கால் டேக்சி ட்ரைவரான பாண்டிக்கு, எஃப்.எம்.இல் பணி புரியும் ஏஞ்சலாவினுடைய குரல் ராஜ போதையைத் தருகிறது. தினம் இரவு ஒன்பதிலிருந்து பத்து வரை ஏஞ்சலாவின் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். அந்தப் போதை பாண்டியிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை.
பையா போலொரு ரூட் மூவியாகப் போகுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது முதல் பாதி. அப்படியில்லை என இடைவேளையிலேயே அழுத்தமாகச் சொல்லி விடுகின்றனர். 96 நிமிடங்களே ஓடக் கூடிய சின்ன படம்தான். ஆனாலும், திரைக்கதையோ வசனமோ கதையின் விறுவிறுப்பை, சஸ்பென்ஸைத் தக்க வைக்க உதவாதது மிகப் பெரும் குறை. ஆனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத க்ளைமேக்ஸை மட்டும் யூகிக்க முடியாதபடி வைத்துள்ளார் இயக்குநர் விஜய் ஷண்முகவேல் அய்யனார்.
படம் தொடக்கத்தில் லிவிங்ஸ்டனைப் பார்த்ததுமே ஓர் உற்சாகம் எழுகிறது. அவரையும் அப்படியே ஓரங்கட்டி விடுகின்றனர். படத்தில், ஏசி Vs டிசி என இரண்டு உயரதிகாரிகளுக்குள் போட்டி ஏற்படுகிறது. என்கவுன்ட்டர் யார் முதலில் செய்வதென? ஓர் அநாமதேய ஃபோன் செய்தான் என்ற ஓரே காரணத்திற்காக, நாயகனை என்கவுன்ட்டரில் கொல்ல வேண்டும் என்ற உயர்ந்த லட்சத்தியத்தில் தேடுறார் அதிலொரு உயரதிகாரி. ‘என்கவுன்ட்டர் பண்ணா பிரமோஷன்’ என்ற அபத்தத்தை நம்பும் உயரதிகாரி. இப்படி, படத்தில் ஒரே ஒரு பாத்திரம் கூட யாதார்த்தமாக இல்லாதது குறை.
பாண்டியாக கதிர் நடித்துள்ளார். நாயகனுக்குரிய இலக்கணங்கள் இல்லாம சாதாரணமாக உள்ளார். அதையும் மீறி நடிப்பால் கவர வேண்டிய கதிருக்கோ நெகடிவ் ஷேட் உள்ள ரோல் என்பதால், அவரால் பார்வையாளர்களைக் கவர முடியாமல் போகிறது. திரைக்கதையும் கைவிட்ட நிலையில், க்ளைமேக்ஸில் அவர் மீது நியாயமாக எழு வேண்டிய கோபமோ, அனுதாபமோ பார்வையாளர்கள் மத்தியில் எழவில்லை. ராஜ போதையைத் தர வேண்டிய ஸ்வேதா மேனனின் குரலும் எந்த மாயமும் செய்யாதது துரதிர்ஷ்டவசமானது.
படத்தின் போக்கினைக் கொண்டு எதையும் யூகிக்க முடியாதபடி, கடைசியில் அனைத்தையும் நேர்க்கோட்டில் இணைத்திருப்பது மட்டுமே படத்தின் ஒரே சிறப்பு.