Shadow

ஏட்டுச் சுரைக்காய் எண்ணங்கள்

தாம்பரம் ரயில் நிலையம்.சென்னையில் உள்ள மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்று …வெளியூர் செல்பவர்கள்,சென்னையில் மற்ற பகுதிகளில் வேலைப் பார்ப்பவர்கள் ,படிப்பவர்கள் ,வியாபாரிகள் ,பிச்சைக்காரர்கள் என எப்போதும் கூட்டமாகவே காட்சியளிக்கும் ரயில் நிலையம் .தனிமையின் பொருள் உணரா நிலையம் அது….

அனிதா தினமும் தாம்பரத்தில் இருந்து அவள் வேலை பார்க்கும் தலைமைச் செயலகத்திற்கு மின்சார ரயிலில் செல்லும் பயணி…கூட்ட நெரிசலில் அவதிப்படுவதை தவிர்க்க அதிகாலை ஏழரை மணி ரயிலை பிடித்துவிடுவாள்…வசிப்பது மகளிர் விடுதி என்பதால் ஏழரை மணி வண்டியை பிடிப்பதொன்றும் அவளுக்கு சிரமம் இல்லை …

ஜன்னலோர இருக்கையை பிடித்தே தீரவேண்டும் என்று தினமும் இஷ்டதெய்வத்தை வேண்டிக்கொண்டே ரயிலைப் பிடிப்பாள் …அதில் எப்போதும் வெற்றியும் அடைவாள்…ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாலும் அவளின் பார்வை முழுதும் ரயில் பயணிகளின் மீதே எப்போதும் இருக்கும் ..அவளுக்கு மிகவும் பிடித்தவர்கள் தினமும் அவளுடன் பயணிக்கும் பூக்காரம்மா மற்றும் பாட்டு பாடி காசு கேட்கும் இரு சிறுவர்கள்.

அந்த பூக்காரம்மா சுறுசுறுப்புடன் விறுவிறுப்பாக பூவை கட்டிகொண்டே வியாபாரம் செய்வதில் என்னமோ ஒரு அழகு இருப்பதாக நினைத்தாள்…கண்ணிமைக்காமல் அவள் பூக்கட்டும் அழகை அந்த பூக்காரம்மா சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கும் வரை ரசிப்பாள்…அவள் இறங்கியதும் வெறுமையும் ஏமாற்றமும் கலந்த ஒரு உணர்வு அவளைத் தொத்திக்கொள்வதை தினமும் உணர்வாள்…

ஆனால் அவ்வுணர்வு மாம்பலம் ரயில் நிலையம் வரைதான் …ஏனெனில் அவளுக்கு பிடித்த பாட்டு பாடி காசு கேட்கும் சிறுவர்கள் மாம்பலத்தில்தான் ஏறுவார்கள்..கிழிந்த சட்டை போட்டுக்கொண்டு பார்க்கவே பரிதாபமாக இருந்தாலும் அவர்கள் பாடும் பாடல்கள் அனிதாவை மட்டுமல்லாமல் சக பயணிகள் அனைவரையும் மெய் மறக்கச் செய்யும்…இவர்களுக்கு எப்படியாவது சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என பல முறை இறைவனிடம் வேண்டி இருக்கிறாள்….தினமும் அவர்களுக்கு காசு ஈய வேண்டும் என நினைத்தாலும் அவள் நிதி நிலைமை வாரத்திற்கு இரு முறை மட்டுமே அவர்களுக்கு காசு கொடுக்க அனுமதிக்கும் …

அன்றும் அப்படித்தான் ..பூக்காரம்மா இறங்கியவுடன் அச்சிறுவர்களை எதிர்ப்பார்த்து விழி மேல் விழிவைத்து காத்திருந்தாள்…மாம்பலம் ரயில் நிலையம் வந்ததும் அச்சிறுவர்கள் ஏறுகிறார்களா என கவனமாக நோட்டமிட்டாள்…ஒரு சிறுவன் மட்டுமே ஏறினான் ..இன்னொருவன் வரவில்லை..இம்மாதிரி நடப்பது ,கடந்த ஆறுமாத கால ரயில் பயணத்தில் இதுவே முதல் முறை…அவளுக்கு என்னவோ போல் இருந்தது…அந்த சிறுவனுக்கு என்னவாகி இருக்கும் உடம்பிற்கு ஏதாவது இருக்குமோ ? ரயிலில் தனியாகப் பாடிக்கொண்டிருக்கும் சிறுவனை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது …அவன் பாடியது குதூகல கீதமென்றாலும் அதில் ஏதோ சோகம் இருப்பதாகவே அவளிற்கு தோன்றியது…

அப்பூக்காரம்மாவையும் ,சிறுவர்களையும் ஆறுமாத காலமாக தினமும் ரசித்திருந்தாலும் ஒரு முறை கூட அவர்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் அவளிற்கு தோன்றியதில்லை…பூக்காரம்மாவிடம் வெள்ளிகிழமை தோறும் பூ வாங்குவாள்…வாரம் இரு முறை சிறுவர்களுக்கு காசு தருவாள்…ஆனால் இன்று அந்த சிறுவனிடம் போய் பேசவேண்டும் போல் இருந்தது …இன்னொரு சிறுவன் ஏன் வரவில்லை என கேட்கவேண்டும்போல் இருந்தது….ஒரு பெரிய மனப்போரட்டமே அவுளுள் நடந்து கொண்டிரிந்தது …ஆனால் ஏனோ அந்த சிறுவனிடம் பேசாமலேயே தலைமைச் செயலகத்தில் இறங்கிவிட்டாள்….

அந்த சிறுவனிடம் பேசாமல் தடுத்தது எது?..அவளது நிதி நிலைமையா ?இல்லை மனம் ஏற்கும் சமத்துவத்தை ஏற்காத அவள் புத்தியா? ….என்னவென்று அவளுக்கு விளங்கவே இல்லை.

– சுபலலிதா