Shadow

“என் குடும்பம் இது!” – நாசர்

Saivam Family

சைவம் படத்தில் காரைக்குடி வாழ் செட்டியாராக நடித்துள்ளார் நாசர். ‘இந்தப் படம் தனக்கு இன்னொரு குடும்பத்தைத் தந்துள்ளது’ என நெகிழ்வுடன் ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா மேடையில் சொன்னார் நாசர். படத்தில் தன்னுடன் நடித்தவர்கள் ஒவ்வொருவரையும் அந்தக் கதாபாத்திரத்தின் உறவுமுறையை வாஞ்சையுடன் சொல்லி, சைவம் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்து வைத்தார். கண்ணு பட வைக்கும் அழகான பெரிய குடும்பம்தான் அது என்பதில் சந்தேகமில்லை.

Anushka“எனக்கு மகள் இல்லாத குறை இந்தப் படத்தில்தான் தீர்ந்தது” என தனக்கு மகளாக நடித்தவரை மேடையில் இருந்தே தேடினார் நாசர். விழாவிற்கு சர்ப்ரைஸாக வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த அனுஷ்காவும், இரு பக்கமும் திரும்பி அவரது மகள் யாரெனப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த நாசர், “எனக்கு ஒரு மகள் இருக்கா.. ஆறடி உயரத்தில்” என்றார் அனுஷ்காவைப் பார்த்து. “நான் உன்னைத்தான் என் மகள் என சொல்லிட்டிருப்பேன். உன்னை நாங்க மகளாகத் தத்தெடுத்துக் கொண்டோம்” என்றார்.

‘சைவம்’ படத்தில் நாசரின் மகன் பாஷா, அவருக்கு பேரனாக நடித்துள்ளார். அந்த அனுபவத்தைப் பற்றி பாஷாவுடன் கேட்ட பொழுது, “ஒருநாள் ஹைதராபாத்தில் இருந்தோ எங்கிருந்தோ வந்தார். இந்த மாதிரி நடிக்க சான்ஸ் வந்திருக்குன்னு சொன்னேன். அப்போ நடிக்கிறது கன்ஃபார்ம் ஆயிடுச்சு. ஆனா சொல்லலை. அப்புறம் முதல்நாள் ஷூட்டிங்கில்தான் அவருக்கு நான் நடிக்கிறது தெரியும்.

கொஞ்சம் பயமாக இருந்தது. முதல்முறையாக கேமிரா முன்.. அதுவும் அப்பாகூட நடிக்கிறேன்னு. எல்லோரும் சொல்வாங்க.. அப்ப தெரியலை. ஆனா கூட நடிக்கிறப்பதான் அவரொரு ஜீனியஸ் என்பது தெரிந்தது” என்றார்.

‘நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்’ என நெஞ்சில் கை வைத்து சிரித்த நாசரிடம், “உங்க மகன் உங்களுக்கு பேரனாக நடித்த பொழுது எப்படி உணர்ந்தீங்க?” எனக் கேட்கப்பட்டது. “என் மகனை மகனாகவே இப்பதான் உணர்ந்தேன். ஷூட்டிங்ல எப்பவும் பிசியாக இருந்ததால் மகனிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பை இழந்திருந்தேன். ஸ்கூல் முடிச்சுட்டு படிக்க வெளில போயிட்டான். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் பொழுதுதான் நிறைய அவனிடம் பேசி, பக்கத்திலிருந்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தது” என்றார் நாசர்.

“பத்து வருடம் கழித்து, பாஷாவை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்பது குறித்து ரொம்ப பெருமைப்படுவேன்” என்றார் இயக்குநர் விஜய்.

Dariyal Games - Saivam game Appஇது மட்டுமல்லாமல், நாசரின் இன்னொரு மகனான ஃபைசலும் அவரது நண்பர்களும் இணைந்து “சைவம்” மொபைல் கேமை உருவாக்கியுள்ளார்கள். ‘டரியல் கேம்ஸ்’ என்பது அந்தக் கம்பெனி நேம். கூகிள் பிளேவில் கிடைக்கும் ‘சைவம்’ கேமின் தீம், குழந்தை ஒன்று சேவலைத் துரத்திப் பிடிப்பது போன்றதாகும். ‘இந்த கேமை பத்தே நாளில் உருவாக்கியுள்ளார்கள் என வியந்தார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது. அவர் தான் நாசரிடம், ‘கேம் டிசைனர் ஆகணும்னு ஆசைப்பட்டான்னா.. யோசிக்காம இப்பவே சேர்த்து விடுங்க” எனச் சொல்லியுள்ளார். கதை, கலை, கதாபாத்திர வடிவமைப்பு என ஒரு சினிமா எடுப்பதற்கு தேவையான அத்தனை விஷயங்களும் கேம் டிசைனிங்கிலும் உண்டெனச் சொன்னார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

தந்தை A.L.அழகப்பன் தயாரித்து, மகன் விஜய் இயக்குகிறார் என்பதையும் சேர்த்து, ‘சைவம்’ பலவகையிலும் ஒரு குடும்பப் படமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.