Search

கரையேறிய ஓடம் – ராடான் குறும்பட விழா

Radaan Short Film Festival

ராடான் நிறுவனம் நடத்திய சர்வதேச குறும்பட விழாவின் முதற்பதிப்பின் இறுதிச் சுற்று இன்று மதியம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 உலக அளவில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்ட ‘ஓடம்’ படம், சிறு குழந்தைகள்  தங்கள் பெற்றோரை  விட்டுப் பிரிந்து அகதிகளாகச் செல்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் முதற்பரிசை வென்றது. வாய்ப்புள்ளவர்கள் தவறாது காண வேண்டிய படம். உங்கள் மனதை உலுக்கிவிடும்.  அஞ்சலி இயக்கிய திகில் கதையைக் கொண்ட படமான ‘நிழல்’ இரண்டாம் பரிசையும் பெற்றது.

 இவற்றிற்குப் பரிசளித்துப் பேசிய ஆர்யா, “குறும்படம் எடுப்பது வாய்ப்புத் தேடும் உதவி இயக்குநர்களுக்கு அவசியமான ஒன்று. அதைவிட்டுவிட்டு ஒரு மூனு மணி நேரம் கொடுங்க. முழுக் கதையையும் சொல்கிறேன் என்று யாராவது கேட்டால் எரிச்சலை உண்டாக்கும்.  பத்தாயிரம் சம்பள வேலைக்கே பதினைஞ்சு சர்டிஃபிகேட்டுகள் தேவைப்படுன்றன. அப்படி இருக்கும்போது கோடிக்கணக்கில் செலவாகும் ஒரு படத்தை இயக்குவதற்கு  குறும்படம்தான்  புதியவர்களுக்கான சர்டிபிகேட்” என்றார்.

 அதன் பின், இந்திய அளவிலான குறும்படப் போட்டிகள் துவங்கின. இதன்  இறுதிச் சுற்றுக்கு, ஒரு தெலுங்கு படத்துடன்  ஐந்து  தமிழ்ப் படங்களும் தேர்வாகியிருந்தன. அவை திரையிடப்பட்டு நடுவர்களான கே.பாக்யராஜ், சீனு ராமசாமி, ரோபோ சங்கர், கணேஷ் வெங்கட்ராமன், லிசி உள்ளிட்ட பிரபலங்களால் முதல் மூன்று இடங்களுக்கான படங்கள் தேர்வாயின.

 ஜி.கே. இயக்கிய ‘அசரீரி’ முதல் இடமும், விவேக் – மனோ இயக்கிய ‘தடை’ மற்றும் அஞ்சலி இயக்கிய ‘இறுதி வரை’ ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன. “கலந்து கொண்ட படங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தன” என்று பாராட்டினார் இயக்குநர் பாலாஜி மோகன்.

 “தமிழ்த் திரையுலகில் குறும்பட இயக்குநர்கள்தான் இன்று அதிகளவில் புதிய இயக்குநர்களாக பவனி வருகின்றனர். அவர்களது படங்களில் இசையமைத்து தான் நானும் தமிழ்த் திரையுலகில் இப்போது சிறப்பானதொரு இடத்தைப் பிடித்திருக்கிறேன். ஆகவே குறும்படம் சம்பந்தமாக எந்த உதவிகள்  வேண்டுமானாலும் எப்போதும் நான் செய்யக் காத்திருக்கிறேன” என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

 நன்றியுரை நிகழ்த்திய நடிகை ராதிகாவும், நடிகர் சரத்குமாரும் ஆர்யா பேச்சினை வழி மொழிந்தனர். இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெறும் முன்னரே போட்டியில் கலந்து கொண்ட தெலுங்கு குறும்படத்தை இயக்கிய இயக்குநருக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 “இந்த விழாவை நடத்தியது ரொம்ப மகிழ்ச்சியான பயணமாக இருந்தது. இது போன்ற போட்டிகள் வருடா வருடம் ராடான் நிறுவனம் சார்பில் தொடர்ந்து நிகழ்த்துப்படும்” என்றார் ரேயான்.