Search

கண்ணியமான ஆண்களுக்காக

பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வது இந்த இந்திய திருநாட்டில் மாதவம் செய்து பிறந்த மங்கையருக்கு புதிதல்ல. பாலியல் தொல்லைகள் வார்த்தைகள் முதல் வல்லுறவு வரை எத்தகைய அழுத்தத்திலும் இருக்கலாம். ஒவ்வொரு முறை பாலியல் வன்முறை சம்பவம் நடைபெறும்போதும் எல்லா சம்பவங்களும் ஒரே விதமான முக்கியத்துவம் பெறுவதில்லை. உதாரணத்துக்கு சமீபத்தில் டெல்லியில் நடந்த சம்பவத்தின் எதிர்ப்பாக நடைபெறும் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் ஆதிவாசி பெண்களை காவல் துறை கூட்டம் கூட்டமாக வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் மற்றும் குஜராத்தில் தாயையும் மகளையும் ஒரு கிராமமே வல்லுறவுக்குட்படுத்தி கொன்ற சம்பவம் போன்றன எவ்வித கவனமும் பெறவில்லை. ஏன் என்பது மிகப்பெரிய கேள்வி. இத்தகைய சம்பவங்களும் முக்கியத்துவம் பெற வேண்டும், அவர்களுக்கு கிடைக்கும் உதவியும் நியாயமும் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

ஆனால் எத்தகைய பாலியல் வன்முறையோ ஈவ் டீசிங்கொ நடைபெற்றால் பெண்கள் போட்டிருந்த உடை, அவர்கள் வெளியில் நடமாடும் நேரம், செல்லும் இடங்கள், யாருடன் செல்கிறார்கள் போன்றவை குறித்து விமர்சனம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. உடை என்று வரும்போது ‘நமது கலாச்சாரம்’ என்று கூறப்படும் விஷயத்திலிருந்து மனிதகுலமே அதிக தூரம் கடந்து வந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அவர்கள் அதிகாரத்திலிருந்துகொண்டும் இல்லாமலும் வலியுறுத்தும் கருத்துக்கள் பாலியல் வன்முறையை விட ஆபத்தானதாக தோன்றுகிறது. ஏனெனில் இம்மாதிரியான கருத்து கொண்டவர்களே வாய்ப்பு எதிர்பார்த்தோ, இன்னும் கிடைக்காமலோ, காத்திருப்பவர்கள். எது பாதுகாப்பான உடை? கவர்ச்சிப்பொருளாக பெண்ணை சித்தரிக்கும் உடைகள் போட்டிருந்தவர்கள் தான் வல்லுறவுக்கு ஆட்படுகிரார்களா? பர்தா போட்டிருக்கும் பெண்கள் வல்லுறவை சந்திப்பதில்லையா? என்னுடைய அப்பா வின் அம்மா (பாட்டி) பிறந்தது முதல் சாகும் வரை (92 வயது) ஜாக்கட் என்று நாகரீக நல்லுலகம் கூறும் பிளவுசை அணிந்ததே கிடையாது. அவர் காலகட்டத்தில் யாருமே அணிந்ததில்லை. அவர்கள் அனைவரும் மங்கை, மடந்தை உட்பட பெண்ணின் எல்லா பருவங்களையும் கடந்து தான் வந்திருக்க வேண்டும். அவர்களெல்லாம் வல்லுறவுகளை நம்மளவுக்கு சந்தித்ததாக தகவலில்லை.

