இந்திரன் கர்ணனிடம் தானமாக வாங்கிய அந்தக் கவசம், அதற்குப் பிறகு என்னவாயிற்று என்பதுதான் நாவலின் கரு.
மிக அட்டகாசமாக ஜெர்மனியிலிருந்து நாவல் தொடங்குகிறது. கவசம் ஏன் ஜெர்மனியர்களுக்கு தேவைப்படுகிறது என்ற காரணத்துடன் சூடு பிடிக்கிறது நாவல். ஆனால் இந்த ஆரம்பச் சூடு அதன்பின் அடியோடு போய், பக்கத்திற்குப் பக்கம் பிரமிப்பெனப் பயணிக்கிறது நாவல்.
நாவலின் போக்கு பிடிபட கொஞ்சமாவது ‘பொன்னியின் செல்வன்’ கதைமாந்தர்களும், மகாபாரத கதாபாத்திரங்களும் தெரிந்திருந்தால் நல்லது. அப்படியில்லைனாலும் பாதகமில்லை. ‘நான் இன்னார். இன்னாரின்மீது இன்னக் காரணத்திற்காக 1000 வருடங்களாகக் கோபமாக இருக்கேன்’ என வாக்குமூலம் கொடுத்துக் கொண்டே உள்ளார்கள்.
ஜெர்மனியருக்கு ஏன் கவசம் தேவைப்படுகிறது எனத் தெளிவாகத் தெரிகிறது. துரியோதனனுக்கும் சகுனிக்கும் ஏன் கர்ணனின் கவசம் தேவைப்படுகிறதெனத் தெரியவில்லை. வஞ்சகமாக தானம் கோரிப் பெறவந்த இந்திரனுக்கே கவசத்தைத் தந்த கர்ணன் துரியோதனனுக்குத் தந்திருக்க மாட்டாரா? அதை ஏன் காலம் கடந்து கையகப்படுத்த நினைக்கின்றனர்?
இதில் துரியோதனுக்கு சந்தேகம் வேறு வந்துவிடுகிறது. ஏன் கர்ணனின் கவசத்தை குந்தி பாதுகாக்கிறார் என்று? குந்திக்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம் என்று துரியோதனனுக்குப் புரியவில்லை. ஏனென்றால் கர்ணனின் பிறப்பு ரகசியம் வெளிப்படும் முன்பே போரில் இவர்கள் இறந்துவிடுகிறார்கள். இதுவரை சரி. ஆனால் துரியோதனின் கூட்டாளியாக, ஆதித்ய கரிகாலனைக் கொன்ற ரவிதாசன் உள்ளார். அவர் சமகாலத்து ஆள். இந்த நாவலில் எந்த அதிசயமும் புரியாமல் கொஞ்சம் தனித்தன்மையோடு இருக்கும் ஒரே ஆள் இவர் மட்டுந்தான். ஆனால் அவர் துரியோதனனிடம், “இதற்கான விடை வைகுண்டத்தில் கிடைக்கலாம்” என்கிறார். ஙே!!
உதவுகிறேன் என ரவிதாசனிடம் கிருஷ்ணர் சொல்லுவார். “ஒற்றை ஆடையோட நாடு கடத்தப்படறது என்னன்னு உங்களுக்குத் தெரியாது” என கண்களில் அனல் பறக்க, கிருஷ்ணரிடம் பழிவாங்கியே தீருவேன் எனச் சூளுரைப்பார் ரவிதாசன். சூட்டோடு சூடாக, ரவிதாசனுடன் நந்தினியையும் நூலாசிரியர் சிவராமன் தன் நாவலில் களமிறக்கியிருக்கலாம் என்ற வாசக நப்பாசை எட்டிப் பார்க்கிறது.
சகுனி, கிருஷ்ணர்லாம் இருந்தும் கதையில் சுவாரசியமான முடிச்சுகளே இல்லை. ஆதிச்சநல்லூரில் கிருஷ்ணர் ருத்ரனிடம், “தமிழேன்டா!” என ஏழாம் அறிவு சூர்யா கணக்காக உணர்ச்சி வசப்படுகிறார். என்னடா இது கிருஷ்ணருக்கு தமிழ்மீது இவ்வளவு அக்கறை என அதிசயிக்க வைத்துவிடுகிறார். சரி தமிழுக்கும், கருநீல கண்ணனுக்கும் ஏதாவது தொடர்பை பின்னாடி புனைந்திருப்பார் என நினைத்த எனக்கு ஏமாற்றமே! ஆனால் அதிர்ச்சியில்லை. சமகால அரசியலும் சினிமாவும் என்னை ஓரளவுக்கு இந்த ஸ்டன்ட்களுக்கு பழக்கப்படுத்தியிருந்தன.
