

அறிமுக இசையமைப்பாளர் அரோரா புல்லாங்குழல் வாசித்து விழாவினைத் தொடங்கினார். அவர் 2000 பாடல்களுக்கு மேல் FLUTIST ஆகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு இவரை இசையமைப்பாளராகப் பரிந்துரைத்தது புஷ்பா கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
“எனக்கு இவன் நவீன். சினிமாக்காக வச்சுக்கிட்ட பெயர்தான் அரோரா. எனக்கு அவனை எப்ப தெரியும்னா.. பிறந்ததில் இருந்தே தெரியும். நானும் இவனோட சித்தப்பா வி.எஸ்.குமாரும் 35 வருட நண்பர்கள். நாங்க கிரிக்கெட் விளையாடுறப்ப இவன் பார்த்துட்டு இருப்பான்.

நான் என் படத்தில் இசையமைப்பாளராக இவரை அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன். இப்ப அதை விட நல்ல டீம்மில் அறிமுகமாகிறார்” என்றார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
‘அண்ணா யுனிவர்சட்டியில் ஃபைனல் இயர் படிக்கிற பையன் மாதிரி இருக்கார்’ என கிரேஸி மோகனை மேடைக்கு அழைக்கும் பொழுது சொன்னார் RJ பாலாஜி. “படத்துல சின்னரோல் பண்றேன். படத்துல வரும் அந்தப் பயங்கரமான அசைவ மேட்டருக்கு நான் தான் காரணம். ஆர்.பி.பிரசன்னா (இயக்குநர்) என் பையன் அர்ஜூனோட கிளாஸ் மேட். இதுல வொர்க் பண்ண அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாம் ஆவ்ரேஜாக பி.இ. படிச்சவங்க. நான் அந்தக் காலத்திலே பி.இ., எம்.இ. படிச்சிட்டு சினிமாக்கு வந்தவன். இவ்ளோ படிச்சுட்டு சினிமாவா எனக் கேட்டாங்க? ஆனா இப்ப சினிமா, படிக்கிறவங்க வர்ற இடமா மாறியதுல ரொம்ப சந்தோஷம்.
பிரசன்னா (கதாநாயகன்), நீ கூட என்ஜினியர்தான?” என கிரேஸி மோகன் கேட்டார்.
பிரசன்னா வெட்கத்துடன், “அரை என்ஜினியர் சார்” என்றார்.
“இந்தக் காலத்து பசங்க எல்லாம் ரொம்ப அறிவாளிங்களாக இருக்காங்க. எங்க வீட்டிற்கு எதிர்க்க ஒரு சின்னப் பையன் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தான். அவனை கூட்டிக்கிட்டு மயிலாப்பூர் கோயிலுக்கு என் எதிர்வீட்டுக்காரர் போனார். சாமிக்கு அபிஷேகம் பண்றதைப் பார்த்துட்டு, என்னப் பண்றாங்க எனக் கேட்டிருக்கான். “Saami is taking bath” என இவர் சொல்லியிருக்கார். பின்ன திரைய மூடிட்டு அலங்காரம் பண்ணியிருக்காங்க. அந்தப் பையன் என்னன்னு கேட்டதுக்கு சொல்லியிருக்கார். ‘குளிக்கிறதைப் பார்க்க வச்சுட்டு.. ஏன் டிரஸ் பண்றதை மட்டும் மறைக்கிறாங்க?’ என அவன் கேட்டிருக்கிறான். அந்த மாதிரி இந்தக் காலத்துப் பசங்கலாம் ரொம்ப அறிவாளிங்களா இருக்காங்க. இந்த யங் டீம் கண்டிப்பாக ஜெயிக்கும்” என்றார் கிரேஸி மோகன்.

“இந்த விழாவிற்கு நான் ஏன் வந்தேன்னா.. படத்தின் இயக்குநர் ஆர்.பி.பிரசன்னாவும், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்தும் என் மாணவர்கள். இவங்களுக்கு நான் இதுவரை நன்றி சொல்லலை. இங்க சொல்லிக்கிறேன். நான் 40 வருடங்கள் இங்க கொட்டிய குப்பைக்கு, ஒரே ஆதாரமாக இருப்பது இவர்கள் இருவரும் என்னைப் பற்றி எடுத்த 1 ஹவர் டாக்குமென்ட்ரி மட்டும்தான். நடிகர் பிரசன்னாவின் தம்பியும் என் மாணவன் தான். பிரசன்னாவை வச்சு ஒரு படம் பண்ணணும்னு நினைச்சேன். வாய்ப்பு அமையவில்லை” என்றார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திரா.
படத்தினைப் பற்றி பேசிய அனைவரும் தப்பாமல் சொன்ன விஷயம், படத்தில் ஒரு அசைவ மேட்டர் உள்ளது என்பதை தான். இதில் தைரியமாக நடிக்க வந்திருக்கும் பிரசன்னாவிற்கு வாழ்த்துகளையும் தப்பாமல் பகிர்ந்தனர். அதை பற்றி பாலு மகேந்திரா, “எல்லாம் ஒரு மேட்டர் இருக்கு எனப் பூடகமாகவே சொல்லிட்டுப் போயிட்டாங்க. நானும் அதை பற்றி சொல்லலை. ஆனா ஹின்ட் மட்டும் தர்றேன். அது எல்லாம் ஆண்களுக்கும் நடக்கும் ஒன்று தான்” எனக் குறிப்பிட்டார்.