இந்தியாவில் ஐந்துக்கு மூன்று குழந்தைகள் பாலியல் தொல்லைகளை சந்திக்கிறார்கள். (ஆண் குழந்தைகள் உட்பட) இது நமது கலாச்சாரத்தில் எந்த பிரிவில் சேருகிறது என்று தெரியவில்லை. ஆனால் இளம்பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திக்கும்போது கலாச்சார கேள்விகள் மற்றும் அறிவுரைகள் (அக்கா தங்கச்சிக்கு சொல்வது போலவாம்) வந்து குவிகின்றன. 72% பாலியல் வன்முறைகள் தெரிந்தவர்களாலே செய்யப்படுகிறது என்று ஐநா வின் கணக்கெடுப்பு கூறுகிறது. எண் வருஷா வருஷம் மாறினாலும் அதென்னவோ எழுபதுக்கு மேலே தான் சுற்றுகிறது. குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 4%க்கும் குறைவானவர்களுக்கே பாதிக்கப்பட்டவர் என்ன ஆடை அணிந்திருந்தார் என்பது நினைவில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 90%க்கும் மேற்ப்பட்டவர்கள் உடலை வெளிப்படுத்தாத ஆடைகளையே அணிந்திருந்தார்கள்.

இது கவர்ச்சி, இது கவர்ச்சி இல்லை என்று எதை வைத்து வரையறை செய்வது? ஒருத்தருக்கு ஜீன்ஸ் அணிவது கவர்ச்சி. அவன் புடவை கட்டு அப்படின்னு சொல்லுவான். கட்டினா இடுப்பு தெரியுதுன்னு இன்னொருத்தன் சொல்லுவான். சரி, சுடிதார் போடலாமா? போடலான்னு வெச்சுக்குவோம், அதுக்கு துப்பட்டாவை எப்படி போடணும்னு அஞ்சு பேருக்கு ஆறு கருத்து இருக்கும். வெளியே செல்லும் ஒரு பெண் எத்தனை பேரின் விருப்பத்துக்கு தக்கவாறு உடை அணிவது? அவ்வாறு அணிந்த பெண்களை யாரும் சீண்டுவதில்லையா? உடை தான் காரணமென்றால் மேலாடை அணியாத ஆதிவாசி கூட்டங்களில் நம்மளவுக்கு வன்புணர்வு நடப்பதில்லையே? அவங்க நம்மளவுக்கு நாகரீக வளர்ச்சி அடையாததாலையா?

அப்புறம், பத்து மணிக்கு ஏன் வெளிய வந்தா? வீட்டுல இருக்க வேண்டியது தானே? குடும்ப வருமானத்துக்கு தூக்கம் துறந்து ஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்கள் ராத்திரி ரெண்டு மணிக்கு தான் வர முடியும். ஆனா, இவ சினிமாவுக்குல்ல போனா? ஒரு பெண் எங்கே செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்று வரையறை செய்பவர்கள் அதெல்லாம் செஞ்சா இது நடக்கதுன்னு உத்தரவாதம் தர முடியுமா?

யாரும் இன்னொருவரை தூண்டுவதற்காக விட்டேறித்தனமாக வெளியே வருவதில்லை. அவரவர் சொந்த வேலையா போறாங்க, அவரவருக்கு விருப்பமான உடை போடுறாங்க. சரி, கவர்ச்சி உடை அணிந்த அந்த பத்து சதவீத பெண்களுக்கு வருவோம். அவங்களுக்கு சாதாரண உடையா இருந்தது பாக்குற இவங்களுக்கு கவர்ச்சியா தெரிஞ்சுருக்கு. மேற்கத்திய உடைகள் சிலவும் பேஷன் ஷோக்களில் அணியப்படும் உடைகளும் பெண்களை காட்சிப்பொருளாக, நுகர்வுப்போருளாக சித்திரிக்கின்றன. அதை இவர்கள் விரும்பி அணிந்து தன்னை ஒரு நுகர்வு பொருளாக காட்சிப்படுத்துகிறார்கள் என்பதும் ஒரு வித அடிமைத்தனமே. சிகப்பழகு கிரீம்கள் நிற வெறியை உள்ளூர கொண்டிருப்பது போல. இது தனி விவாதப்பொருள். காட்சிப்பொருளாக காட்டிக் கொள்கிறாள் என்பது அதை கவர்வதற்கான உரிமை அல்ல.

