
“பழத்தை ரகு சாப்பிட்டான் ” என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்தால் “Fruit Ragu ate ” என்று வரும். சரியான முறையில் மொழிபெயர்க்க தமிழ் மொழியின் வாக்கிய அமைப்பையும், ஆங்கில மொழியின் வாக்கிய அமைப்பையும் நன்கு ஆராய்ந்து மொழிபெயர்க்க வேண்டும். “பார்சிங்(Parsing) ” என்றொரு முறை உள்ளது. நாம் சிறு வயதில் ஆங்கில இலக்கணம் கற்கும் போது படித்திருப்போம். அதாவது ஒரு வாக்கியத்தை நவுன் ஃப்ரேஸ், வேர்ப் ஃப்ரேஸ் (noun phrase, verb phrase) என அதில் வரும் பெயர்ச்சொல், வினைச்சொல் பிரித்துப் படித்திருப்போம். ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்- “சீதா பாட்டு பாடினாள்”. இதை பார்சிங்கில் எப்படி கையாளுகிறோம் என பார்ப்போம்.
முதிலில் மேற்கூறியுள்ள வாக்கியத்தை இப்படி பிரிக்க வேண்டும். S=NP+VP (சீதா + பாட்டு பாடினாள்). NP என்றால் நவுன் ஃபிரேஸ். VP என்றால் வேர்ப் ஃபிரேஸ். இப்பொழுது NPயை NP=N(சீதா) என பிரிக்க வேண்டும் (N என்றால் நவுன்(பெயர்ச்சொல்), V என்றால் வேர்ப்(வினைச்சொல்)). அடுத்து VPயை VP= N+V (பாட்டு+பாடினாள்) என பிரிக்க வேண்டும். இப்படி பல்வேறு வாக்கியங்களை பிரித்து ஆராய்ந்தோமேயானால் ஒரு மொழியின் வாக்கிய அமைப்பு விளங்கி விடும். மொழிபெயர்ப்பு செய்யும் போது இரண்டு மொழிகளின் வாக்கிய அமைப்பை பற்றி அறிவது மொழிபெயர்ப்பை அர்த்தமுள்ளது ஆக்கும். ஆனால் அப்படி செய்வது மிகக்கடினம். ஒவ்வொரு மொழியும் மற்ற மொழியிலிருந்து வாக்கிய அமைப்பில் மாறுபட்டு உள்ளது. ஆகவே தான் இத்துறையில் ஆய்வு செய்வதற்கான விஷயங்கள் நிறைய உள்ளன. தமிழை எடுத்துக் கொண்டோமேயானால், ”Partially free word order language’ என்று சொல்வார்கள். ஒரு எடுத்துக்காட்டுடன் இதைப் பார்ப்போம்.
“ரகு பழத்தை சாப்பிட்டான்” என்றாலும் “பழத்தை ரகு சாப்பிட்டான்” என்றாலும் ஒரே அர்த்தத்தை தான் தருகிறது. அதாவது பெயர்ச்சொல்லின் இடம் வாக்கியத்தில் எங்கு வேண்டுமானாலும் தமிழில் வரலாம் இம்மாதிரியான சிக்கல்கள் இருப்பதாலும் தமிழை மெஷின் ட்ரான்ஸ்லேஷன் செய்வது கடினமாக உள்ளது. இது போன்ற மற்ற தகவல்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
– சுபலலிதா