Shadow

ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்

Aishwaraiyavum 1000 Kaakkaavm

ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். உணர்வுபூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குநர் பி.வாசு இந்தக் கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார்.

ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்‘ என இப்படத்திற்கு தற்போது பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்தியத் திரையுலகம் கண்டிருக்காத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை நடித்திருக்காத ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.  பல முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இப்படத்திற்கான அதிகப்படியான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்கள் இப்படத்திற்காக பிரத்தியேகப் பணியாற்ற உள்ளனர்.

இப்படத்தின் கதையை இயக்குனர் பி.வாசுவிடம் கேட்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரே வார்த்தையில் ‘வாவ்’ என சொல்லி அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த சிறந்த மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இசையமைப்பாளராக, ஒளிப்பதிவாளராக, படத்தொகுப்பாளராக, கலை இயக்குனராக, சண்டைப் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளனர். வட இந்தியாவில் உள்ள பிரபலமான மலைப் பிரதேசங்களிலும், கம்போடியா நாட்டிலும், பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ள அரங்குகளிலும் இப்படம் படமாக்கப்பட உள்ளது. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளதால் ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக சிறப்புப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரியாமணி நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘சாருலதா’ படத்தைத் தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் சார்பாக கே.ரமேஷ் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.