ஒரு வியாபார பொருளை கூட அழகாக அலங்கரித்து கவர்ச்சியாக காட்சிப்படுத்தி இருந்தால் கடையை உடைத்து அதை எடுக்க துணியாத ஒருவன் பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டுவிட்டு அதற்கு காரணமாக நீ கவர்ச்சியாக இருந்தாய் என்று காரணம் சொல்லுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? அவ்வாறு கடையை உடைப்பவனை திருடன் என்று முத்திரை குத்தும் நம் சமுதாயம், பாலியல் வன்முறையில் ஈடுபட்டவனை “அவன் என்ன செய்வான் பாவம், அவன் தூண்டப்பட்டுவிட்டான்” என்று பச்சாதாபப்படுவது தன் சக இனத்துக்கு செய்யும் எவ்வளவு பெரிய துரோகம்?

திருடர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு தான் முக்கியமே தவிர இடம் பொருள் ஏவல் அல்ல. திருட்டு போன அப்புறம் சில பேருக்கு பூட்டு சின்னதா தோணலாம். சிலர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல ஏன் வீடு பார்த்தே அப்படின்னு கேக்கலாம். சிலபேர் ஏன் இந்த ஏரியாவ பத்தி தெரிஞ்சும் வீடு பாத்தே? அப்படின்னும் கேக்கலாம். அதே போல தான் இது. நடந்த அப்புறம் என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். நம்ம அமைச்சர் ‘அவங்க கிட்ட சரணடைந்திருந்தா அந்த டெல்லி மாணவி தப்பிச்சி இருக்க வாய்ப்பு இருக்குன்னு’ சொன்ன மாதிரி.

இங்கே இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை என்னவென்றால் சமூக அக்கறை உள்ள பல ஆண்களுக்கும் இத்தகைய கருத்து ஆழ்மனதில் கவனமாக எற்றப்பட்டிருப்பதே. அவர்கள் யாரும் பாலியல் வன்முறையில் நேரடியாக பார்த்தவர்கள் அல்ல. ஈடுபட்டவர்களும் அல்ல. திரைப்படம் பார்த்தும் நண்பர்கள் செய்திகள் மூலமாயும் தெரிந்துகொள்வதே. அவர்கள் அவ்வாறு சிந்திப்பதன் காரணமாக குற்றத்தில் பாதிக்கப்பட்டவருக்கும் பங்கு இருக்கிறது என்னும் கருத்து உறுதிப்படுத்தப்படுகிறது. அதன் மூலமாக பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த முடிகிறது. வெளியில் சொன்னால் நம் மீது குற்றம் என்று சொன்னால் என்ன செய்வது? எது சரி எது தவறு என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறதே? அதுக்கு மேல இந்த கருமம் புடிச்ச கற்பு வேற. இதெல்லாம் சேர்ந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை சொல்லலாமா வேண்டாமா என்று ஒருவரை யோசிக்க வைப்பதே இதன் முதல் வெற்றி. இது வன்முறையில் ஈடுபட்டவனுக்கு தான் செய்ததிலே தனக்கு மட்டும் பொறுப்பில்லை அவளுக்கும் பங்கிருக்கிறது என்ற தைரியத்தை தருகிறது. இது மேலும் ஒரு பெண் அகப்படும்போது யோசிக்காமல் மீண்டும் செய்ய தூண்டுகிறது. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர் மீது எத்தகைய குற்றத்தையும் சுமத்தலாம். கடைசிக்கு அவ போட்ட்ருந்த கருப்பு கலர் சட்டை புடிக்கலை அதனால கழட்டி எரின்ஜென்னும் சொல்லலாம். அதையும் நாலு பேர் அறிவியல் ரீதியாக ஆதரிப்பார்கள்.

