

“என் பெயர் ஹான். நான் பயங்கரவாதி இல்லை.”
இதை அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து சொல்லத் துடிக்கும் ‘ரிஸ்வாஸ் கான்’ என்ற முஸ்லீம் இளைஞனை பற்றிய படம். யார் அவன்? ஏன் அப்படி சொல்ல நினைக்கிறான்? என்று கதை முன்னும் பின்னும் பயணிக்கிறது.
‘அஸ்பெர்ஜர் சின்ட்ரோம்’. ரிஸ்வாஸ் ஹானுக்கு உள்ள குறை. இந்த குறை உள்ளவர்கள் மற்றவர்களின் முகத்தை பார்த்து பேச முடியாதவர்களாகவும், சமூகத்தில் சஜமாக பழக முடியாதவர்களாகவும் இருப்பர். ஆனால் மிகுந்த அறிவாளிகளாக இருப்பர். எனினும் தனக்கு மிகவும் பிடித்த விஷயத்தை மீண்டும் மீண்டும் மற்றவர்கள் கேட்க விழைகிறார்களா என்ற கவலையின்றி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இத்தகைய குறை உள்ள ரிஸ்வாஸ் ஹான் என்னும் இளைஞனாக படத்தில் வலம் வருகிறார் ஷாருக். நடிப்பின் முதிர்ச்சி அநாசயமாய் வெளிப்படுகிறது. தாயின் இறப்பிற்கு பின் தம்பியிடம் அமெரிக்கா வரும் ஷாருக்கிற்கு, தம்பி மனைவி தான் ஆறுதல் அளிக்கிறாள். தம்பியின் அழகு சாதன பொருட்களை விற்பவரின் கண்களில் அவள் விழுகிறாள்.
கஜோல். மின்சாரக் கனவு படத்தில் பார்த்த அதே பளீச் புன்னகையோடும், கலகலப்பான இயல்போடும் திரையில் தோன்றுகிறார். மந்திரா என்னும் இந்து கைம்பெண்ணாக வரும் கஜோல் அழகு சாதன நிலையம் ஒன்று வைத்துள்ளார். பழக்கங்கள் காதலில் விழுந்தாலும், ‘என்னை கல்யாணம் பண்ணிக்கோ’ என்ற தேய்ந்த ஒளிநாடா போல சொன்னதையே சொல்கிறார். சமீர் என்னும் பதினைந்து வயது மிக்க கஜோலின் மகன் சமீர்ஹான் ஆகிறான். ஷாருக், கஜோல், சமீர் என மூவரும் ஓர் குடும்பமாய் இருப்பதை பொறுக்க முடியாமல் பின்லேடன் இரட்டைக் கோபுரங்கள் மேல் விமானத்தை ஏவுகிறான். முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என அச்சம் கொள்கின்றனர் அல்லது அருவருக்கின்றனர் அமெரிக்கர்கள் அல்லது முஸ்லீம் அல்லாதவர்கள். அதன் சாராம்சமாக சமீராய் இருந்த பொழுது விரும்பப்பட்ட கஜோலின் மகன் சமீர்ஹானை மாறியதால் அவன் நண்பனால் வெறுக்கப்படுகிறான். இது தொடர்பான கை கலப்பில் சமீர் கொல்லப்படுகிறான்.
