்திருந்தும் நகைச்சுவைக்குப் பெரிதும் உதவவில்லை. நாயகனின் நண்பனாகவும், ஆவி நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளராக வரும் சாம்ஸின் நிலையும் அதுவே.
ரவிவிஜய் ஆனந்தின் இசையில், ‘உயிரே.. உயிரே..’ பாட்டு ஈர்க்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் V.பிரான்சிஸ் ராஜ். சீரியசான படத்திற்கு ஏன் ‘என்னமா கதவுடுறானுங்க’ எனத் தலைப்பிட்டனர் எனப் புரியவில்லை. ஆவிகளைப் பற்றிக் காலமெல்லாம் ஆராய்ச்சி செய்பவராக வரும் விஷால் இவ்வளவு மொக்கையான முடிவிற்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வாய்ப்பேயில்லை.
கூடு விட்டு கூடு பாய்வதில் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் அம்பிகா. திடீரென சம்பந்தமே இல்லாமல் ஃப்ரேமிற்குள் வந்தாலும், படத்தின் மிக முக்கியமான திருப்பத்திற்குக் காரணமாக உள்ளார். அந்தத் திருப்பத்தை மக்கள் ஏற்பார்களோ என்ற சந்தேகத்தில்தான், அவர்களே ‘என்னமா கதவுடுறானுங்க’ எனத் தங்களைச் சுருக்கிக் கொண்டார்களே என்று ஐயம் எழுகிறது. படத்தின் கதையே இடைவெளிக்குப் பின் தொடங்குவதாலும், பிரதான பாத்திரங்கள் ஏற்றவர்களின் அனுபவமற்ற நடிப்பும், க்ளைமேக்ஸில் வரும் அவசரமான காட்சிப்படுத்துதலும், குறைந்த பட்ஜெட் கிராஃபிக்ஸும் நிறைவான க்ளைமேக்ஸை அளிக்கத் தவறி விடுகிறது.