Shadow

ஐ.ஐ.டி. என்னும் மாயை

ஏழைகளுக்கு எட்டாக் கனி, நடுத்தர மக்களின் கனவு, அறிவை (!?) அடைய உதவும் ராஜபாட்டை. அதான் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி. இதில் படித்தால் போதும் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். அறிவுக்கு  நம் அகராதியில் ஐ.ஐ.டி என்றும் பெயர் உண்டு (திரைப்படங்களில் கூட விஞ்ஞானிகள் பொல வருவார்களே!!)

“மத்தாவா மாதிரி நானும் காலேஜ் படிச்சேன்.. மேரேஜ் பண்ணின்டேன்னு பேசிண்டு இருக்காம, படிச்சா ஐ.ஐ.டி ல தான் படிப்பேன்னு இப்பவே சங்கல்பம் செஞ்சுண்டு, மாமா ஆத்து டியூசனுக்கு புறப்படு. அதுக்கு முன்னாடி, பெருமாளண்ட நன்னா வேண்டிக்கோ.  27%  ரிசர்வேசன் வேணும்னு சொல்லிண்டு திரியும் அந்த நாயக்கர் ஆளுங்கெல்லாத்துக்கும்  நல்லா பாடம் கொடுண்ணு வேண்டிக்கோடா. சுப்ரீம் கோர்ட் நமக்கு எப்பவும் ஃபேவரா தான் இருக்கும். ம்ம்.. இருந்தும் என்ன செய்ய? கோபால்சாமி அய்யங்கார், கிருஷ்ணசாமி ஐயர், கே.எம் முன்ஷி இவாளாம் Drafting Committee-இல் இருந்து என்ன புண்ணியம் சொல்லுங்கோ? அந்த அம்பேத்கார சேர்மேனா போட்டு சட்டத்த எழுதுண்ணு சொன்னா.. அந்த மனுஷன் முதல்ல SC/ST க்கு 22.5% ஒதிக்கீடு பண்ணிட்டு இப்ப எல்லாரையும் கேட்க வச்சிட்டா.”

“ஏன்டியம்மா சின்ன பிள்ளையாண்ட எதுக்குடீ இதெல்லாம் சொல்லிண்டு?”

“இதெல்லாம் உங்க தோப்பானார் உங்களாண்ட சொல்லி இருந்தா.. நீரும் லட்சத்தில் சேலரி வாங்கி இருப்பேல்.”

“இப்ப என்னடி நான் ஹெட்கிளார்க்கால்ல இருக்கேன்!!”

“ஆமாம் இருக்கேல். நன்னா வந்துரப்போதுன்னா செத்த சும்மா இருங்கோ.”

என்று 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை 6 வருடம் கழித்து எழுதவிருக்கும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கு இப்போதே பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். அவனுக்கு ஐ.ஐ.டி என்பது லட்சிய கனவு. அதை அடைய  மனனம் செய்தல், உருப்போடுதல் என தவமாய் இருந்து மதிப்பெண் எடுப்பான். நுழைவுத் தேர்வில் வெல்வான். கல்லூரியில் இடமும் வாங்கிவிடுவான்.

1990 மண்டல் கமிசன் பரிந்துரை நீண்ட இழுபறிக்கு பிறகு  2006 ஆம் ஆண்டு 27% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் மத்திய அரசின் 20 உயர் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது.

இன்று தலைநகர் டெல்லியில் மாணவர்கள் போராடுகிறார்களே.. இதே போல் கண்மூடித்தனமாக அப்போதும் இட ஒதுக்கீடிற்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தினார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். AIMS மருத்தவமனை மருத்துவர்களும் இவர்களுக்கு உடந்தை. ESMA ( Essential Service Maintenance Act) பலன் அளிக்கவில்லை. 6000 மேற்பட்ட RAF(Rapid Action Force) போராட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறினார்கள். ஊடகங்கள் மாணவர்களுக்கு ஆதரவாக 24×7 வேலை செய்தது.

அனைத்துக்கும் உச்சகட்டமாக ஐ.ஐ.டி மாணவர்கள் ஒருபடி மேல் சென்று குடியரசு தலைவருக்கு மனு செய்கிறார்கள்:”எங்களுக்கு தற்கொலை செய்துகொள்ள அதிகாரம் கொடுங்கள். இடஒதிக்கீடு கொடுக்கும் பட்சத்தில் நாங்கள் தற்கொலை செய்வோம்” என சவடால் விடுத்தனர். 

போராட்டத்திற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் அபத்தத்தின் உச்சம் :

#இட ஒதிக்கீடு உயர்ந்த கல்வித்தரம்(!?) கொண்ட ஐ.ஐ.டி தரத்தை கெடுத்துவிடுமாம் (தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இனத்தவர்கள் அடிப்படையில் அறிவிலிகள் அல்லவா! அவர்களை சேர்த்தால் தரம் கெடத்தான் செய்யும்?)

