Shadow

ஒரு விஞ்ஞானியின் சீற்றம்

உலக விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர், பத்திரிக்கை ஆசிரியர்கள் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சகட்டு மேனிக்கு அனைவரையும் டா, டோய் என தான் உரிமையாக அழைப்பார். உப்பைக் கடலில் இருந்து எடுத்தால் தான் உலகத்தைக் காப்பாற்ற முடியும்; விழித்துக் கொள்ளுங்கள் என களப்பணியில் இருப்பவர். அவர் இந்த உலகிற்கு ஏதோ சொல்ல வர்றார் என தமிழ்ப் பேசும் நல்லுலகம் பயன்படுத்தும் கூகிள் பஸ்சின் மூலை முடுக்கெல்லாம் ஒரே பரபரப்பு. சமீபமாக வந்த ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் ஆழிப் பேரலைகள் தாக்குதலின் பொழுது தான் அவரது பேச்சைத் தீவிரமாக கவனிக்கத் தொடங்கினர் என நினைக்கிறேன். ஈரோடு விஞ்ஞானி, வால்பையனின் அண்ணன் என அறியப்பட்டவரின் அவசரம்டா என்ற வலைத்தளத்தில் உள்ள இந்தக் காணொளி மிகவும் பிரசித்தம் (பார்க்காதவர்கள்.. பார்த்து விடவும்). சும்மாதான்டா, கல்கிடா, அவசரம்டா, அவசரம்டா1, அவசரம்டா2, அவசரம்டா3, டாப் சேர் (Top Chair), கூகிள்டா என அவரின் வலைத்தள பெயர்களே அசர வைப்பவை. அமைதியாய் இருக்கும் கடல் அலைகள் தான் ஆழிப் பேரலைகளாக மாறுகின்றன. அதே போல் எரிமலையாய் காணொளியில் சீறிய ரவி பார்த்தசாரதி நேரில் அமைதியாக, பொறுமையாக ஏதோ விளக்கினார். எனக்கு சட்டென்று எதுவும் பிடிபடுவதில்லை. கிரேக்கப் புராணம், மாமல்லபுர சிற்பம் என அவர் பேசியதில் கொஞ்சம் தான் புரிந்தது.

பெளர்ணமி, அமாவாசைக் காலங்களில் சூரியன் மற்றும் நிலவின் ஒருங்கிணைந்த ஈர்ப்பு விசையால் கடல் நீர் பக்கவாட்டாக இழுக்கப் படுகிறது. அந்த ஈர்ப்பின் விசைக் குறைந்து, இழுக்கப்பட்ட தண்ணீர் விடுபட்டதும் அவை வட மற்றும் தென் துருவங்களை நோக்கி நகர்கிறது.

வட துருவத்தில் அடர்த்தியாய் படர்ந்திருக்கும் பனிக் கடலில் மோதி, மீண்டும் கடல் நீர் தென் திசை நோக்கி வேகமாக நகர்கிறது. கடல் நீர் கீழ் நோக்கி செல்லும் விசையால் அங்கு மிதந்துக் கொண்டிருக்கும் பல நூறு மைல்கள் பரப்பளவுக் கொண்ட பனிப் பாறைகள் இழுத்து விடபடுகிறது. அப்படி இழுத்து விடும் பொழுது ஏற்படும் பனிப்பாறை குலுங்கல்கள் பூமியின் மேற்பரப்பில் சம்மட்டிக் கொண்டு அடிப்பதற்கு சமானமான விளைவை ஏற்படுத்துகின்றன.


களி மண் உருண்டையான பூமியின் மேல் ஏற்படும் இந்த அழுத்ததால்.. லேசாக பூமியின் உட்பகுதியில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அவை பெரும் இயற்கைச் சீற்றங்களாக எழும். எரிமலை, நிலநடுக்கம், ஆழிப் பேரலை என அனைத்திற்கும் பூமியின் தலைப் பகுதியில் ஏற்படும் அழுத்தமே காரணம்.

இடையில் நிலப்பகுதியே இல்லாமல் நீண்ட கடற்பரப்பைக் கொண்ட ‘பசிஃபிக்’ பெருங்கடலைச் சூழ்ந்துள்ள நிலப்பகுதிகள் தான் அதிகம் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகள். உதாரணத்திற்கு இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா தீவுகள், ஜப்பான், நியூசிலாந்து, சிலி போன்ற நாடுகள். விரைவில் சிங்கப்பூரும் பெரும் இயற்கைச் சீற்றத்தைக் காண நேரிடும்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வாக உப்பை கடல் நீரில் இருந்து பிரிப்பது தான் என்று குண்டைத் தூக்கி தலையில் போடுகிறார் ரவி பார்த்தசாரதி. இது எந்தளவு சாத்தியம் என்ற கேள்விக்கு, நதி நீர் கடலிற்கு கொண்டு செல்லும் உப்பினைத் தடுத்தாலே போதும் என்கிறார். விஞ்ஞானிகள் சொல்வது போல் புவி வெப்பமயம் ஆவதால் துருவங்களில் உள்ள பனி உருகாது; மாறாக கடலில் சேரும் அதிகப்படி உப்பின் தன்மை பனிப் பாறைகளை மேலும் அடர்த்தியாக படரச் செய்கிறது. அப்படி கணம் வாய்ந்த பாறைகளின் அசைவுகளால் மேலும் விபரீதங்கள் தொடரும் என்கிறார். 

(தண்ணீரின் விசையால் எழும் அதீத கனத்தை விளக்கும் படம்)

ரவி பார்த்தசாரதி விஞ்ஞானி என்று மட்டும் தான் என தயவு செய்து நினைத்து விடாதீர். அவர் ஓர் இலக்கியவாதியும் கூட. கிரேக்கப் புராணங்களில் பெரும் புல்மைக் கொண்டவர். ‘பார்’ வைத்த பெரிய சைக்கிள் செயின் -கார்ட்டில் ATLAS என்ற பெயரும், பூமி பந்தைத் தூக்கிக் கொண்டிருக்கும் ஒரு தாடிக்கார ஆசாமியின் உருவமும் இருக்கும். அவர் கிரேக்கப் புராணப்படி வலிமை வாய்ந்த பெரிய அரக்கனாம். ATLAS என்ற அந்தப் பெயரை திருப்பிப் போட்டால் SALT என்று வரும். அதாவது உலகைச் சூழ்ந்துள்ள உப்பு அரக்கனின் குறியீடு. (புரிந்தது வரைப் பதிந்து விட்டேன் என்றே நினைக்கிறேன்.)

டிஸ்கி: குறைந்த விலையில் சூரிய ஒளி உதவிக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ரவி பார்த்தசாரதியின் திட்டதிற்கு அனைத்து பதிவர்களுமே உரிய வகையில் ஒத்துழைப்பை நல்குவர் என பபாஷா, ராம்ஜி யாஹூ மற்றும் ம.ரா. ஆகியோர் ஊக்கமளித்துள்ளனர்.

– தினேஷ் ராம்

Leave a Reply