போதையில் சபலத்துக்கு ஆட்படும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினன், ஒருநாள் முழுவதும் அனுபவிக்கும் மான ரோஷப் பதற்றம்தான் படத்தின் கதை. 2012 இல் வெளியான ‘ஷட்டர்’ எனும் மலையாளப் படத்துக்கு முறைப்படி உரிமை வாங்கி, ரீமேக் செய்து தமிழ்ப் படமாக வழங்கியுள்ளார் இயக்குநர் விஜய்.
இசை, பாகுபலியைத் தொடர்ந்து, சத்யராஜின் மற்றுமொரு பிரம்மாண்டப் பரிணாமமாக அவர் நடித்திருக்கும் சேகர் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். அவரின் தவிப்பும் பதற்றமும் பார்வையாளரையும் பீடிக்கிறது. அவருக்கு ஏற்படும் கோபம், அதாவது மகள் மீதான கோபமன்று, உடனிருப்போரின் சுயரூபம் தெரிவதால் ஏற்படும் கோபம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.
தளர்வான நடையையும், விரக்தி படிந்த தோற்றத்தையும் வைத்துக் கொண்டு யூகி சேது ஏகத்துக்கும் கவர்கிறார். நையாண்டி தர்பாரின் குரல் இன்னும் மாறவில்லையே தவிர்த்து, சிறந்த குணசித்திர நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார். பஞ்சதந்திரம் வேதாந்தமாக, அன்பே சிவம் உத்தமனாக, ரமணா கான்ஸ்டபிள் நாராயணனாக, இந்தப் படத்தில் இயக்குநர் சேது பாரதியாக அவர் உடல்மொழியிலும் முக பாவனையிலும் காட்டும் வித்தியாசம் பாராட்டுக்குரியது. சத்யராஜ் போல் படத்தின் குவிமையமாக இல்லாவிட்டாலும், ‘யாரோ ஒரு முகம் தெரியாத பெண்ணுக்காக இரக்கப்படும்’ இவர் தான் படத்தின் உண்மையான நாயகன்.
ஆட்டோ ட்ரைவராக சூரியாக அறிமுகமாகிவுள்ளார் ஐசரி வேலனின் பேரனான வருண். விரைவில் நாயகனாகவும் வலம் வரவுள்ளார். புதுமுகம் போலன்றி, தெரிந்த முகமாக மனதில் பதியும்படி உள்ளார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் தங்கமாக அனுமோல் நடித்துள்ளார். ஏற்கெனவே மூன்று தமிழ்ப் படங்களில் கேரள நடிகையான இவர் தோன்றியிருந்தாலும், இந்தப் படத்தின் மூலம் பெரிதும் கவனிக்கப்படுவார். குரலை உயர்த்தி பேசும்போதும், சேகரிடம் பெண்களுக்கு கல்வி அவசியமெனச் சொல்லும்பொழுதும் அசத்துகிறார்.
சத்தியராஜின் மகளாக தீக்ஷிதா நடித்துள்ளார். படத்தின் தொடக்கம் முதல் ஒன்றிரண்டு காட்சிகளிலே வரும் அந்த பெண், சேகரின் படுக்கையறை வாசலருகே வந்து நிற்கும் அந்த ஒரு கணத்தில் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெறும் வண்ணம் கைதட்டல்களை அள்ளுகிறார். உண்மையில், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ஆண்டனி பெறும் கைதட்டல்கள் அவை. ஒரு ரீ-மேக் படம் என்ற உணர்வையே கொடுக்காமல், கச்சிதமாக திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கேற்ப மாற்றியுள்ளார்.
படிப்பின் மேன்மையை, அதிலும் குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினாலும், அறிவுக்கும் படிப்புக்கும் நேரடித் தொடர்புண்டு என்ற விபரீத முடிவை இழையோட விட்டுள்ளனர். ஆனால், நாயகனின் அறிவுக்கண் திறப்பது கல்வியினால் அன்று; அனுபவப் பட்டறிவினாலே தான்! மேலும் கல்வி பொருளாதார மேன்மைக்கானது என்பதையும் பதிய முயற்சி செய்கிறது. மேற்சொன்ன இரண்டுமே உண்மைகள் தானெனினும், பெற்றோர்களும் பள்ளிகளும் இணைந்து அது மட்டுமே உண்மையென மாணவர்கள் மீது தரும் அழுத்தத்திற்கு படம் ஒத்து ஊதாமல் இருந்திருக்கலாம். அறம் சார்ந்த பொதுப் புத்தியின் மதிப்பீடுகளை தூசி தட்டி சுத்தம் செய்வதன் மூலம் இப்படம் தன் வெற்றியை உறுதி செய்து கொள்கிறது.