இங்கே எல்லா குற்றங்களையும் போலல்லாமல் பாதிக்கப்பட்டவருக்கு தைரியமாக வெளியே சொல்லி நியாயம் கேட்கும் தைரியத்துக்கு பதிலாக வெளியே சொல்ல பயம் ஏற்படுகிறது. செய்தவருக்கு தன குற்றம் குறித்த பயம் வருவதற்கு பதிலாக அவளுக்கும் இதிலே பங்கிருக்கு என்கிற தைரியம் வருகிறது. இந்த நிலை குற்றங்களை வெளிக்கொண்டுவருவதை குறைக்குமே தவிர குற்றங்களை குறைக்காது.

சரி, இதற்கு ஒரு தனி மனிதன் என்ன செய்ய முடியும்? தன் எண்ணங்களை பரிசீலிப்பதிலிருந்து தொடங்குகிறது. எங்கு போனாலும் அடுத்தவர் வரையறுக்கும் உடையுடன் செல்வது எவ்வளவு அசவுகரியமாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். வீட்டிலே லுங்கி கட்டி இருக்கிறீர்கள். எதிரில் இருக்கும் மளிகை கடைக்கு பேன்ட் மாத்திட்டு போக முடியுமா? நம்ம மாத்திட்டு போனாலும் லுங்கியோட வரவங்களை குற்றம் சொல்ல முடியுமா? அதே கண்ணோட்டத்தை எதிர் பாலினத்தவருக்கும் விரிவு படுத்தினால் நல்லது.

பாலியல் சீண்டல்களை பார்க்க நேர்ந்தால், அது எவ்வளவு சிறியதாக அதை எதிர்க்க குரல் கொடுத்தால் போதும். பலர் எடுத்த உடனே ரேப் பண்ணுறதில்லை. சீண்டல்களில் ஆரம்பித்து கிடைக்கும் வாய்ப்புக்கேற்ப முன்னேறுகிறார்கள். பெரும்பாலான ஆண்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் ஈவ் டீசிங்கை பார்த்திருப்பார்கள். எத்தனை பேர் அதற்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்கள்? பெரும்பாலானோர் செய்வதில்லை. நமக்கென்ன? என்று இருந்துவிடுவது வசதியாக இருக்கிறது. ஆனால் அந்நிலையில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் சிறு உதவி கூட பெரும் மன தைரியத்தை கொடுக்கும். அதிலும் இதை செய்வது ஒரு ஆணாக இருக்கும் நிலையில் ஒரு ஆணின் குரல் அவ்விடத்தில் குற்றவாளியிடம் தன் குற்றம் குறித்த பயத்தை உருவாக்கும். ஏனென்றால் குரல் கொடுப்பவன் தன் பாலினத்தை சேர்ந்தவன். அவனுக்கு ஏற்படாதது தனக்கு ஏற்படுகிறது (அல்லது அவனால் அடக்க முடிவது – தன்னால அடக்க முடியாதது) என்று எவ்விதத்தில் விளக்க முடியும்?

கெட்டவர்களால் நடக்கும் கெட்ட விஷயங்கள் வாய் மூடி இருக்கும் நல்லவர்களால் அதிகரிக்கிறது. இப்போதைய முக்கிய தேவை குற்றவாளிக்கு குற்றம் செய்ய ஏற்படும் பயமே. அனைவரும் சேர்ந்து அதை ஏற்படுத்துவோம்.

இப்பதிவு ‘கண்ணியமான ஆண்களுக்காக’ என்று எழுதப்பட்டது. ஏனென்றால் வன்முறையில் இறங்க வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் இதை படித்தாலும் அதை செய்ய இன்னும் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பார்கள் (திறமை இதிலே எல்லாம் நன்றாக வேலை செய்யும்). இங்கே நாங்கள் நாடுவதெல்லாம் கண்ணியமான ஆண்களின் மனதில் எழும் ஆதரவுக் குரல் வெளியில் வந்து ஒலிக்க வேண்டும் என்பதே.

– பாரதி
Leave a Reply