ஜடாயு, விதுரர், எரிகல் மனிதன், மணல் மனிதன், கிராபீன் மனிதன், அசோகர் நியமித்த ரகசிய குழு, குந்தவை என நாவல் முடியும்வரை, ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்ற ஆர்வத்தையும் பிரமிப்பையும் கதாபாத்திரங்கள் தக்க வைக்க உதவுகின்றனர். விஜயலாயனின் வாளுக்கு வேலை வந்துவிட்டது என அடிக்கடி, அதை காட்டிப் பேசிக் கொள்கிறார்கள். ‘புகையால் ஆயுதம் செய்வது’, ‘விமானிகா சாஸ்திர’ நூல் என்ற டெக்னிக்கல் பதங்களும் பீடிகை போட மட்டுமே பயன்படுகின்றன.
கதைக்கு தேவையெனின் இன்னும் பல பாத்திரங்களைக் கூடக் களமிறக்கலாம். ஆனால் அந்த சவாலை ஏற்று, தெளிவாக கதாபாத்திரங்களை கையாள வேண்டியது மிக அவசியம். அசோகர் நியமித்த ரகசிய குழுவின் வாரிசுகள் மொத்தம் ஒன்பது பேர். தார் பாலைவனத்தில், ஜெர்மனியனையும் சீனனையும் “பொக்கிஷத்தைத் திருட வந்தீங்களா?” என இந்த ஒன்பது பேரும் அடி பின்னுகிறார்கள். ஆனால் க்ளைமேக்சில் நண்பர்களென கபாடபுரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்கே அந்த ஒன்பது பேருக்கும், பின்னந்தலையில் அடிபட்டு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் கூட ஏற்படவில்லை.
கதையின் போக்கிலேயே சில குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு குழு கவசத்தைத் திருட நினைக்கின்றனர். ஒரு குழு காப்பாற்ற நினைக்கின்றனர். நீங்கள் ஏதோ ஒன்றைக் காப்பாற்ற நினைத்தால் என்ன செய்வீர்கள்? ஒன்று திருட நினைப்பவர்களைத் தடுத்து நிறுத்தணும் அல்லது காப்பாற்ற வேண்டிய பொருளின் இடத்தை மாற்றணும். ஆனால் இக்கதையில் காப்பாற்ற நினைப்பவர்களே பரபரப்பாக பொக்கிஷத்தை எதிரிகளுடன் சேர்ந்து தேடுகிறார்கள். இப்படித் தேடுபவர்கள் தான் பாரத போர் முடிந்ததிலிருந்து பொக்கிஷத்தைக் காப்பாற்றுபவர்களாம். ஒரு பொருள் எங்கிருக்கு என்று தெரியாமலேயே அதைக் காப்பாற்றிவரும் விசித்திர ரகசிய குழுவை வேறெங்கேணும் கேள்விபட்டிருக்கிறீர்களா? எதிரிகளும் வேலை மிச்சமென காப்பாற்ற நினைக்கும் குழுவினைப் பின் தொடர்கின்றனர். இந்த லட்சணத்திற்கு, காப்பாற்றும் குழுவில் உள்ளவர்கள் ‘ஹாலிவுட்’ படம்லாம் பார்த்து அப்டேட்டாக உள்ளனர்.
அசுவாரசியமும் அலைகழிப்பும் நாவலை லயிக்க முடியாமல் செய்கிறது. ஆனால் 241 பக்கங்கள் படித்ததற்கு இரண்டு விஷயங்கள் ஆறுதல். ஒன்று சிற்ப ரகசியம் பற்றிய கற்பனையான எளிய விளக்கம். மற்றொன்று குலோத்துங்க சோழன் ஏன் கலிங்கத்தை எரித்தான் என்ற புதிருக்கான யூகம்.
– தினேஷ் ராம்