# அடிப்படை உரிமை கல்வி இதில் பாகுபாடு பார்ப்பது தவறு என வாதிடுகிறார்கள் ஜென்டில்மேன் பட சங்கர் ரசிகர்கள் (எந்த விதத்திலாவது அடிப்படை உரிமையை தாழ்தப்பட்டவர்களுக்கு வழங்கியதுண்டா இந்த அறிவுஜீவிகள்?)

# இந்திய அரசு பள்ளிகளில் தரமான பாடதிட்டம் இல்லை. பள்ளிக்கல்வியில் சீர்திருத்தம் செய்யாமல் இடஒதுக்கீடு மட்டும் அளிப்பது வீண். இது ஐ.ஐ.டி போன்ற தரம்வாய்ந்த கல்வி நிறுவனத்தை கெடுக்கும் என கல்வியாளர்கள் சொல்கிறார்கள்.

உண்மையிலே ஐ.ஐ.டி வழங்கும் கல்வி தரமான அறிவுத்தேடலுக்கான கல்வியா??
கம்ப்யூட்டர் உலக ஜாம்பவான்களான, இரண்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த IBM,1976ல் தொடங்கப்பட்ட Apple, 1980 களில் தொடங்கப்பட்ட Microsoft போன்ற பழமைவாய்ந்த நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 1998 ல் தோன்றிய Google கணிணி உலகின் மன்னாக முடிசூடிக்கொண்டது.( பொருளாதார கணக்கு நமக்கு வேண்டாம் தொழில் நுட்பத்தை மட்டும் அணுகுவோம்)

உலகெங்கும் திட்ட திட்ட ஒரு லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள Microsoft ஐ Google எப்படி புறந்தள்ளியது? தொழில்நுட்பத்தால் அன்று.. தேர்ந்த தொழில்நுட்பத்தினைக் கொண்டு பின்னுக்கு தள்ளிவிட்டது என்று சொன்னால் அது மிகையான வார்த்தை அல்ல.

பொதுவாக நிறுவனங்கள் வெவ்வேறு கொள்கைகள், கோட்பாடுகளைக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு ஆப்பிள் தனது படைப்புகள் தரம் வாய்ததாக இருக்க வேண்டும்; மேலும் பார்க்க கொள்ளை அழகாக இருக்க வேண்டும் அதற்காக விலையில் எந்த சமாதானமும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதே அவற்களின் கொள்கை. மைக்ரோசாப்ட் பொறுத்தவரை எளிமை மற்றும் அழகு. என வெவ்வேறு கொள்கைகள் கொண்டாலும் இந்த நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றங்கள் செய்வதில்லை.

ஆனால், கூகுள் Page Ranking Algorithm எனும் ஒற்றை சாவியை கொண்டு உலக கணிப்பொறிகள் அனைத்தையும் திறந்துவிட்டது. திறந்த மூல நிரலியை (Open source) கொண்டு தனது தொழில்நுட்பத்திற்கு உரம் சேர்த்தது. 1997-98 லிருந்தே இமெயில் என்றால் அது yahoo என ஒரு சூழல் நிலவி வந்தது. அது Google 2004 ல் தனது Gmail எனும் சேவையை தொடங்கும் வரை தான் நீடித்தது.

ஆப்பிளும், மைக்ரோசாப்ட்டும் Desktop கணினிகளை பற்றி சிந்தித்திக் கொண்டிருக்கும்போது  தனிமனிதர்கள் பயன்படுத்தும் கணினிகளுக்கு Operating System என்னும் கணினியின் அடிப்படை பொருளே தேவை இல்லை (operating system தாயாரிப்பில் தான் Microsoft அதிக வருமானம் பெறுகிறது) என கூகுள் யாரும் நினைத்துகூட பார்க்காத செயலை செய்தது. பயனாளர்களின் அனைத்து சேவைகளயும் Cloud Computing எனும் ஆன்லைன் மூலமே பயன்படுத்த செய்தது.

திறந்த மூல நிரலி Andriod எனும் தொழில்நுட்பதை கையில் எடுத்து ஸ்மார்ட் போன் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி அதை இலவசம் என அறிவித்து ஆப்பிளின் ஐ-போன் வயிற்றில் புளியைக் கரைத்தது . இன்று சந்தையில் ஸ்மார்ட் போன் குறைந்த விலையில் விற்பதற்கு இதுதான் காரணம்.

