Search

ஔரங்கசீப்பின் உயில்

இந்தியாவை ஆண்ட கொடுங்கோலர்களில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பை அடித்துக் கொள்ள இன்றுவரை யாருமில்லை. பெற்ற தகப்பனை சிறையில் அடைத்து சகோதரர்களை கொலை செய்து ஆட்சியைப் பிடித்தவர். தீவிரமான மதவாதி, தன் நம்பிக்கைகளை மீறுகிறவர்களை ஈவிரக்கமில்லாமல் அழித்தொழித்தவர். இத்தனை மோசமான  பின்புலம் இருந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிமையாய் வாழ்ந்த மனிதர்.

இவரது வாழ்க்கை வரலாற்றினை  மெளல்வி ஹமீதுத்தீன் என்பவர் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார். அதன்  எட்டாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் எழுதிய  உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. .

1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாய் இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ் நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்ததில்லை என்பதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். எனினும் இப்போது வருந்துவதால் எந்த பயனும் இல்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். வேறு யாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

2. என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்துவைத்த 4 ரூபாயும் 2 அனாக்களும் உள்ளன. எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர் ஆன் பிரதிகளை கையால் எழுதிக் கொடுத்தேன்.தொப்பிகள் தைத்தேன். அந்த தொப்பிகளை விற்று நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்தப் பணத்தில்தான் கஃபன் (என் உடல் மூடும்) துணி வாங்கப்பட வேண்டும். இந்தப் பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம். (என் கையால் எழுதப்பட்ட) குர் ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ரூபாய்களைப் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்தப் பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

3.என்னுடைய சாமான்களான துணிமணிகள்,மைக்கூடுகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸ்மிடம் கொடுத்துவிட வேண்டும். என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4. ஓர் அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்படவேண்டும். என்னைப் புதைத்த பிறகு என்னுடைய முகத்தை திறந்து வைக்க வேண்டும்.என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம். திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன். அவனுடைய உச்ச நீதிமன்றத்திற்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

5.  எனது கஃபன் துணி தடித்த கதர் துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம். எனது சவ ஊர்வலம் செல்லும் வழியில் மலர்களைத் தூவ வேண்டாம்.என் உடல் மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது. நான் இசையை வெறுக்கிறேன்.

6. எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது.வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக் கொள்ளலாம்.

7. என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் பல மாதங்களாக என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. நான் இறந்த பிறகு என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளமும் கொடுக்கப்பட வேண்டும்.ஏனெனில் கஜான காலியாக இருக்கிறது. நிஅமத் அலி எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன். என் உடலை அவன் தான் சுத்தப்படுத்துவான். என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயில்லை.

8. என் நினைவாக எந்த கட்டடமும் எழுப்பக்கூடாது. எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்த கல்லும் வைக்கக்கூடாது. கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது. என்னைப் போன்ற பாவிக்கு நிழல்தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தகுதியில்லை.

9. எனது மகன் ஆஸம் டெல்லியில் இருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான். பீஜப்புர், கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பஷிடம் விடப்பட வேண்டும்.

10. அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன் தான் உலகிலேயே துரதிர்ஷ்டம் மிக்கவன். எந்தச் சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களைக் குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக்கூடாது.

 தொகுத்தவர்: சிம்ம வாகனி
Leave a Reply