Shadow

கடிவாள மனசு

“பதினோராம் வகுப்புக்கு போறேன் .சுப்புலாபுரத்து பள்ளிகொடத்லதான் பதினொனாப்பு இருக்கு …அதுக்கு ஐநூறு ரூவா வேணும்” ….

மிகுந்த பயத்துடனும் பணம் கிடைக்குமா என்ற ஐயத்துடனும் பணம் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனும் தன் தந்தை வேலுச்சாமியிடம் பேசினான் கோவாலு….

“ஐநூறு ரூவா வேணும்னு பொசுக்குனு கேட்டா எப்பிடி கொடுக்க…நான் என்ன பணத்த கக்கத்துல வச்சுக்கிட்டு அலஞ்சுகிட்டா இருக்கேன்”, என்றான் வேலுச்சாமி…

அவன் அப்போதைய கவலை தன்னை நம்பி இருக்கும் ஆறு உசிர்களுக்கு மூணு வேளையும் அர வயித்து கஞ்சியாவது ஊத்தணும் என்பதுதான் ….

” எப்பா நான் நானூறு மார்க்கு எடுத்திருக்கேன். வாத்தியார், மேல படிச்சா கண்டிப்பா டாக்டர் ஆயிருவேனாரு அதான்” ….

“அப்ப அந்த வாத்தியார்ட்டயே போயி கேளு ராசா ..வந்துட்டான் ..எனக்கு இருக்ற வெளத்துக்கு கட்ட வெலக்கமாரு பிஞ்சு போகும் பாத்துக்க…நான் இன்னிக்கு என்ன செய்ய …நாளைக்கு என்ன செய்யன்னு மருவிட்டு இருக்கேன், இவன் டாக்டர் ஆவபோராணம்…நீ டாக்டர் ஆவறதுக்கு முன்னால இங்க ஆறு உசிரு மாஞ்சிரும்” …..

வேலுச்சாமியின் கவலையும் கோபமும் மிக நியாமானது …சலவை தொழிலாளி அவன். செய்யும் தொழிலுக்கு சோறுதான் கூலி …பண்ணையார் மட்டும் தான் பணமும் சோறும் குடுப்பார் …அவரின் வீட்டிலும் இப்பொழுது துணி துவைக்கும் மிசின் வந்து விட்டதால் எப்போதாவதுதான் பண்ணையார் வீட்டு துணிகளை துவைப்பான்…இந்நிலையில் அவனால் எங்கனம் ஐநூறு ரூவா கொடுக்க இயலும் ..ஏதோ இலவச கல்வி, சீருடை என்பதால் பத்தாம் வகுப்பு வரை கோவாலை படிக்க அனுமத்திதான்..அதுவே அவனுக்கு சம்மதம் இல்லை …படிப்பதை விட தொழிலை கற்றுக்கொண்டால் அவனுக்கு பின் குடும்பத்தை பார்த்துகொள்ளலாம் என்று வெகு நாட்களாக தன் மனைவி சொர்ணதிடம் சொல்வான்..அவள் தான் படிக்கட்டும் என்று கோவாலை பத்தாம் வகுப்பு வரை தேற்றினாள்…

கோவாலும் புரிந்து கொண்டான்…புத்தக மூட்டைக்கு பதிலாக துணிமூட்டை சுமக்க ஆயத்தமானான்…

இந்நிலையில் வேலுச்சாமிக்கு பண்ணையார் வீட்டிலிருந்து அழைப்பு ..
தலை தெறிக்க பண்ணையார் வீட்டை அடைந்தான் …

நரசூஸ் காப்பி மனம் மூக்கை துளைத்தது…சாம்பார் வாடை வேலுச்சாமிக்கு குதூகலத்தை அளித்தது …”முத்துமாரி புள்ள சாம்பார் னா உசிர விடும் …இன்னைக்கு அக்கா சோறு குடுத்தா வீட்டுக்கு கொண்டுபோவனும் “…முத்துமாரி அவனது கடைசி குழந்தை..அவள் மீது ஒரு தனி அன்பு அவனுக்கு…