மத கலவரத்தால் தான் சமீர் இறந்ததாக வியர்வை சிந்தி கண்டுபிடித்ததை காவல்காரர் கஜோலிடம் போட்டுக் கொடுக்கிறார். மகன் இறந்த சோகம் ஷாருக் மீது கோபமாக திரும்புகிறது. ஒருவாறாக பேசி சமாதானத்திற்கு வருபவர்கள்.. ‘என் பெயர் ஹான். நான் பயங்கரவாதி இல்லை’ என்று அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்லி விட்டு வா என கஜோல் சொல்லி விடுகிறார். ஷாருக் ‘சான் பிரான்சிஸ்கோ’வில் இருந்து ‘வாஷிங்டன்’ புறப்படுகிறார். மாதக் கணக்கான பயணத்தில் பல நபர்களை சந்திக்கிறார். அதில் வரும் நீக்ரோ பெண்மனியை குறிப்பிட்டு சொல்லலாம். ஷாருக்கும் அவரும் எதிர் எதிரில் உட்கார்ந்திருப்பார்கள். ஷாருக் மடு போலவும், பாசத்தோடும் கனிவாகவும் பேசும் ‘மாமா ஜென்னி’ என்னும் அந்த கதாபாத்திரம் மலை போலவும் வீற்றிருப்பார்கள். முழுக் கதையுமா சொல்லுவார்கள்? திரை அரங்கில் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தி தெரியா விட்டாலும் படம் பெருமளவு புரியும் என்பதற்கு நானே உதாரணம். சில சமயங்களில் இந்தி தெரிந்தவர்கள் திடீரென்று சிரித்து எரிச்சல் மூட்டுவார்கள். ஆனால் படம் நம்மை எரிச்சலூட்டது என நம்பலாம்.
ரவி கே.சந்திரன். இவர் தான் நமக்கு அந்த நம்பிக்கையை அளிப்பவர். பி.சி. ஸ்ரீராமிடம் இருந்தவர். பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர். சான் பிரான்சிஸ்கோவின் முழு அழகையும் காட்டி திருப்திப்படாமல் கதையோடு சென்று செல்லும் இடங்களின் அழகையெல்லாம் நமது கண்களுக்கு விருந்தளிக்கிறார். முன்பே அமிதாப் பச்சனின் ‘பிளாக்’ படத்தின் அசத்தலான ஒளிப்பதிவின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழர். மீண்டும் ஒருமுறை அவரது பெயர் இந்தியாவெங்கும் ஒலிக்கும்.
ஒரு வார்த்தை கூட எந்தவொரு பாட்டிலும் புரியவில்லை. ஆனால் தியேட்டரில் எவரும் புகைப் பிடிக்க எழவில்லை. காரணம் இசை மட்டும் ஒளிப்பதிவு. ‘ஷங்கர் -எக்ஸான் -லோய்’ என்று தொடக்கத்தில் இசையின் கீழ் பெயர் வரும் பொழுதே கைத்தட்டலும், விசிலும் அரங்கில் அமர்க்களப்பட்டது. அப்பொழுதே அங்க இவர் பெரிய ஆளாக தான் இருக்கனும் என்று என்னை நம்ப வைத்து விட்டார்கள். எனக்கு தெரிந்ததெல்லாம் உலகப் புகழ் ‘ரஹ்மானும், பிரபஞ்ச புகழ் ‘இளையராஜாவும் இன்ன பிற தமிழ்ப்பட இசையமைப்பாளர்களே. இந்த படத்தின் மூலம் ஷங்கர்- எக்ஸான் -லோய் என் நினைவில் இருக்கும் இன்னொரு இசையமைப்பாளராக பரிணாமித்திருக்கிறார்.
உலகளவில் நிலவும் ஒரு பிரச்சனையை ஷிபானி காஷ்யாப் திரைக்கதையாக உருவேற்றிருக்கிறார். அதனால் படம் வெளிநாடுகளிலும் சக்கைபோடு போடுவதாக கேள்வி. இந்தப் படத்தில் எனக்கு குறை சொல்ல சில விஷயங்கள் உண்டெனினும், நல்ல முயற்சியை வரவேற்கும் நோக்கத்தோடு அவற்றை குறிப்பிடப்படவில்லை என்றும் சொல்ல முடியாது. பால்தாக்கரேவை எதிர்த்து மட்டுமே நான் இந்தப் படத்திற்கு ஆதரவளிக்கிறேன்.
– ஜங்கன்