Search

ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 02

விரும்பிய ஒரு பொருளைப் புதிதாக கடையில் இருந்து வாங்கும் போது இயல்பாகவே நமக்கு ஒரு மன நிறைவும், மகிழ்ச்சியும் இருக்கும். அதிலும் தங்கநகை என்றால் கேட்கவே வேண்டாம். இது உலகம் முழுமைக்கும் பொருந்தும். இந்தத் தங்கத்தின் மீது மனிதன் வைத்திருக்கும் அபரிமிதமான அபிமானத்தினால் மனித சமூகம் காலம் காலமாய் பல சம்பவங்களையும், சரித்திரங்களையும் கடந்து வந்திருக்கிறது. 

இன்றும் கூட ஒரு தனி நபர் அல்லது ஒரு நாட்டின் செல்வம்/செல்வாக்கு அவர்கள் கைவசம் இருக்கும். தங்கத்தின் அளவை வைத்தே கணக்கிடப் படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்கம் சுரங்கங்களில் தாது மணலாய் வெட்டி எடுக்கப் படுகிறது. ஒரு டன் தாது மணலை அரைத்துச் சலித்தால் எட்டிலிருந்து பத்து கிராம் தங்கம் கிடைக்கும். உலக அளவில் தென்னாப்பிரிக்காவில் தான் அதிக அளவில் தங்கம் வெட்டி எடுக்கப் படுகிறது. 

இந்தத் தொழிலில் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே ஈடுபட்டிருக்கின்றன. ஒரு சில நாடுகளில் இந்தத் துறை அரசின் வசம் இருக்கிறது. உலக அளவில் தங்கத்தின் விலையை “World Gold Council” என்னும் அமைப்புத் தான் தீர்மானிக்கிறது. இது 23 நாடுகளைச் சேர்ந்த தங்கச்சுரங்க நிறுவனங்களின் கூட்டமைப்பு. இதன் தலைமையகம் இங்கிலாந்தில் இருக்கிறது. இந்தியாவிலும் இவர்களுக்கு அலுவலகம் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் தங்கச் சுரங்கத் தொழில் அரசின் வசம் இருக்கிறது. உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் நமது உற்பத்தி அளவு மிகவும் குறைவே. இதனால் நமது தேவைக்காக பெருமளவு தங்கம் இறக்குமதி செய்யப் படுகிறது. 

மத்திய அரசு நிறுவனமான “Metal and Mineral Trading Corporation” எனும் நிறுவனத்தில் பதிவு செய்து அவர்கள் அனுமதியோடுதான் தங்கத்தை இறக்குமதி செய்ய முடியும். சமீபத்தில் இத்தகைய இறக்குமதிகளை கட்டுப் படுத்தும் வகையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்திருக்கிறது. ஒரு வருடத்தில் உலகெங்கும் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் 24% இந்திய பயன்பாட்டிற்கு வருகிறது. அதில் 45% தங்கம் தென் இந்தியர்களால் வாங்கப் படுகிறது. தங்கத்தின் மீது நமக்கு இருக்கும் மோகத்தை விளக்க இந்த ஒரு குறிப்பு போதுமானதாய் இருக்கும். 

பெரும்பாலும் இந்தத் தங்கம் ஒரு கிலோ எடையுள்ள கட்டிகளாகவும், 10 அவுன்ஸ், ஒரு அவுன்ஸ் பிஸ்கெட்டுகளாகவும் இறக்குமதி செய்யப்படுகின்றன. Johnson and Matthey, Credit Suisse, the Perth Mint போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமானவை. தங்கத்தின் தரம் அதன் சுத்தத்தில்தான் இருக்கிறது. இதனை கேரட் எனும் அலகினால் குறிப்பிடுகின்றனர். 

இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம் தங்கத்தின் சுத்தத்தைக் குறிக்கும் கேரட் (karat)ம், வைரம் உள்ளிட்ட கற்களின் எடையைக் குறிக்கும் கேரட் (carat)ம் வெவ்வேறானவை. பலர் இதை குழப்பிக் கொள்வதுண்டு. ஒரு கேரட் வைரம் என்பது 200 மில்லி கிராம் ஆகும். அதே தங்கத்தில் ஒரு கேரட் என்பது 4.166%. அதாவது 24 கேரட் என்பது (24×4.166=99.99), அதாவது 99.99% தூய்மையான தங்கம். இதைக் கொண்டு நகை எதுவும் செய்ய முடியாது.எனவே சிறிய அளவில் வெள்ளி மற்றும் செம்பு கலந்து நகை செய்வார்கள். இவ்வாறு சேர்க்கப்படும் அளவைப் பொறுத்து நகையில் தூய்மையான தங்கத்தின் அளவு மாறுபடும். 

நகைக் கடை விளம்பரங்களில் 91.6 என விளம்பரம் செய்திருப்பார்கள். இது வேறொன்றுமில்லை, 22 கேரட்(22×4.166=91.652) நகைதான். இதில் 91.652 சதவீதம் தூய்மையான தங்கமும் மீதி வெள்ளி மற்றும் செம்பு இருக்கும். 18 கேரட் என்பதில் 75% மட்டும் தூய தங்கம் இருக்கும் அதாவது (18×4.166=74.988), 14 கேரட்டில் 58.32 % மட்டும் தூய தங்கம் இருக்கும் (14×4.166=58.32). 

முன்பு நகை செய்யும் போது பற்ற வைக்க ஒரு பொடி பயன்படுத்தப் பட்டது இந்தப் பொடி தங்கம்+வெள்ளி+செம்பு மூன்றும் சேர்ந்த கலவை. இந்தக் கலவையைப் பயன்படுத்திப் பற்றவைத்து ஆபரணங்கள் உருவாக்கும் போது அந்தப் பொடியில் உள்ள செம்பும் வெள்ளியும் கூடுதலாக நகையுடன் சேர்ந்து விடும். இதனால் தங்கத்தின் தரம் குறைய வாய்ப்புண்டு. இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வாக வந்ததுதான் கேட்மியம். இதைத்தான் விளம்பரங்களில் KDM என்று குறிப்பிடுகிறார்கள். 

நகையைப் பற்ற வைக்க நமக்குத் தேவையான அளவு கேட்மியத்தை பயன்படுத்தலாம். ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் KDM சேர்த்தாலும் பிரச்சினை வராது. ஏனெனில் பற்றவைக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் KDM மட்டும் தீய்ந்து போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும் நகையில் இருக்கும். ஆனால் KDM என வழக்கில் சொல்லப்படும் இந்த கேட்மியம் பயன்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. அதை பின்னர் பார்க்கலாம். 

இதுவரை தங்கம் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்தோம். இனி இந்த தங்கம் அடுத்து என்னென்ன நிலைகளைக் கடந்து கடைக்கு வருகிறது. அதன் ஊடாக நடக்கும் விவரங்களை பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

– தமிழ் அமுதன்
Leave a Reply