கூகுள், வேறு எந்த நிறுவனமும் பயன்படுத்தாத, அவர்களுக்கு முற்றிலும் முரணான தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

தினமும் காலையில் நாம் பேப்பர் படிப்பது போல, கூகுள் தேடுபொறி 100 கோடிக்கும் மேற்பட்ட இணையதளங்களைப் படிக்கிறது. யாகூ-வும் படிக்கிறது மற்றும் Microsoft Bing-ம் படிக்கிறது. ஆனால் கூகிள் மட்டும் பேஜ் ரேங்க் எனும் தரவரிசை அடிப்படையில் index செய்யும் முறையை பயன்படுத்துகிறது. அது மட்டுமா? நாம் தேடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனி தனி index வரிசை ஏற்படுத்தி சேமிக்கிறது. பொதுவாக எல்லா தேடு பொறிகளும் இணைய பக்கத்தின் தலைப்பு மற்றும் Meta tag எனும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே பார்த்து தேடும் பணியை முடித்துக்கொள்ளும். ஆனால் கூகுள் முழுப்பக்கத்தையும் படிக்கும் திறன் கொண்டது. இந்த முறை தான் கூகுள் தேடு பொறியின் வெற்றி.

இமெயிலில் ஆதிக்கம் செலுத்திய யாஹூ, வியாபார விளம்பரங்களை தனது மெயில் பக்கங்களில் தொலைக்காட்சி விளம்பரம் போல் அனைவருக்கும் ஒரே மாதிரியான முறையில் வெளியிட்டு பயனாளர்களுக்கு ஒரு வகை சலிப்பையே  ஏற்படுத்தியது. பெரிய படங்கள், Animated Images என எரிச்சலை தந்தது. ஆனால் Gmail, Text based advertisement என செய்தது. அதுவும் Targeted Ads என்னும் முறையில் மெயில் Content ல் இருக்கும் வார்தைகளுக்கு தகுந்த விளம்பரங்களை மட்டும் வெளியிடும். உதாரணத்திற்கு ஒரு நண்பர் நமக்கு புத்தகம் சம்பந்தமான மெயில் அனுப்பினார் எனில்.. புத்தக விளம்பரங்கள் நம் பக்கத்தில் தோன்றும். இவ்வாறு கூகுள் விளம்பர நிறுவனத்திற்கும், தனது பயனாளர்களுக்கும் சிறந்த செவையை செய்கிறது. இதற்கென Google Adwords எனும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறது.

Operating System இது தான் கணிணியின் மூளை என்று சொல்லலாம். மூளை இல்லாத கணிணி என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. மனிதனுக்கு மூளையை நீக்கிவிட்டால் அவன் வாழும் தகுதியை இழப்பான். அனைவருக்கும் எதற்கு தனித்தனி மூளை ஒரே ஒரு மனித மூளையுடன் அனைவரையும் இணைத்துவிடலாம். பிறகு ஒவ்வொருவரும் தனியாக படிக்க வேண்டாம். பிரதான மூளையே நமக்கு தேவையான அறிவை வழங்கிவிடும் என ஒரு மருத்துவர் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்??

கூகுள் இதைதான் சொன்னது. Desktop Operating System என்பது தேவையற்றது அனைத்து தனி கணினிகளை பிராதான சர்வர் கணிணியுடன் இணைத்துவிடலாம். அனைத்துவிதமான கோப்புகளையும் ரிமோட் சர்வர்களில் சேமிக்கலாம். இதன் மூலம் கணிணி,மொபைல் போன், iPad போன்ற பிற கையடக்க கருவிகளிலும் கோப்புகளை கையாளலாம். வருங்காலங்களில் இன்று பயன்படுத்தப்படும் கணினி இருக்காது மாறாக கையடக்க கருவிகள் வெவ்வேறு வடிவங்களில் வலம் வரும். மேலும் அவற்றிக்கிடையே data பரிமாற்றம் செய்ய வேண்டிவரும் உதாரணமாக உங்கள் போனில் இருந்து டி.விக்கு தொடர்பு ஏற்படுத்தலாம், போனில் உள்ள பாடலை டி.வி.யில் பார்க்கலாம். உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டி உங்கள் மெயிலை படித்து  Freezer-ன் வேகத்தைக் கூட்டும் அல்லது குறைக்கும். கார்கள் GPS கருவியின் மூலம் உங்கள் தற்போதைய இடத்தை உடனுக்குடன் சர்வர் கணிணிகளுக்கு அனுப்பி சர்வரின் கட்டளைகளுக்கிணங்க நீங்கள் போக வேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லும். ஓட்டுநர் வேண்டாம். 

அவதார் படத்தில் வரும் நாவிக்கள் நெட்வொர்க் முறையில் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போல்.. அனைத்து மின்னணு கருவிகளும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும். இது Science fiction கதை அல்ல இன்னும் 5 ஆண்டுகளில் நடக்கும். அதுவும் கூகுள்தான் இதை சாத்தியப்படுத்தும்.

