Shadow

ஏனோ தெய்வம் சதி செய்தது!?

இங்கு எவரும் அவரவர் விருப்பப்படி பிறப்பதில்லை. அவரவர் தேர்விற்கு முகம் கிடைப்பதாக இருந்தால், பிறக்கும் முன்பே அடிதடியும் குழப்பமும் ஏற்பட்டு கண்டிப்பாக சிருஷ்டியே ஸ்தம்பித்திருக்கும். ஆனால் சினிமாவில் தான் விருப்பப்பட்ட முகத்தை காட்டமுடியும் என தனது பிரத்தியேக ஒளிச் சேர்க்கையினால் மாயங்கள் நிகழ்த்தியவர் பாலு மகேந்திரா. அப்படி ஒரு நாய்க்குட்டிக்கு அவர் ‘சுப்பிரமணி’ எனப் பெயரிட்டு, தமிழர்கள் மனதில் அதை படரவிட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகிறது. ஆம், ‘மூன்றாம் பிறை’ வெளியிடப்பட்ட தினம் இன்று. இன்னமும் எவரும் சுப்பிரமணியை மறந்திருக்க வாய்ப்பில்லை.

Moondram Pirai

கமல், பாலு மகேந்திரா ஆகிய இருவருக்குமே தேசிய விருதினைப் பெற்றுத் தந்த படம். அப்பொழுது கொண்டாடப்பட்ட படங்கள் பலவும் இன்று பார்க்க நகைப்புக்குரியதாய்த் தோன்றுகிறது. ரசனைகளின் மாற்றத்தால் நிகழும் புரிதல்கள் இவை. ஆனால் அன்று போல இன்றும் ரசனை மாற்றங்களையும் மீறி மனதைப் பாதிக்கும் படைப்பே ‘செவ்வியல்தன்மை (கிளாஸிக்)’ பெறுகிறது. அப்படியொரு அற்புதப் படமே “மூன்றாம் பிறை”. இதைச் சாதித்துக் காட்டிய மாபெரும் கலைஞன்தான் பாலு மகேந்திரா அவர்கள் (ஆனால் அவருக்கோ அவரது படங்களில் வீடு மற்றும் சந்தியா ராகம் மட்டுமே எந்தவித சமரசமுமற்ற கலைப் படைப்புகள்.)

‘கண்ணே கலைமானே.. ‘ என்ற பாடலைப் போல், மீண்டுமொரு ரசவாதப் பாடல் திரையில் தோன்ற வாய்ப்பேயில்லை என அடித்துக் கூறலாம். காரணம் இப்பாடலுக்கு உயிரூட்டிய ஈடியணையற்ற கலைஞர்களான கவியரசர் கண்ணதாசன், கே.ஜே.யேசுதாஸ், இளையராஜா, பாலு மகேந்திரா, கமலஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு திண்ணமாக இல்லை. இவர்களைப் போன்ற கலைஞர்கள் மீண்டும் இணையவும் நிகழ்தகவு (Probability) மிகவும் கம்மி.

கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடலிது. அதுவும் இப்பாடலை அவர் இரண்டு நிமிடங்களில் எழுதினார். ஆனால் இப்பாடலின் ஆயுசோ வரையறுக்க முடியாதது. பாடல் வரிகளுக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருப்பார் கே.ஜே.யேசுதாஸ். இளையராஜாவும் பாலு மகேந்திராவும் தனித்தே மாயங்கள் நிகழ்த்தக் கூடிய நண்பர்கள். கண்ணதாசனுடனும் யேசுதாசுடனும் இணையும் பொழுது கேட்கவும் வேண்டுமா? நுண் உணர்ச்சிகளை விஷூவலாக திரையில் கொண்டு வருவதில் கில்லாடியானவர் பாலு மகேந்திரா. அப்படிப்பட்ட கில்லாடிகள் கிடைக்காவிட்டாலும் தன்னை திரையில் வெளிக்கொணர்ந்து நிரூபிக்கக் கூடியவர் கமல். கமலின் பாணியில் இதைச் சொல்வதென்றால், “இப்படிப்பட்ட கலைஞர்கள் சூழயிருக்கும் பொழுது.. நானும் ஸ்ரீதேவியும் நல்லா நடிச்சோம்கிறது அதிசயமில்லை. நாங்க நல்லா பண்ணலைன்னாதான் அதிசயம்”.

‘ஏனோ தெய்வம் சதி செய்தது’ என்பது ஸ்ரீநிவாசனுக்கும் (கமல்), விஜிக்கும் (ஸ்ரீதேவி), ஏனைய சாமான்யருக்கும் வேண்டுமெனில் பொருந்தும். ஆனால் கலைஞனின் விஷயத்தில் தெய்வத்தால் சதி செய்யவே முடியாது. அவர்கள் சீரஞ்சீவிகள்.

மனம் லேசாக..

[youtube]http://www.youtube.com/watch?v=gdf0XVqDbKg[/youtube]

பாடல் வரிகள்:

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ… ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளிப் பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ… ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிரோ… ஓராரிரோ…

– மணவாளன்