பண்ணையார் மனைவி வந்தாள்…துவைத்து தேய்த்த புத்தம் புது சேலையையே அணிவாள் …நகைகளை அவ்வபோது காலத்திர்கேற்ப புதுசு புதுசாக மாற்றுவாள் …புறத்தில் மிடுக்கானவள்..அகத்தில் கருணை உள்ளம் கொண்டவள் …

“என்ன வேலுச்சாமி நல்லா இருக்கியா ?இந்த பக்கமே காணும் ?வெளிநாடு கிளிநாடு போயட்டியோனு எண்ணுனேன்”…

“போக்கா நீ வேற …வெளிநாடு போராப்லாதான் இருக்கு ஏன் பொழப்பு” ….

“இப்பிடி அலுத்துக்குற… ஒனக்கென்ன வீடு வீடா போய் துணி வாங்கி சலவ செஞ்சா வித விதமா சோறு …ஒரு நாளைக்கு பத்து விதமான சோறு திம்பியா ?”

“ஆமாக்கா ..நம்ம ஊரு மவராசிக பத்து விதமா சமைசுட்டா அம்புட்டுதான் வானம் தரைக்கு வந்திரும் …சும்மா இருக்கா நீ வேற … பழைய கஞ்சி நெதம் கெடைச்சா கருப்பசாமி புண்ணியம்” ….

“சரி டா இன்னைக்கு எம் மகன் துணி ஒரு இருவது உருப்பிடி தாரேன் தொவச்சு குடு ..உனக்கு பத்து வக இல்லனாலும் ரெண்டு வகையாச்சும் தாரேன்” …

“சரி அது இருக்கட்டும் என்ன திடீர்னு இருபது உருப்படி அது ஒம் மகனோட” …

“அதா அவன் என்னமோ பத்தாப்பு பரிச்சியில முந்நூத்தம்பது மார்க்கு வாங்கிட்டானாம் ..ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிக்குறான்… மெட்ராசுல இருக்குற பள்ளிகொடத்ல படிச்சாதான் டாக்டர் ஆவ முடியுமாம்ல …அதான் பட்டணத்துல இருக்க என் தங்கச்சி வீட்டுல தங்கி படிக்க போறான்..திங்க கெழம பொறப்படுதான்…சரி இருக்குற சட்ட துணி மணிய தொவச்சா தாவலைன்னு ஒன்ன கூட்டியாரச் சொன்னேன் “…

“அப்புடியா படிக்கட்டும் படிக்கட்டும் “. என்று சொல்லி விட்டு துணி மணிக்காகவும் சாம்பார் ரச சோத்துகாகவும் திண்ணையில் காத்துகிடந்தான்…

பண்ணையார் மனைவி வந்தாள் சோற்றோடும் துணியோடும் …

“யக்கா சாம்பாரையும் ரசத்தையும் தனியாத்தான வச்சுருக்க ” …

“ஆமாண்டா”..

வீடு சென்ற உடன் சோற்றை முத்து மாரிக்கு குடுத்தான்…அது மாரியம்மா, செண்பகம் ,கணேசன் பொன்னம்மா, கோவாலு ,அவள் அம்மா என அனைவரையும் அழைத்து சோற்றை பகிர்ந்தது…

சொர்ணம் ,வேலுச்சாமி கொண்டாந்த துணிகளை எண்ணியவாறே அவனிடம் கேட்டாள் ,”என்ன இருவது உருப்படி இருக்கு”.

“பண்ணையார் மவன் பட்டணத்துல போய் பதினொன்னாப்பு படிச்சு பெறவு டாக்டராக போறானாம்”, என்று பெருமையுடன் சொன்னான் வெள்ளந்தியான வேலுச்சாமி.

– சுபலலிதா