Shadow

கதகளி விமர்சனம்

Kathakali Vimarsanam

கடலூர் மீனவர்களின் தலைவன் தம்பாவைக் கொன்ற பழி, அமுதவேல் மீது வந்து சேருகிறது. அந்தப் பழியால் அமுதவேலின் குடும்பத்திற்கு என்ன நேர்கிறதென்றும், அதிலிருந்து மீள அமுதவேல் எப்படி கதகளி ஆடுகிறான் என்பதும் தான் படத்தின் கதை.

‘கதகளி ஆடுதல்’ – சக்தியையோ வலிமையையோ நிரூபித்தல் என்று தலைப்பினை பொருள் கொள்ளலாம்.

வழக்கமான நாயகன், நாயகி, வில்லன் தான் எனினும் பாண்டிராஜின் திரைக்கதையில் படம் சுவாரசியம் பெறுகிறது. குறிப்பாக, இன்ஸ்பெக்டர் சரவண வடிவேலாக நடித்திருக்கும் ஸ்ரீஜித் ரவியின் ஆர்ப்பாட்டமற்ற குயக்தி அதிரச் செய்கிறது. அதிகாரம் தவறான நபரின் கையில் கிடைத்தால் என்னாகுமென அழுத்தமாகப் பதிந்துள்ளார் பாண்டிராஜ். பசங்க – 2 ஏற்படுத்திய தாக்கம் மறையும் முன், முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையில் கையெடுத்து அற்புதமான த்ரில்லரைக் கொடுத்துள்ளார். ஹிப்-ஹாப் தமிழாவின் பின்னணி இசை அதற்கு உதவுகிறது.

அமுதவேலாக விஷால். சண்டைக் கோழியில் இருந்தே அவர் ஏற்கும் கதாபாத்திரம் தான். படத்தின் கதை தான் விஷாலைக் காப்பாற்றுகிறது. பிரச்சனையில் சிக்கி வண்டியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் குடும்பம் என்னாகுமோ என்ற கவலை நம்மை பதற்றம் கொள்ளச் செய்கிறது. விஷாலின் அண்ணனாக நடித்திருக்கும் மைம் கோபி, அப்பதற்றத்தைத் தக்க வைக்க உதவுகிறார். தம்பாவாக நடித்திருக்கும் மதுசூதன் ராவின் மிரட்டலான உடல் மொழியை விட அவருக்கு டப்பிங் கொடுத்திருக்கும் சமுத்திரக்கனியின் குரல், தம்பாவை அதி கம்பீரமாகக் காட்டுகிறது.

மீனு குட்டியாக கேத்ரின் தெரசா. விறுவிறுப்பான படத்திற்குத் தடை செய்யும் விதமாகப் படத்தின் தொடக்கத்திலேயே காதல் காட்சிகள் உள்ளன. விஷாலின் நண்பர் தமிழ்ச் செல்வமாக நடித்திருக்கும் நபர் ஈர்க்கிறார்.

படத்தின் ஆணி வேர் தொழிற்போட்டி. இதில் நகைமுரண் என்னவெனில், தம்பா தனக்குக் கீழ் வேலை செய்தவன் முதலாளி ஆகக் கூடாதென நினைக்கிறார் என்றால், இன்ஸ்பெக்டர் சரவண வடிவேலோ தம்பாவைத் தொழிற்போட்டியாக நினைக்கிறார். யூகிக்கக் கூடிய படத்தின் முடிவை, யூகிக்க முடியாத அளவுக்குக் கொண்டு போகிறார் பாண்டிராஜ்.