இப்பொழுது நாம் ஐ.ஐ.டி க்கு வருவோம். ஐ.ஐ.டி கணிணித்துறை என்ன பாடத்தை பயிற்றுவிக்கிறது!? Operating System தான் பிராதான பாடம் அதுவும் Case study  என கருப்பு வெள்ளைக் காலத்து Operating System-களை எடுத்து வைத்துக் கொண்டு Lecture ஆத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிநவீன Operating System-மே தேவையற்றது என்பது தான் நிதர்சனம். ஆனால் இந்த உயர்கல்வி நிறுவனம் Round Robin Scheduling Algorithm-மை விட்டபாடில்லை. 
Database Management Systems இங்குதான் மிகப்பெரும் அபத்தம். Codd’s  என்பவர் Relational database சிஸ்டத்திற்கான 12 கோட்பாடுகளை (0 வில் இருந்து 12 ஆக 13) வகுத்தார். இந்தக் கோட்பாடுகளை நிவர்த்தி செய்பவையே முழுமையான Database system என்றார். ஆனால் பாடத்தில் படிக்கும் எந்த ஒரு database system-மும் 4 கோட்பாடுகளை கூட நிவர்த்தி செய்வது கிடையாது. இதை வைத்து எப்படி ஒரு மென்பொருளை உருவாக்க முடியும்?? அப்படியே உருவாக்கினாலும் அதன் Stability எப்படி இருக்கும்!?

Pitfalls of file processing system என data-வைக் கோப்புகளாக சேமிப்பது சிக்கலானது மற்றும் பிழையானது என்று சொல்லி Data redundancy, Inconsistency, Difficulty in accessing data  என குறைகளை அடுக்கி இறுதியாக இந்த முறை பயன்படுத்த முடியாத பிற்போக்கானது என தீர்ப்பு சொல்வார்கள் ஐ.ஐ.டி பேராசிரியர்கள். 

ஆனால், கூகுள் இந்த முறையை தான் பயன்படுத்துகிறது. இன்னும் சொல்வதானால் கூகுளின் Table க்கு Rows and Columns கிடையாது. ஏனென்றால் கூகுள் Distributed database system பயன்படுத்துகிறது. அதாவது நமது data கூகுளின் பல்லாயிரக்கணக்காண சர்வர்களில் பிரித்து சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி கற்றுக்கொடுப்பது போல கையாண்டிருந்தால் பில்லியன் கணக்கில் பயனாளர்கள் கூகுளுக்கு இருந்திருக்க மாட்டார்கள். நம்ம IRCTC தளம் போல திணறிக் கொண்டு தான் இருந்திருப்பார்கள்.

Microprocessor என்று Intel 8086 எனும் 16-bit Processor ( 1976 இல் உருவாக்கப்பட்டது). இதை வைத்துக் கொண்டு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று நடைமுறையில் 64-bit பயன்படுத்தப்படுகிறது. சர்வர் கணிணிகளில் multicore, hot swaping என எங்கோ போய்விட்டார்கள். உயர்கல்வியாளர்கள் இன்னும் Block diagram of 8086 என படம் வரைந்து கொண்டிருக்கிறார்கள்.

Programming- இதை எப்படி சொல்ல.. எந்தக் கணினி மொழியாக இருந்தாலும் Tokens-ல் ஆரம்பித்து File I/O வில் முடித்துவிடுவார்கள். உண்மையில் இதுதான் Programming ஆ? Program எழுதுபவர்களுக்குத்தான் வெளிச்சம்!! இப்படி எதிலுமே தன்னிறைவு பெறாமல், நடைமுறை தொழில்நுட்பத்தை கற்பனை செய்துகூட பார்க்காத ஒரு கல்வி நிறுவனம் எப்படி உயர் கல்வி நிறுவனமாகும்? இந்த நிலை கணினி துறைக்கு மட்டுமன்று. மற்ற துறைகளிலும் இதே நிலைதான். 

இப்பொழுது சொல்லுங்கள் ஐ.ஐ.டி அறிவின் அடையாளமா? அறிவுத் தேடலுக்கு தீனியாகிடுமா? ஐ.ஐ.டி. பற்றி இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி என்ன அபிப்ராயம் வைத்துள்ளார் பாருங்கள். ஆனால் அங்கு பயிலும் மாணவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசுகிறார்களே! அது நியாயமா? இட ஒதுக்கீட்டினால் உயர்கல்வி  நிறுவனத்தின் தரம் குறைந்துவிடுமா? நம் பொதுப் புத்தியில் இட ஒதுக்கீடு பற்றிய கருத்தென்ன? ‘திறமை இருந்தால் படித்து சீட் வாங்கிக் கொள்’ என்று தானே பதிந்துள்ளது. திரு.கமல்ஹாசனின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

– மணவாளன்

Leave a Reply