
555 என்ற இலக்கம் கொண்ட டாலர் ஒன்று படத்தில் வருகிறது. இல்லையெனில் படத்தின் தலைப்பிற்கு காரணம் கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கும்.
விபத்தில் இறந்த காதலி லியனாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்த். காதலி என்று யாருமில்லை, தலையில் அடிபட்டதால் அரவிந்திற்கு ஏற்படும் கற்பனை என மருத்துவர் கூறுகிறார். லியனா என்பவர் காதலியா கற்பனையா என்ற அரவிந்தின் தேடலுக்கான விடை தான் படம்.

லியனாவாக மிர்த்திகா. மோதலில் தொடங்குகிறது நாயகனுடனான அறிமுகம். பின் எந்தவித வழக்கத்தினின்றும் வழுவாமல் காதலில் முடிகிறது. நாயகனின் ‘பவர்’ மீது அதீத நம்பிக்கை வைத்து வில்லனிடம் சவாலிடுகிறார். நல்லவர்களை ஆண்டவன் கைவிடுவதில்லை என பாட்ஷா படத்தில் ரஜினி சொன்னது போலவே, நல்லவரான நாயகியை கடவுள் கைவிட்டு விடாமல் நாயகன் மூலமாகக் காப்பாற்றி விடுகிறார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்ற உயரிய தத்துவத்தையும் உணர்த்தும் கதாபாத்திரத்தில் நிறைவாகவே நடித்துள்ளார் மிர்த்திகா. நாயகனையே சுற்றிச் சுற்றி வருபவராக எரிக்கா ஃபெர்னான்டஸ். அதற்காக அவரை ‘ரவுடி கேர்ள்ஸ்’ என்ற முழுப்பாடலுக்கு ஆட வைத்து, அதன் பின் நாயகனுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றர். தேவை சகிப்புத்தன்மை என அங்கிருந்தே அறிவுறுத்தப்படுகிறது.
பரத்தின் அண்ணனாக சந்தானம். இரட்டை அர்த்த வசனங்களில் பேச மாட்டேன் என சந்தானம் சபதம் மேற்கொள்ளும் முன்பே எடுக்கப்பட்ட படமிது. நாயகியின் லூசுத்தனத்தை, ‘ஜெனலியா போல’ என்று அவரே கலாய்க்கிறார். நாயகனுக்கு நெருங்கியவர்கள் யாரேனும் இறக்கணும் என்ற பழைய விதி ஒன்றினை இவர் மீது பிரயோகித்துள்ளனர். ‘இழவு’ என்ற பாடலிற்கு மட்டும் ஜான்விஜய் தோன்றுகிறார். அப்பாடலை எழுதியவர் படத்தின் இசையமைப்பாளரான சைமனே ஆகும்.
கதையில் இருக்கும் சுவாரசியம் திரைக்கதையில் இல்லை. காட்சிகளின் நீளத்தைக் குறைத்து, அடுத்து என்ன என்ற விறுவிறுப்பினை ஏற்படுத்த சசி தவறி விட்டார். வில்லனாக வரும் சுதேஷ் பெர்ரியின் ஃப்ளாஷ்-பேக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் என்றால் வில்லன் வேண்டும் என்பதற்காக வந்தவர் போலவே இருக்கார். அவர் நாயகனை அலைகழிக்கும் அளவு மதியூகம் கொண்டவர் என்ற எண்ணமெல்லாம் துளியும் ஏற்படவில்லை. ஒரு பாட்டில் பணக்காரனாகும் நாயகனை கூட ஏற்றுக் கொள்ளலாம். ‘குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஓடிவந்து என்னென்னவோ செய்து வில்லன் ஆயிட்டேன்’ என ஒரே வசனத்தில் வில்லனாவதை எல்லாம் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அடிபட்டு மயங்கி விழும் நாயகனை சுட்டுக் கொள்ள பார்க்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர். என்னக் கொடுமை இது? இதற்கே அவர் வில்லனிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரியும் இல்லை; தனிப்பட்ட வெறுப்பும் அவருக்கு நாயகன் மீதில்லை. தமிழ் சினிமாவில், போலீஸ் என்றால் யாரையாவது சுடணும் என்ற புது விதி உருவாகி வருகிறது.
பல பேரைக் கொன்று, நாயகன் நாயகியின் கரம் பற்றுகிறார். அந்தக் குற்றவுணர்வுலாம் நாயகனுக்கோ (பழகிட்டிருக்கும்), “பூ” போன்ற இயக்குநருக்கோ இருக்காதா?