நாங்க மூணு பேரு. எதுக்கும், யாருக்கும் பயப்பட மாட்டோம். சிம்புளா சொல்லனும்னா, பயம் இல்லாதது போலவே மெயின்டெயின் பண்ணுவோம். வேலை நிமித்தம் ஹாஸ்டல் வாழ்க்கை. ஹாஸ்டல் தான் எங்களுக்கு வீர-தளம் (இந்த ஆடுதளம், ஓடுதளம்னு சொல்வாங்களே அது போல!) ஆனா வீட்டில் நாங்களாம் பூனைதான்.
சாம்பார் சரி இல்ல, டீ சூடா இல்ல, டி.வி. தெரில இப்படி எல்லாப் பிரச்சனையும் எங்ககிட்டதான் வரும். எங்க வாய்ஸ பயன்படுத்தி பிரச்சனைய தீர்த்துவைப்போம். அப்படிதான் ஒரு சாயங்காலம் மொட்ட மாடியில் ஒரு பஞ்சாயத்து பண்ணிட்ருந்தோம்.
நாங்க வழக்கம் போல் பேசிட்டு இருந்தோம். பேசிட்டு இருக்கும் போதே எங்களுக்கு வேற பக்கமா கவனம் போச்சு. ரோடு ஓரமா சில பள்ளி மாணவர்கள் ஸ்நாக்ஸ் வாங்கிச் சாப்பிட்டு சிரிச்சிச் சிரிச்சிப் பேசிட்டுப் போனாங்க. கொஞ்சம்தூரம் போனவுடன் ஸ்கூல் பையன்கள் ஒரு இரண்டடி பின்னால நடக்க, மகா இராணிகள் முன்னால் நடக்க ஆ.. ஆகா… என்ன அழகு!!?!! இருங்க இங்க ஒரு விசயத்த சொல்ல மறந்துட்டேன். அவங்க எல்லாம் முதல்ல ஜோடி ஜோடியா நடந்தாங்க. இப்ப இரண்டு க்ரூப்பா பிரிஞ்சி பாய்ஸ்,கேர்ள்ஸ்னு பிரிஞ்சாங்க.
அப்புறம் இரண்டு மூன்று அடி இடைவேளை சில நேரத்துக்கு நீடிச்சது. அப்புறம் இடைவேளை அதிகமாகிட்டே போச்சு. அதுக்குள்ள ஒரு பெண்ணோட வீடு வந்துச்சு போல. அந்தப் பொண்ணு மட்டும் அந்தத் தெருவுல இருக்கும் அவ வீட்டுக்கு போய்ட்டா.
கொஞ்ச நேரத்தில் காக்கா பிரியாணிக்கு ஈ மொச்ச மாதிரி திரும்ப அந்தக் கும்பல் ஜோடி ஜோடியா ஆகிடுச்சு. அடடா… இது என்ன கொடுமை? இவ்வளவு நேரம் இருந்த அது(நட்பு!!) திடீர்னு காணாமப் போச்சு?
நாங்க ஸ்கூல் படிக்கும் போது இரண்டு க்ரூப்.
உடனே 20,30 வருசம் முன்னாடினு தப்பா நினைச்சிறாதீங்க.. ஒரு 8 வருசம் முன்னாடிதான். ஒரு க்ரூப் எல்லாத்துக்கும் கஷ்டப்படும்(படிப்ஸ்), நான் இஷ்டப்பட்டு வாழும்(non-படிப்ஸ்) இரண்டாவது ரகம். முதல் ரகம் எப்பவும் படிக்கும் இரண்டாவது எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்கும்(rank card ல அப்பா சைன் முதல் ப்ரின்ஸ்பால் சைன் வரை). ஆனா இந்தப் புள்ளங்க மாதிரி வில்லத்தனமாலாம் என்னைக்கும் நினைச்சதே கிடையாது.
நீங்களே நல்லா யோசிங்க. 10வது முடிச்சி 11வது போக எந்தப் பிரிவை தேர்ந்தெடுக்கனும்னு கூட 90% பிள்ளைகளுக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது கல்லூரியில் ட்ரெண்டா இருக்கும் இந்த ‘காதல்’ இப்ப ஸ்கூல்லயே வலம் வர ஆரப்பித்துவிட்டது.
அழகி படத்துல ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பழக்கம் தொடர்ந்து ஆட்டோகிராஃப், வெயில், பூ என பல படங்களில் இந்த செயலுக்கு நியாயம் கற்பிச்சிட்டாங்க. இப்ப கூட ஒரு படம் ரிலீஸ் ஆகி ஓடிட்டு இருக்கு. இத சொன்னா நடக்கிறததான் படமா எடுக்குறோம்னு கத்திய தூக்கிகிட்டு ஓடிவர்றாங்க. இப்பலாம் லவ் பண்றவங்க கேங், பண்னாதவங்க கேங்னு தான் ஸ்கூல்ல இருக்கு.
ஆண், பெண் பாகுபாடு இல்லாம கள்ளம் கபடம் இல்லாத துள்ளி விளையாடும் பருவத்தில் இப்படி விஷம் கலந்து, நாம் ருசித்த நன்மைகளை இழந்து லவ் (!?) பண்றதும், சைட் அடிப்பதும் தான் இன்பம்னு இந்த பிஞ்சி மனசுல விதைச்சுட்டாங்களேன்னு நினைச்சா எனக்கு பரிதாபமா இருக்கு.
ஆகா இதைப் பாத்துட்டு இருந்ததல என் காபி ஆறிப்போச்சே!